தேவனால் பிறந்தவனெவனும் உலகை ஜெயிக்கிறான்

யோவான் முதலாம் நிருபத்தின் விரிவான காட்சி

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

மறுபிறப்பைக் குறித்த நமது தொடர்தியானத்தின் கடைசிப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில வாரங்கள் நமது கவனத்தை செலுத்துவதற்கு மீதியாக இருப்பது மறுபிறப்பின் விளைவுகள் அல்லது அடையாளங்கள் எவை என்பதே: கடவுள் உங்களை மறுபடியும் பிறப்பித்திருக்கிறார் என்பதற்கு உங்களுடைய வாழ்வில் காணக்கூடிய அடையாளங்கள் யாவை? சுவிசேஷத்தை அறிவித்தலோடு இவை எப்படி சம்பந்தப்படுகின்றது என்பதையும் இதோடு சேர்த்து நாம் பார்க்கலாம். ஆவிக்குரிய மரணமடைந்திருக்கும் பாவிகளின் இருதயத்தை உயிர்ப்பிப்பது கடவுளுடைய தீர்மானத்தின்படியாகத்தான் நடைபெறுகிறதென்றால், பாவிகளை நேசிக்கிறவர்களும், அவர்களும் இரட்சிப்படைய வேண்டுமென விரும்புகிறவர்களுமானவர்களின் பங்குதான் என்ன? இவைகளைத்தான் நாம் கடவுளுக்கு சித்தமானால் வரும் வாரங்களில் காணவிருக்கிறோம்.

மறுபிறப்பின் விளைவுகளைப் பற்றி காண்பதற்கு, இதைக் குறித்த காரியங்களையே கொண்டிருக்கிற யோவானின் முதலாம் நிருபத்திற்கு உங்கள் வேதத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். The Tests of Life by Robert Law.1 என்கிற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 1யோவான் விளக்கவுரையை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அது ஒரு நல்ல தலைப்பு. நம்மில் ஆவிக்குரிய ஜீவன் இருக்கிறதா, நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோமா என்பதை பரிசோதித்து அறிந்து கொள்வதற்கு சில நிபந்தனைகளை உள்ளடக்கியதாக யோவான் இந்த நிருபத்தை சபைக்கு எழுதியிருக்கிறார் என்கிற அர்த்தங் கொள்கிற தலைப்பு அது.

1 யோவானில் மறுபிறப்பின் வாழ்வைக் குறித்த பரிசோதனைகள்

நான் இன்னும் சில வாரங்களுக்கு இந்த நிருபத்திலிருந்து அநேகம் செய்திகளைப் பிரசங்கிக்கவிருப்பதால் நீங்களும் என்னோடுகூட சேர்ந்து இந்த நிருபத்தை தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தால் அது மிகுந்த பலனைத் தருவதாயிருக்கும். என்னுடைய வேதத்தில் 1யோவான் நான்கு பக்கங்களுக்குத்தான் இருக்கிறது. இந்த அற்புதமான நிருபத்தை நீங்களும் என்னோடுகூட சேர்ந்து ஆழ்ந்து படித்தீர்களானால், அதை இந்த செய்திகளோடும்கூட சேர்த்து, கடவுள், உங்கள் வாழ்க்கையில் விசுவாசத்திலும் அன்பிலும் பெருகும்படியான கிரியை நடப்பிப்பதற்கு உபயோகிப்பார் என நம்புகிறேன்.

இந்த விஷயத்தில் உங்களை உற்சாகப்படுத்தும்படியாக, நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதை அறிந்து கொள்வதற்காகவே 1யோவான் நிருபம் எழுதப்பட்டிருக்கிறது என நான் கூறுவதற்குக் காரணம் என்னவென்பதை பொதுவாகக் கூறுகிறேன். இன்றைய தியானம் ஏறக்குறைய எல்லாவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிற பொதுவான செய்தி. அதன் பின்னர் 1 யோவா 5:3-4 வசனபகுதியை கடைசியில் சுருக்கமாகப் பார்க்கலாம். மொத்தத்தில் இந்த புத்தகமானது என்னில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் விசேஷமானது. உங்களுக்கும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

யோவான் ஏன் இந்த நிருபத்தை எழுதினார்?

