மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? பாகம் 2

யூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? என்றார்.

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்கிற கடந்த தியானத்தின் தொடர்ச்சியை நாம் இன்று நிறைவு செய்வோம். "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம்" என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:7ல் நிக்கொதேமுவிடம் கூறுகிறார். 3ஆம் வசனத்தில் இயேசுக்கிறிஸ்து நிக்கொதேமுவிடமும், நம்மிடமும் கூறுவது, நாம் நித்தியஜீவனை அடைவது மறுபடியும் பிறத்தலைப் பொறுத்ததாக இருக்கிறது என்பதே. "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத விஷயத்தையோ, முடிந்தால் செய்யலாம் என்பது போன்ற விஷயத்தையோ, மேம்பூச்சான காரியத்தையோ குறித்து நாம் இப்போது தியானித்துக் கொண்டிருக்கவில்லை. இறந்து போனவர்களின் சடலங்களை உயிரோடிருப்பது போலத் தோன்றச் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படும் அழகுசாதனம் போன்றதல்ல மறுபிறப்பு. ஆவிக்குரிய ஜீவனை புதிதாக சிருஷ்டிப்பதே மறுபிறப்பு; ஜீவன் இருப்பதைப் போன்ற மாயையான தோற்றத்தை உருவாக்குவதல்ல.

நாம் இந்த தியானத்தில், மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? என்கிற கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தோம். சென்ற தியானத்திலே இரண்டு விடையை அளித்தோம். 1) மறுபிறப்பில், புதிய பக்திமார்க்கம் அல்ல, புதிய ஜீவன் கிடைக்கிறது. 2) இயேசுவிலுள்ள தெய்வீகத்தை உணர்ந்து கொள்வது மாத்திரமல்லாமல், உங்களுக்குள்ளும் தெய்வீகம் ஏற்படுவதை உணர்ந்து கொள்வது மறுபிறப்பில் நிகழ்கிறது.

பரிசுத்த ஆவியின் மூலமாக புதியஜீவன்

நிக்கொதேமு ஒரு பரிசேயன். அவரிடம் மிகுந்த பக்தி இருந்தது. ஆனால் அவரிடம் ஆவிக்குரிய ஜீவன் இல்லை. கடவுளின் தெய்வீகத்தன்மை, இயேசுக்கிறிஸ்துவில் கிரியை நடப்பிப்பதை அவர் பார்த்தார். ஆனால், கடவுளின் தெய்வீகத்தன்மை தன்னிடத்தில் கிரியை நடப்பிக்கும் அனுபவத்தை அவர் பெறவில்லை. ஆகவே, நாம் சென்ற தியானத்தில் பார்த்த இரண்டு கருத்துக்களின்படி, இயேசு, நிக்கொதேமுவின் தேவை இன்னதென்பதை கூறுகிறார்: பரிசுத்தஆவியின் மூலம் தெய்வீகமாக அளிக்கப்படுகிற புதிய ஜீவன் நிக்கொதேமுவுக்கு தேவையாயிருக்கிறது. புதியஜீவனை ஆவிக்குரியதாக்குவதும், அதை தெய்வீகமாக்குவதும் எது? பரிசுத்தஆவியாகிய கடவுளின் கிரியையே அதை நடப்பிக்கிறது. புதிய ஜீவன் என்பது, நமது இருதயமும், மூளையும் அடங்கிய இயற்கையான ஜீவனுக்கு அப்பாற்பட்டது.

"மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்" என்று இயேசுக்கிறிஸ்து 6ஆம் வசனத்திலே குறிப்பிடுகிறார். மாம்சத்திற்கும் ஒருவிதமான ஜீவன் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் உயிருள்ள மாம்சம். ஆனால் எல்லா மனிதர்களும் ஆவிக்குரிய ஜீவன் உள்ளவர்கள் அல்ல. ஆவிக்குரியவர்களாவதற்கும், ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒருவன் "ஆவியினால் பிறக்க வேண்டும்" என்று இயேசுக்கிறிஸ்து சொல்லுகிறார். மாம்சமானது ஒரு விதமான ஜீவனை ஏற்படுத்துகிறது. ஆவியானது வேறு விதமான ஜீவனை உருவாக்குகிறது. இந்த இரண்டாவது வகையான ஜீவனை நாம் அடைந்திருக்காவிட்டால், நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண முடியாது.

