மறுபிறப்பு அன்பை உருவாக்குகிறது

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்திலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்கு தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது. ஏனென்றால் அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயம் இல்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமல் இருக்கிறவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

நாம் பரிசுத்த வாரத்திலே பிரவேசித்திருக்கும் இவ்வேளையிலே, மறுபிறப்பைப் பற்றி கவனம் செலுத்த வேண்டுமென நான் விரும்புகிற அம்சம் என்னவென்றால், மறுபிறப்பு நம்மேல் தேவன் கொண்டிருக்கும் அன்புக்கும் நாம் ஒருவரிலொருவர் கொண்டிருக்கும் அன்புக்கும் இடையேயுள்ள இணைப்பை உருவாக்குகிறது என்பதே. கடவுள் உங்கள் பேரில் அன்பு செலுத்துவதால் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்துவது எப்படி உருவாகிறது என்று யாரேனும் உங்களைக் கேட்டால், அதற்கு பதில் என்ன? இதோ: மறுபிறப்புதான் அந்த இணைப்பை ஏற்படுத்துகிறது என்பதே. நம்முடைய மரித்துப்போன, சுயநலமான இருதயத்தை கடவுளுடைய உயிருள்ள, அன்பான இருதயத்தோடு பரிசுத்தஆவியானவர் இணைப்பதே மறுபிறப்பாகும். அதன் காரணமாக அவருடைய ஜீவன் நமக்கு ஜீவனாகிறது, அவருடைய அன்பு நம்முடைய அன்பாகிறது.

இதை 1யோவா 4:7-12ல் தெளிவாகக் காணமுடிகிறது. இந்த இணைப்பை யோவான் இரண்டுவிதங்களில் வெளிப்படுத்துகிறார்: முதலாவதாக, கடவுளின் சுபாவமே அன்பு என்பதை காண்பிக்கிறார். ஆகவே நாம் அவரால் மறுபடியும் பிறக்கும்போது அவருடைய சுபாவத்தில் பங்கு கொள்கிறவர்களாகிறோம். இரண்டாவதாக, நாம் அவருடைய குமாரனின் மூலமாக நித்தியஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர் தமது குமாரனை அனுப்பியதில் அவருடைய அன்பின் சுபாவம் வரலாற்றில் வெளிப்படுவதை யோவான் நமக்குக் காண்பிக்கிறார். இவைகளை நாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அது எப்படி மறுபிறப்போடு தொடர்புடையதாயிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கடவுளின் சுபாவமாகிய அன்பு

முதலாவதாக வச 7-8: அன்பு கடவுளின் சுபாவம். "பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்." இதில் இரண்டு காரியங்கள் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள். 7ஆம் வசனம் "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது" என்று கூறுகிறது. 8ஆம் வசனத்தின் பிற்பகுதியில் "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்றிருக்கிறது. இவற்றில் வித்தியாசம் ஒன்றுமில்லை. ஏனென்றால், "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது" என்று யோவான் கூறும்போது, அது தபால்காரரிடமிருந்தோ அல்லது ஒரு நண்பனிடமிருந்தோ வருவது போல அந்த அன்பானது தேவனிடமிருந்து வருகிறது என்கிற அர்த்தத்தில் கூறவில்லை. நெருப்பிலிருந்து உஷ்ணம் ஏற்படுவது போல, அல்லது சூரியனிடமிருந்து வெளிச்சம் உண்டாவது போல கடவுளிடமிருந்து அன்பு உண்டாகிறது என்கிறார். அன்பு கடவுளின் சுபாவத்துக்கு சொந்தமாயிருக்கிறது. அது அவருக்குள் பின்னிப் பிணைந்திருக்கிறது. கடவுள் என்பதன் அர்த்தத்திலே அதுவும் உள்ளடங்கியுள்ளது. சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் அது வெளிச்சமாக இருக்கிறது. நெருப்பின் தன்மை உஷ்ணமாக இருப்பதினால் அது உஷ்ணத்தைத் தருகிறது.

ஆகவே, யோவான் என்ன சொல்ல வருகிறாரென்றால், மறுபிறப்பில், தெய்வீகத்தின் இந்த தன்மையானது உங்களிலும் உண்டாகிறது என்கிறார். தெய்வீக வாழ்க்கையை உங்களில் ஏற்படுத்துவதே மறுபிறப்பாகும். அதில் முக்கியமானதொரு பங்கு அன்பாகும். கடவுளின் சுபாவம் அன்பு. மறுபிறப்பில் அந்த சுபாவம் உங்களிலும் உருவாகிறது. 12ஆம் வசனத்தைப் பாருங்கள்: "தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்திலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்." நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது தேவன் தம்மையே உங்களுக்குத் தருகிறார். அவர் உங்களுக்குள் வாசமாயிருந்து, தமது அன்பை உங்கள் இருதயங்களில் ஊற்றுகிறார். இந்த அன்பு உங்களில் பூரணப்படுவதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. "அவருடைய அன்பு" என்று 12ஆம் வசனம் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். மறுபடியும் பிறந்தவராக நீங்கள் அடைந்திருக்கும் அன்பானது அவருடைய தெய்வீக அன்பின் வெறும் பிரதிபலிப்பல்ல. அந்த தெய்வீக அன்பை அனுபவித்தலும், அவ்வன்பை மற்றவர்களுக்குக் காண்பிப்பதுமாகும்.