முதலாவதாக, இதை தான் ஏன் எழுதினேன் என்பதற்கு யோவான் என்ன சொல்லுகிறார்? இதை எழுதியதற்குரிய காரணங்களை அவர் பலவிதங்களில் கொடுக்கிறார். அவைகள் கொடுக்கப்பட்டிருக்கிற வரிசைப்பிரகாரமாகவே அவைகளை எடுத்துக் கொள்வோம். என்னோடு சேர்ந்து பாருங்கள்.

1யோவா 1:4: "உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்". அவர்களுடைய உறுதியான சந்தோஷமே அவருடைய சந்தோஷமாகும். அதை அவர் விரும்புகிறார். அந்தவிதமான சந்தோஷத்தை விரும்புவது நல்லதே.

1யோவா 2:1: "என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுக்கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்". பாவத்தை மேற்கொள்வதற்கு இந்த நிருபமானது அவர்களுக்கு புதிய பெலனைத் தரும் என்று அவர் நம்புகிறார். தோல்விகள் ஏற்படுவது நித்தியவாழ்க்கையையே அழித்துவிடாது என்று அவர்களுக்கு அவர் உறுதிப்படுத்துவது, பாவத்தை அவர்கள் மேற்கொள்வதற்கு உதவுகின்ற அவரது அணுகுமுறையின் ஒரு பகுதியாயிருக்கிறது.

1யோவா 2:12-13: "பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன்". வேறுவிதமாக சொல்வோமானால், தாம் யாருக்கு இந்த நிருபத்தை எழுதுகிறாரோ அவர்கள் உண்மையான விசுவாசிகள் என்கிற நம்பிக்கையினால் நிறைந்தவராக அவர் எழுதுகிறார். அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள். அவர்கள் கடவுளை அறிந்தவர்கள். அவர்கள் பொல்லாங்கனை ஜெயித்தவர்கள்.

1 யோவா 2:21: "சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்". மீண்டும் அதேதான்: கிறிஸ்துவ வாழ்க்கையை ஆரம்பிக்கும்படியாக எழுதப்பட்டதல்ல என்னுடைய நிருபம். நீங்கள் அதிலிருப்பதை உறுதிப்படுத்தும்படியாக எழுதப்பட்டதே.

1 யோவா 2:26: "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்". கள்ள உபதேசங்களைக் குறித்து அவர் கவலையுள்ளவராயிருக்கிறார். அவர்களை வழிவிலகிப் போகப் பண்ணுபவர்களிடமிருந்து பாதுகாக்கும்படியாகவே இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கிறது. இன்னொரு விதத்தில் பார்த்தோமானால், நாம் மறுபடியும் பிறந்தவர்களாக இருப்பதால் நமக்கு எச்சரிப்புகளே தேவையில்லை என்று அர்த்தமல்ல.

1 யோவா 5:13: "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் . . . தேவனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்". இந்த நிருபத்திலேயே இவ்வசனம்தான் பிரதானமாயிருக்கிறது. இவைகளிலுள்ள யாவும் ஜீவனை பரிசோதித்துக் கொள்ளும்படியாக அமைக்கப்பட்டுள்ளது : "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியும்படி . . . உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்". அதாவது, மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக நீ மறுபடியும் பிறந்திருக்கிறாய் என்பதை நீ அறிந்து கொள்வதற்காக என்கிறார்.