ஆவியினால், கிறிஸ்துவுக்குள்ளாக

சென்ற தியானத்தை நாம் முடிக்குந்தறுவாயில் இரண்டு முக்கியமான காரியங்களை கவனித்தோம்: இயேசுவோடு மறுபிறப்புக்குள்ள சம்பந்தம், விசுவாசத்தோடு மறுபிறப்புக்குள்ள சம்பந்தம். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்"(யோவா 14:6) என்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். மேலும், "தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்"(1யோவா 5:11-12) என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். ஒருபுறம் பார்த்தால் நமக்குத் தேவைப்படுகிற புதிய ஜீவன் "குமாரனில்" இருக்கிறது - இயேசுவே ஜீவன். உங்களில் அவர் இருந்தால், உங்களுக்கு புதிய ஜீவன், நித்திய ஜீவன் உண்டு. இன்னொருபுறம் யோவா 6:63ல் இயேசு, "ஆவியே உயிர்ப்பிக்கிறது" என்று கூறுகிறார். "ஒருவன் . . ஆவியினால் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான்"(யோவா 3:5) என்றும் கூறுகிறார்.

நமது ஜீவனாகிய, தேவனுடைய குமாரனுடன் நாம் இணைக்கப்படும் போது உயிர் பெறுகிறோம். அந்த ஜீவனை பரிசுத்தஆவியின் செயலினால் அடைகிறோம். முடிவாக நாம் கூறுவது, உயிர்ப்பித்தலில் பரிசுத்தஆவியின் செயல்பாடு என்னவென்றால், கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, அதன் மூலமாக நமக்கு புதிய ஜீவனை அளிப்பதே. இதை ஜான் கால்வின் கூறும் விதத்தைப் பாருங்கள்: "பரிசுத்தஆவியைக் கொண்டு இயேசுக்கிறிஸ்து நம்மைத் தம்மோடு உறுதியாக இணைத்துக் கொள்கிறார்"(Institutes, III, 1, 1)

விசுவாசத்தின் மூலமாக இயேசுவோடு இணைக்கப்படுதல்

விசுவாசத்தோடு உள்ள சம்பந்தத்தை நாம் இவ்விதமாகக் குறிப்பிடுவோம்: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவன் அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது"(யோவா 20:31). "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்"(1யோவா 5:4). தேவனால் பிறத்தல் - வெற்றிவாசலின் திறவுகோல். விசுவாசம் - வெற்றிவாசலின் திறவுகோல். ஏனென்றால், தேவனால் பிறந்திருப்பதை நாம் உணருகின்ற வழி விசுவாசத்தின் மூலமாகவே. எனவே, சென்ற தியான செய்தியின் சுருக்கத்தை நாம் இவ்விதமாகக் குறிப்பிடலாம்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர், தெய்வீகமாக நமக்கு புதிய ஜீவனை அளிக்கிறார். இந்த மறுபிறப்பை, விசுவாசத்தின் மூலமாக நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு இணைப்பதின் மூலமாக நடப்பிக்கிறார்.

மறுபிறப்பு: ஒரு புதிய சிருஷ்டிப்பு, பழையதை புதுப்பித்தல் அல்ல

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதை விளக்குவதில் மூன்றாவது வகைக்கு நாம் வந்திருக்கிறோம். மறுபிறப்பு, உங்களுடைய பழைய மனித சுபாவத்தையே மேம்படுத்துவதில்லை. உங்களுக்குள் ஒரு புதிதான மனித சுபாவத்தை அது உருவாக்குகிறது - அந்த புதிய சுபாவம் உங்களுடையதுதான். அது மன்னிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த சுபாவம் மெய்யாலுமே புதியது, அது உங்களுக்குள் வசிக்கின்ற கடவுளின் ஆவியானவரால் உருவாக்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு வருவதற்கு நான் மேற்கொண்ட பயணத்தின் சுருக்கத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன். யோவா 3:5ல், இயேசுக்கிறிஸ்து, "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்று நிக்கொதேமுவிடம் கூறினார். "ஜலத்தினாலும் ஆவியினாலும்" என்கிற இந்த இரண்டு வார்த்தைகளை அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார்? ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு இணைப்பதைப் போன்று, இது தண்ணீரில் முழுகும் ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக சில பிரிவினர் நம்புகிறார்கள். உதாரணமாக ஒரு இணையதளம் இவ்வாறாகத் தெரிவிக்கிறது:

கிறிஸ்தவத்திற்கே அடிப்படையாக இருப்பது பரிசுத்த ஞானஸ்நானம். அது ஆவியில் ஜீவனை அடைவதற்கு வழியாயிருக்கிறது. மற்ற பரிசுத்த நியமங்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாசலாக இருக்கிறது. ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். கடவுளுடைய புத்திரர்களாக மறுபிறப்பு அடைகிறோம். கிறிஸ்துவின் அங்கங்களாக ஆகிறோம். சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறோம். சபையின் ஊழியங்களில் பங்கெடுக்கிறோம்: "தண்ணீரின் மூலமாக உயிர்ப்பிக்கும் திருநியமமாக ஞானஸ்நானம் வேதாகமத்தில் காணப்படுகிறது".

இலட்சக்கணக்கான பேர்கள், தங்கள் மறுபிறப்புக்குக் காரணம் ஞானஸ்நானமே என்ற போதனையைப் பெற்றிருக்கிறார்கள். இது உண்மையாக இல்லாவிட்டால், உலகஅளவிலான பெரும் சோகசம்பவம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறவேண்டும். இதை உண்மையென நான் நம்பவில்லை. அப்படியானால் இயேசு என்னதான் சொல்லுகிறார்?

யோவா 3ல் காணப்படும் "ஜலம்" ஏன் ஞானஸ்நானத்தைக் குறிக்காது?

இந்த இடத்தில் கூறப்பட்டுள்ள தண்ணீர் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தை ஏன் குறிப்பதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பார்த்த பின்னால், இந்த வசனம் எதைக் குறிப்பிடுகிறது என்பதையும் பார்ப்போம்.

1) இந்த அதிகாரத்தில் வேறு எங்குமே ஞானஸ்நானத்தைக் குறித்து சொல்லப்படவில்லை

இந்த வசனம் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறிப்பதாக இருந்தாலோ அல்லது சிலர் கூறுவது போல இது மறுபிறப்புக்கு மிகவும் அவசியமானதாக இருந்தாலோ, நித்திய ஜீவனை எப்படி அடைவது என்று இயேசுக்கிறிஸ்து இந்த அதிகாரத்தில் கூறும் மற்ற காரியங்களுடன் சேர்த்து சொல்லப்படாதது ஏன்? வச-15:"தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவனை அடையும்படிக்கு". வச-16:குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு". வச-18:"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்". ஞானஸ்நானமானது அவ்வளவு அத்தியாவசியமானதாக இருக்குமானால், அதை இங்கே விசுவாசத்தோடு சேர்த்து குறிப்பிடாதது ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது!

2) காற்று உதாரணத்தோடு ஞானஸ்நானம் பொருந்தி வரவில்லை

மறுபிறப்பு, தண்ணீர்ஞானஸ்நானத்தோடு உறுதியாக இணைக்கப்பட்-டிருந்ததானால், 8ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ள காற்று உதாரணம் சரியானதாக இராது. "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும் இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்" என்று இயேசு சொல்லுகிறார். கடவுள், காற்றைப் போலவே தமது இஷ்டத்தின் பிரகாரம் மறுபிறப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்பதை இங்கு சொல்வது போல் இருக்கிறது ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையின் மீது தண்ணீர் தெளிக்கப்படும்போது மறுபிறப்பு நிகழ்கிறது என்று சொல்வோமானால் அது மேற்கூறின கூற்று சரியல்ல என்று தெரிவிக்கிறதே. அப்படியானால் ஞானஸ்நானமாகிய நியமம், காற்றை கட்டுப்படுத்தி வைத்திருப்பது போல ஆகிவிடுமே.