ஆகவே 1 யோவான் எழுதப்பட்டதற்கான காரணத்தை இவ்வாறாகத் தொகுத்துக் கூறலாம்: நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருப்பதால் இதை உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும் உங்களை வஞ்சிக்கிறவர்கள் உங்களிடையே இருக்கிறார்கள். பாவத்தில் சிக்குண்டு போய்விடாதபடிக்கு, நீங்கள் நித்தியஜீவனைப் பெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்து, உயிர்ப்பிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளைப் போல அசையாத நம்பிக்கையை உடையவர்களாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த நிருபம் அவ்விளைவை உங்களில் ஏற்படுத்துமானால் என்னுடைய சந்தோஷம் பூரணமாகும். மறுபடியும் பிறந்திருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்கிற இருதய வாஞ்சையே அவர் இந்நிருபத்தை எழுதியதற்கு காரணமாயிருந்திருக்கிறது - அதாவது அவர்களுக்கு இப்போது ஒரு புதிய ஆவிக்குரிய வாழ்க்கை, நித்தியவாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை உணர்த்துவதே அவர் நோக்கமாயிருக்கிறது.

மறுபிறப்பை உறுதிப்படுத்தும் பதினொரு தெளிவான அடையாளங்கள்

1 யோவா 5:3-4 வசனங்களில் நாம் கவனம் செலுத்துவதற்கு முன்னால் இன்னொரு பொதுவான விஷயத்தையும் கவனிப்போம். இந்த புத்தகத்தின் முழுமையும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென கடவுள் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன். "வாழ்வை பரிசோதித்தல்" அல்லது மறுபிறப்பின் அடையாளங்களும் அதன் விளைவுகளும் என்கிற விஷயம்தான் இங்கு பிரதானமானதாக இருக்கிறது. நாம் மறுபடியும் பிறந்ததற்கு இங்கு அவர் பதினொரு அடையாளங்களைக் குறிப்பிடுகிறார். இவை யாவற்றையும் நாம் விசுவாசம் அன்பு என்கிற காரியங்களுக்குள் அடக்கி விடலாம். ஆனால் இப்போதைக்கு நாம் அவர் சொல்ல விரும்புகிற விதத்திலேயே எடுத்துக் கொள்வோம். அந்த பதினொரு அடையாளங்களாவன:

1. தேவனால் பிறந்தவர்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.

1 யோவா 2:3-4: "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். அவனுக்குள் சத்தியமில்லை".

1 யோவா 3:24: "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்".

2. தேவனால் பிறந்தவர்கள் கிறிஸ்து நடந்தபடியே நடப்பார்கள்.

1 யோவா 2:5-6: "நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்: அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்".

3. தேவனால் பிறந்தவர்கள் பிறரைப் பகைக்காமல் அன்பு செலுத்துவார்கள்.

1 யோவா 2:9: "ஒளியிலே இருக்கிறேனென்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்".

1 யோவா 3:14: "நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்".

1 யோவா 4:7-8: "பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்".

1 யோவா 4:20: "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்".

4. தேவனால் பிறந்தவர்கள் உலகத்தில் அன்புகூர மாட்டார்கள்.

1 யோவா 2:15: "ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை".

5. தேவனால் பிறந்தவர்கள் குமாரனை அறிக்கையிட்டு அவரை ஏற்றுக் கொள்கிறார்கள்.

1 யோவா 2:23: "குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்".

1 யோவா 4:15: "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்".

1 யோவா 5:12: "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்".

6. தேவனால் பிறந்தவர்கள் நீதியை செய்வார்கள்.

1 யோவா 2:29: "அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்".

7. தேவனால் பிறந்தவர்கள் பாவம் செய்வதை வழக்கமாய் கொண்டிருக்க மாட்டார்கள்.

1 யோவா 3:6: "அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை".

1 யோவா 3:9-10: "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல".

1 யோவா 5:18: "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்".

8. தேவனால் பிறந்தவர்கள் தேவனுடைய ஆவியை உடையவர்களாயிருக்கிறார்கள்.

1 யோவா 3:24: "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்".

1 யோவா 4:13: "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்".

9. தேவனால் பிறந்தவர்கள் அப்போஸ்தல உபதேசத்திற்கு தாழ்மையோடு செவிகொடுப்பார்கள்.

1 யோவா 4:6: "நாங்கள் தேவனால் உண்டானவர்கள். தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை. இதினால் சத்தியஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்".

10. தேவனால் பிறந்தவர்கள் இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறார்கள்.

1 யோவா 5:1: "இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்".

11. தேவனால் பிறந்தவர்கள் உலகத்தை ஜெயிக்கிறார்கள்.

1 யோவா 5:4: "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

இரண்டு தவறான எண்ணங்கள்

"வாழ்க்கையைக் குறித்த பரிசோதனை"யின் விளைவாக ஏற்படக்கூடிய தவறான அபிப்ராயங்களில் ஒன்று, யோவான் கீழ்க்காணும்விதத்தில் கூறுவதாக எண்ணி மிதமிஞ்சிய மகிழ்ச்சியடைவது: "நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், நீங்கள் பூரணராகிவிட்டீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டதால் இனிமேல் பாவம் செய்யவே மாட்டீர்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் தோல்வியே இல்லை. இனிமேல் ஜெயம் மாத்திரம்தான் உண்டு".

இந்த பரிசோதனைகளால் ஏற்படுகிற இன்னொரு தவறான எண்ணம், நாம் இரட்சிப்பை இழந்துவிடக் கூடுமோ என்று நினைக்க வைத்துக் கொண்டேயிருப்பது. அதாவது நாம் சிலகாலம் மறுபிறப்படைந்த நிலையில் வாழ்ந்து வந்து, மேற்கூறிய பரிசோதனைகளில் தவறும்போது, மறுபிறப்பில் பெற்றுக் கொண்ட ஆவிக்குரிய ஜீவனை இழந்து மரித்துவிடுவோம் என நினைப்பது.

இரண்டு முக்கியமான விளக்கங்கள்

தான் சொல்லிக்கொண்டு வருவதை இவ்விதமான இரு தவறான வழிகளிலும் எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதை யோவான் நன்றாக அறிவார். அப்படி நினைக்க வகையில்லை என்பதை மற்ற புதியஏற்பாட்டின் ஆசிரியர் போலவே இவரும் தெளிவாக எழுதியுள்ளார்: கிறிஸ்தவர்கள் பாவமற்றவர்கள் அல்ல, மறுபிறப்படைந்த மக்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவனை இழந்து போவதில்லை.

1 யோவா 1:8-10 வரையுள்ள வசனங்களில் இவ்வாறாகக் கூறுகிறார், "நமக்குப் பாவமில்லை என்போமானால் (நிகழ்கால இலக்கணம்), நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் (நிகழ்காலம்), பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது". "ஒளியிலே நடப்பதென்பது" (1:7), குற்றங்குறையேயில்லாமல் நடப்பதல்ல என்பதை யோவான் இங்கு சிரமப்பட்டு விவரிக்க முயற்சிக்கிறார். அதற்கு என்ன அர்த்தமென்றால், நீங்கள் தடுமாறும்போது, கிறிஸ்துவின் ஒளியானது உங்களை பாவத்தைப் பார்க்கச் செய்து, அதை அறுவெறுக்கப்பண்ணி, அறிக்கையிட்டு, கிறிஸ்துவோடு சேர்ந்து முன்னேறிச் செல்ல வைக்கும்.

"வாழ்வை பரிசோதித்தல்" என்பதை வைத்து, மறுபிறப்பைப் பெற்றிருக்கும் நாம் சிலகாலம் கழித்து அதை இழந்து போகவும் கூடும் என்கிற முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதால் யோவான் இதைக் குறித்து விளக்கப்படுத்துவதில் மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார். ஒரு மனிதன் சபையை விட்டு விலகிப் போவதால் என்ன நிகழ்கிறது என்பதை மற்றொருவிதத்தில் தெளிவுபடுத்துகிற வசனங்களுள் 1 யோவா 2:19ம் ஒன்றாகும். "அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள். ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே. எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்".