3) இயேசுக்கிறிஸ்து, நிக்கொதேமுவைக் கண்டித்ததில் ஞானஸ்நானம் பொருந்தவில்லை

இயேசுக்கிறிஸ்து, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறிப்பிட்டிருந்தாரானால், அவர் பரிசேயனாகிய நிக்கொதேமுவிடம், 10ஆம் வசனத்தில், "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?" என்று கேட்டது விசித்திரமாக இருந்திருக்கும். பழையஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் ஏதோவொரு காரியத்தைக் குறித்து இயேசு இப்படி கூறியிருந்தாரானால் அது பொருத்தமாயிருக்கும். இயேசுவின் வாழ்க்கை, மரணம் ஆகியவைகளின் கருத்தை உள்ளடக்கியதாக பின்னால் ஏற்படப்போகிறதான ஞானஸ்நானத்தைக் குறித்து இஸ்ரவேலில் போதகனாயிருக்கிறவனுக்கு விளங்கவில்லை என அவர் நிக்கொதேமுவைக் கடிந்து கொண்டார் என்பது பொருத்தமான காரணமாயில்லை.

4) புதியஉடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களோடு தண்ணீரும் ஆவியும் இணைந்துள்ளது

10ஆம் வசனத்தின் கருத்து நம்மை பழையஏற்பாட்டின் பின்னணிக்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாம், தண்ணீரும் ஆவியும் புதியஏற்பாட்டின் வாக்குத்தத்தங்களோடு மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதிலும் முக்கியமாக எசேக்கியேல் 36ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். அதை நாம் படிப்போம். இந்த வசனங்கள்தான் நாம் இனி இத்தியானத்தில் படிக்கப் போகிறவைகளுக்கு ஆதாரமாக இருக்கப் போகிறது.

எசேக்கியேல் 36ல் தண்ணீரும் ஆவியும்

பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து தேவன் தமது ஜனங்களைத் திரும்பக் கூட்டி சேர்க்கும்போது, அவர்களுக்கு என்ன செய்வார் என்பதை எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். அதில் சொல்லப்பட்டிருப்பவை மிகுந்த பொருளாழம் கொண்டவை. அதன் விளைவு இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் அல்ல. ஏனென்றால், தம்மை நம்புகிறவர்களுக்காக, தமது இரத்தத்தின் மூலமாக புதியஉடன்படிக்கையை ஸ்தாபிக்கப் போவதைக் குறித்து இயேசுக்கிறிஸ்து தெரிவிக்கிறார்(லூக் 22:20). இது, எரே 31:31ல் இருப்பதைப் போன்ற புதியஏற்பாட்டு வாக்குத்தத்தங்களுள் ஒன்று. இதை நாம் படித்துப் பார்ப்போம். எசேக் 36:24-28:

நான் உங்களை புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து. உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களை சுத்தமாக்குவேன். நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும், அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன். உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்.

இந்த பகுதிதான், "ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்" என்று இயேசுக்கிறிஸ்து கூறியதற்கு காரணமாயிருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். "நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்"(வச28) என்று அவர் யாரிடம் கூறுகிறார்? 25ஆம் வசனத்தில், "நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்" என்று யாரிடம் கூறுகிறாரோ அவர்களிடம்தான் சொல்கிறார். மேலும் 26ஆம் வசனத்தில், "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு. . உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து" என்று சொல்பவர்களிடம்தான் அதையுங்கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால், பழையவைகள் சுத்தமாக்கப்பட்டு, புதியவை சிருஷ்டிக்கப்பட்டு, புதுநிலையை அடைந்தவர்களே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்.