தவறுதலாக விளங்கிக் கொள்வதிலிருந்து நம்மைப் பாதுகாக்க யோவான் மூன்று காரியங்களை சொல்லுவதை கவனியுங்கள்: 1) மறுபிறப்படைந்தவர்கள் போல காணப்பட்டு விசுவாசத்தைவிட்டு விலகிப் போனவர்கள் ஒருபோதும் மறுபிறப்படைந்தவர்கள் அல்ல - அவர்கள் நம்முடையவர்கள் அல்ல. "அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள். ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை". வேறுவிதமாக சொல்வதானால், அவர்கள் மறுபிறப்பை இழந்து போகவில்லை, அவர்கள் மறுபிறப்பை அடையவேயில்லை எனபதுதான் இதற்கு விளக்கம். 2) உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள் ("நம்முடையவர்கள்") கடைசிவரைக்கும் விசுவாசத்தோடு தொடர்ந்து முயற்சி செய்வார்கள். வச 19: "நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே". விடாமுயற்சி மறுபிறப்பை ஏற்படுத்தாது. மறுபிறப்பே விடாமுயற்சியை உருவாக்குகிறது. 3) சபையில் பொய்யான கிறிஸ்தவர்கள் யார் என்பதை, அவர்கள் சத்தியத்தையும் கடவுளின் ஜனங்களையும் விட்டு விலகுவதைக் கொண்டு, அடிக்கடி தெளிவாகக் காண்பித்து விடுகிறார் கடவுள். வச 19: "எல்லாரும் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்". அது வெளியாகிறது. இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி அது வெளிப்படுத்தப்படுகிறது.

1 யோவா 4:6ல் நாம் பார்த்த வாழ்வின் பரிசோதனைகளில் ஒன்று, மெய்யாகவே தேவனை அறிந்தவன் அப்போஸ்தலரின் உபதேசத்துக்கு செவி கொடுக்கிறான் என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அவர்கள் அதை மிகவும் விரும்பி அதை பற்றிக்கொண்டிருப்பார்கள். "தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை". இந்த ஜனங்கள் சிலகாலம் வரைக்கும் செவிகொடுத்து வந்தார்கள். வசனமாகிய விதை அவர்களில் சந்தோஷத்தோடு பெருகிற்று (லூக் 8:13). அவர்கள் உண்மையாகவே மறுபிறப்படைந்தவர்கள் போலத் தோன்றினார்கள். ஆனால் கஷ்டங்களும், கவலைகளும், ஐசுவரியமும், சிற்றின்பங்களும் அவர்களை நெருக்கிப் போட்டபோது, தாங்கள் மறுபிறப்படைந்தவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தினார்கள்.

1 யோவா 5: 3-4 ல் மூன்று இணைப்புள்ள சங்கிலி

1 யோவானுக்கு அளித்த மேற்கண்ட மிக நீளமான அறிமுகத்தோடு, அடுத்த வாரத்திற்கு உபயோகமாக இருக்கும்பொருட்டு 1 யோவா 5:3-4 வசனங்களை சுருக்கமாக சில நிமிடங்களுக்குப் பார்ப்போம். 3, 4 வசனங்களில் காணப்படுகின்ற கருத்துக்களின் கோர்வையை பாருங்கள். இதை மாத்திரம் பார்ப்பதற்குத்தான் இன்று நேரம் இருக்கும். இது நடைமுறையில் எப்படியாக செயல்படுகிறது என்பதை பிற்பாடு பார்க்கலாம். இந்த கருத்துக் கோர்வையின் மூன்று இணைப்புகள்: " (இணைப்பு ஒன்று) நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளும் அல்ல. (இணைப்பு இரண்டு) தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். (இணைப்பு மூன்று) நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்".

முதலாம் இணைப்பு: கடவுளுடைய கட்டளைகளை பாரமானவைகளாக எண்ணாமல் அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் மூலமாக கடவுள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம். வச 3: "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளும் அல்ல". கடவுளிடம் அன்புகூருகிறோம் என்பதின் அடையாளம், வேண்டாவெறுப்பாக அல்ல, சந்தோஷத்தோடு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாம்.

இரண்டாம் இணைப்பு: உலகத்தை ஜெயங்கொள்ளும் மறுபிறப்பின் வல்லமையே இப்படி ஆர்வத்தோடு கீழ்ப்படிதலுக்குக் காரணமாக இருக்கிறது. வச 4: "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்". கடவுளின் பேரில் கொண்ட அன்பினால் நாம் அவருக்கு ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் கீழ்ப்படிகிறோம். ஏனென்றால் மறுபிறப்பின் காரணமாக உலகத்தின் மாயையிலிருந்தும் அதன் அதிகாரத்தினின்றும் நாம் விடுபட்டவர்களாயிருக்கிறோம். மறுபிறப்பினால் உலகத்தின் கவர்ச்சிகள் வலுவிழந்து போகையில் கடவுளும் அவருடைய பரிசுத்தமும் நம்மை மிகவும் கவருகிறது. அது நமக்கு பாரமாக இருப்பதில்லை. அது எப்படி நடக்கிறது?

மூன்றாம் இணைப்பு: பாவத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவித்து, கடவுளின் சித்தத்தை அருமையானதாகவும், பாரமற்றதாகவும் ஆக்குகின்றதான உலகத்தை ஜெயிக்கிற இந்த வல்லமைதான் நமது விசுவாசமாகும். வச 4: "நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்".

சுவிசேஷம். மறுபிறப்பு, விசுவாசம், கீழ்ப்படிதல் யாவும் சந்தோஷத்துடன்

நமது கருத்துக் கோர்வை இவ்வாறாகச் செல்கிறது: சுவிசேஷமாகிய, என்றென்றைக்கும் நிற்கிறதும் அழியாததுமாகிய வசனத்தோடு நமக்கு தொடர்பு ஏற்படும்போது மறுபிறப்பு நிகழ்கிறது. அதனால் ஏற்படுகின்ற முதலாவது விளைவானது, நாம் கடவுளையும் அவருடைய குமாரனையும் ஏற்றுக் கொண்டு, அவருடைய சித்தத்தையும் அவருடைய வேலையையும் பிரதானமானதாகவும் அற்புதமானதாகவும், விலை மதிக்க முடியாததாகவும் எண்ணத் தொடங்குகிறோம். அதுதான் விசுவாசம். இந்த விசுவாசமானது உலகத்தை ஜெயிக்கிறது. அதாவது, உலகத்தை மேன்மையாக எண்ணிக் கொண்டிருந்த அடிமைத்தன நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. உலகத்தின் கவர்ச்சிகளில் அடிமைப்பட்டிருந்த நிலையை நமது விசுவாசம் தகர்த்துப் போடுகிறது. அப்படி செய்வதின் மூலமாக, சுயவிருப்பத்தோடும் சந்தோஷத்தோடும் கீழ்ப்படிகிற நிலமைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. கடவுளும் அவருடைய பரிசுத்த சித்தமும் நமக்கு பாரமானவைகளாக இல்லாமல் அழகாகத் தோன்றுகிறது. கண்களை மூடியிருந்த திரையை மறுபிறப்பு அகற்றிப் போடுகிறது. அதனால் நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கிறோம். சந்தோஷத்தோடு கீழ்ப்படியும்படிக்கு நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுள், பெத்லகேம் சபையிலுள்ள ஆயிரக்கணக்கான மறுபிறப்படைந்த மக்கள், தங்கள் வாழ்க்கையில் உலகத்தை ஜெயித்தவர்களாக வாழ்வதின் மூலமாக, தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளச் செய்வாராக. "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்".

1 Robert Law, The Tests of Life: A Study of the First Epistle of John (Grand Rapids, Mich.: Baker Book House, orig. 1909).