மறுபிறப்பின்போது, நாம் புதுப்பிக்கப்படுதலின் இரண்டு அம்சங்களை "தண்ணீரும் ஆவியும்" குறிப்பதாக நான் முடிவாக கூறுகிறேன். அவை இரண்டும் முக்கியமானவை என்பதற்குக் காரணம்: புதிய ஆவியோ அல்லது புதிய இருதயமோ நமக்குக் கொடுக்கப்படுகிறது என்று நாம் கூறும்போது, நாம் மனிதனாக இல்லாமல் வேறுவிதமாக மாறிவிடுகிறோம் என்கிற அர்த்தமல்ல - எப்பொழுதும் இருக்கிற வண்ணமாக நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். நான் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக, ஜான் பைப்பர் என்கிற தனிமனிதனாகத்தான் இருந்தேன். நான் மறுபடியும் பிறந்த பிறகும் ஜான் பைப்பர் என்கிற தனிமனிதனாகவே இருக்கிறேன். இதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அதனால்தான் அது சுத்தப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. பழைய மனிதனாகிய ஜான் பைப்பரை முற்றிலுமாக அழித்துவிட்டால், மன்னிக்கப்படுதல், சுத்தப்படுத்தப்படுதல் ஆகியவைகளுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். மன்னிப்பதற்கோ, சுத்தப்படுத்துவதற்கோ உரிய எந்த கடந்த காலத்து காரியமும் அங்கு மீதியாக இருக்காது.

நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டிருப்பதாக(ரோம 6:6) வேதம் கூறுவதை நாம் அறிவோம். நாம் கிறிஸ்துவோடே மரித்தோம் (கொலோ 3:3) என்றும், "மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள்"(ரோம 6:11) என்றும், "பழைய மனுஷனைக் களைந்து போடுங்கள்"(எபே 4:22) என்றும் வேதாகமம் கூறுகிறது. ஆனால் இவை யாவும் நமது மனிதத் தன்மையை இனி வாழ்நாள் முழுவதும் காணவே முடியாது என்று கூறவில்லை. நீக்கிப் போட வேண்டியதான பழைய சுபாவமும், பழைய குணங்களும், கொள்கைகளும், இயற்கை விருப்பங்களும் இருக்கும் என்பதே அதன் அர்த்தம்.

உங்களுடைய புதிய இருதயத்தையும், புதிய ஆவியையும், புதிய சுபாவத்தையும் குறித்து நீங்கள் நினைக்க வேண்டிய விதம் என்னவென்றால், நீங்கள் இன்னும் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள் - ஆகவே மன்னிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இதுதான் தண்ணீரைக் குறித்ததான கருத்தாயிருக்கிறது. என்னுடைய குற்றமானது கழுவப்பட வேண்டும். தண்ணீரினால் கழுவுதல் அதை படரூபமாகக் காட்டுகிறது. "அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கி சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்"(எரே 33:8). தொடர்ந்து மனிதனாகவே இருக்கிற நாம் மன்னிக்கப்பட வேண்டியவர்களாகவும், அக்கிரமங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

புதிதாக வேண்டியதின் அவசியம்

ஆனால் மன்னிப்பும் சுத்திகரித்தலும் மாத்திரம் போதாது. நான் புதிதாக வேண்டும். நான் மறுரூபமடைய வேண்டும். எனக்கு ஜீவன் வேண்டும். பார்ப்பதிலும், சிந்திப்பதிலும், மதிப்பிடுவதிலும் எனக்கு ஒரு புதிய வழி ஏற்பட வேண்டும். ஆகவேதான் எசேக்கியேல் 26, 27ஆம் வசனங்களில் புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் குறித்துப் பேசுகிறார்: "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்".

மேற்கூறின வசனங்களை நான் விளங்கிக் கொண்டிருக்கும் விதமாவது: கல்லான இருதயம் என்பது, ஆவிக்குரிய உண்மைகளை புரிந்து கொள்ள முடியாததாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்த இருதயமாகும். அது, மறுபிறப்புக்கு முன்பாக இருதயம் இருந்த நிலை. மற்ற காரியங்களுக்கெல்லாம் அந்த இருதயம் உணர்வுள்ளதாகவும், உற்சாகமுள்ளதாகவும் காணப்படும். ஆவிக்குரிய உண்மைகளுக்கும், இயேசுவின் அழகிற்கும், கடவுளின் மகிமைக்கும், பரிசுத்த பாதைக்கும் அதே இருதயம் கல்லாக இருக்கும். தேவனுடைய இராஜ்ஜியத்தை நாம் தரிசிக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட இருதயம்தான் மாற்றப்பட வேண்டும். ஆகவே மறுபிறப்பில், தேவன், அந்த கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு, சதையான இருதயத்தை திரும்பவும் வைக்கிறார். சதையான என்கிற வார்த்தை, யோவா 3:6ல் கூறுவதைப் போல வெறும் "மனுஷீகத்தை" குறிப்பிடவில்லை. உணர்ச்சிகளற்ற கல்லைப் போல இராமல், மென்மையாகவும், உயிருள்ளதாகவும், பாதிப்படைவதாகவும், உணர்வுள்ளதாகவும் மாறியிருப்பதைக் குறிக்கிறது. கிறிஸ்துவைக் குறித்த காரியங்களில், மரித்தும், கல்லாகவும், அலுப்போடும் இருந்த நமது இருதயமானது மறுபிறப்பின் காரணமாக இயேசுவின் ஆவிக்குரிய மதிப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் மாற்றப்படுகிறது.

"உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும். . . பண்ணுவேன்" என்று எசேக்கியேல் 26, 27 வசனங்களில் கூறும்போது, மறுபிறப்பில் ஒரு உயிருள்ள, தெய்வீகமான, ஆவிக்குரிய ஜீவனை தேவன் நமக்குள் ஏற்படுத்துவதாக எசேக்கியேல் நினைக்கிறார். அந்த புதிய ஜீவன் அல்லது புதிய ஆவி, நமது புதிய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரே கிரியை செய்வதால் ஏற்படுவதாக எசேக்கியேல் அர்த்தப்படுத்துகிறார்.

இதை நான் ஒரு படமாக என் மனக்கண்களில் கொண்டு வந்து பார்க்கிறேன். இந்த புதிய, மென்மையான, உயிருள்ள, உணர்வுள்ள இருதயமானது மிருதுவான களிமண்ணைப் போலிருக்கிறது. பரிசுத்தஆவியானவர் தன்னுடைய இயல்புகளை அதில் பதித்து, அதற்கு ஆவிக்குரிய, நற்குணங்களைக் கொடுத்து அதை தமது இஷ்டத்தின்படியான வடிவுக்குக் கொண்டு வருகிறார். அவரே நமக்குள் வாசம் செய்வதால், நமது இருதயமும் மனதும் அவருடைய குணங்களையும் ஆவியையும் அடைகிறது. (எபே 4:23)

அவரை உங்கள் பொக்கிஷமாகக் கொள்ளுங்கள்

கடந்த இரண்டு தியானங்களிலும் நாம் என்ன படித்தோம் என்பதை சுருக்கமாக கவனத்தில் கொண்டு வரலாம். மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர், விசுவாசத்தின் மூலமாக நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்து நமக்கு புதிய ஆவிக்குரிய ஜீவனை இயற்கைக்கு அப்பாற்பட்டவிதமாக அளிக்கிறார். வேறுவிதமாக சொல்வோமானால், ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவில் இணைக்கும்போது அங்கே சுத்தப்படுத்துதல் நிகழ்கிறது. அவர் நமது உணர்வற்ற கடினமான இருதயத்தை எடுத்துவிட்டு, இயேசுவையே சகலத்தைக் காட்டிலும் மேலான பொக்கிஷமாக நினைக்கும்படியான மென்மையான இருதயத்தைத் தருகிறார். அதுமட்டுமில்லாமல், அந்த இருதயத்தில் பரிசுத்தஆவியானவரின் பிரசன்னம் இருப்பதால், அது மறுரூபமாக்கப்பட்டு, கடவுளுடைய சித்தத்தை மாத்திரமே செய்யும் வாஞ்சையுடையதாக மாற்றுகிறார்(எசே 36:27).

இவை யாவையும் நீங்கள் விசுவாசத்தினால் அனுபவிக்க முடியும். ஆகவே, இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலும், பரிசுத்தஆவியானவரின் வல்லமையினாலேயும் உங்களை அழைக்கிறேன். பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், உங்கள் ஜீவனை மாற்றவும்கூடிய மாபெரும் பொக்கிஷமாகிய அவரை ஏற்றுக்கொள்ளும்படியாக நான் உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.