குமாரனை அனுப்பியதில் வெளிப்பட்ட தேவஅன்பு

நம் மீது தேவன் கொண்ட அன்பிற்கும் நாம் மற்றவர்களிடம் காண்பிக்கும் அன்பிற்கும் உள்ள சம்பந்தத்தைக் காட்டுவதற்கு யோவான் முதலாவதாக கடவுளின் சுபாவமாகிய அன்பிலும், மறுபிறப்பு எப்படி நம்மை அவ்வித அன்பில் இணைக்கிறது என்பதிலும் கவனம் செலுத்துகிறார். இரண்டாவதாக 9-11 வசனங்களைப் பாருங்கள். இதில் யோவான் அந்த தெய்வீக அன்பு எப்படி வரலாற்றில் பிரதானமாக வெளிப்பட்டது என்பதில் கவனம் செலுத்துகிறார்.

தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்திலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.

கடவுள் தமது குமாரனை இவ்வுலகில் அனுப்பினதே கடவுளின் அன்பை வெளிப்படுத்துகிற மிகப் பெரிய விஷயமாக யோவானின் மனதில் இடம்பிடித்திருக்கிறது - 9-10 வசனங்களில் அவர் அதை இரண்டு முறை குறிப்பிடுகிறார். அப்படி அவர் அனுப்பியதின் நோக்கம், நமது பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக இருக்கும்படிக்கே என்கிறார். அனுப்பியதை அன்பாகக் காண்பிப்பது அதுதான். கிருபாதாரபலி என்றால் என்ன? நம் மீதுள்ள தேவகோபத்தை நீக்கும்படியாக, நமது பாவத்திற்குரிய தண்டனையை தன் மீது ஏற்றுக் கொள்ளும்படியாக அவர் வருதல். இதை சிந்தியுங்கள்! கடவுளுடைய நீதியுள்ள தண்டனையை ஏற்று, கடவுளுடைய நியாயமான கோபத்தை நீக்கிப் போடும்படியாக தமது குமாரனை உலகில் அனுப்பிய கடவுளின் அன்பு என்பதே அதன் பொருள். தமது கோபத்தைத் தணிப்பதற்கு தமது பங்கிலிருந்து மாத்திரம் செயல்படுவது கடவுளின் அன்பை வெளிப்படுத்துகின்ற மிகப்பெரிய விஷயமாகும்.

அதை குமாரன் எப்படி நிறைவேற்றினார் என்பது 1யோவா 3:16ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது: "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்." ஆகவே நமக்காக குமாரன் தமது ஜீவனைக் கொடுத்ததினாலே அவரே நமது கிருபாதார பலியானார். நமக்காக ஜீவனைக் கொடுத்தார். கடவுளின் சுபாவத்தை இது வெளிப்படுத்துகிறது என்று யோவான் கூறுகிறார். கடவுள் இப்படியாகத்தான் இருக்கிறார்.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல

10ஆம் வசனத்தில் யோவான் சுட்டிக் காண்பிக்கிற மற்றொரு காரியத்தை கவனியுங்கள்: " நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து . . . தம்முடைய குமாரனை அனுப்பினதினால் அன்பு உண்டாயிருக்கிறது." யோவான் எதை வன்மையாக மறுக்கிறார்? அன்பு உண்டாயிருப்பதற்கு காரணம் நாம் தேவனில் அன்புகூர்ந்ததினால் அல்ல என்கிறார். அன்பின் சுபாவமும், பிறப்பிடமும் நாம் தேவனில் அன்புகூருவதால் ஏற்படுவதல்ல என்பதை சுட்டிக் காண்பிக்கிறார். அங்கே அன்பு ஆரம்பமாவதில்லை. அன்பு என்பதற்கு பிரதானமாயிருப்பது அதுவல்ல. அன்பு தேவனிடமிருந்து ஆரம்பமாகிறது. அவரே அன்பாயிருக்கிறார். நாம் செய்கின்ற அல்லது உணருகின்ற எதையாவது நாம் அன்பு என்று அழைப்போமானால், அது மறுபிறப்பின் மூலமாக நாம் தேவனோடு இணைக்கப்பட்டிருப்பதாலேயே உண்டானது.

கடவுளின் அன்பைக் குறித்து நாம் இரண்டு காரியங்களைப் பார்த்திருக்கிறோம். அன்பானது கடவுளின் சுபாவமாயிருக்கிறது. நாம் அவராலே பிறப்பிக்கப்படும்போது நாம் அவருடைய சுபாவத்தில் பங்கு கொள்கிறவர்களாய் இருக்கிறோம் என்பதை யோவான் முதலாவதாக காண்பிக்கிறார். இரண்டாவதாக, அவ்வன்பு, நாம் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவர் தமது குமாரனை இவ்வுலகில் அனுப்பியதின் மூலம் சரித்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்று காண்பிக்கிறார்.

நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்

கடவுளின் அன்பின் வெளிப்பாட்டிலும், அவருடைய இயல்பாகிய அன்பிலும் மறுபிறப்புக்கு இருக்கின்ற முக்கிய இடத்தை கவனிக்கத் தவறாதீர்கள். 11ஆம் வசனத்தில் யோவான், "பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்திலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்" என்று எழுதும்போது, கடனாளிகளாயிருக்கிறோம் என்கிற வார்த்தையை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? முந்தைய ஐந்து வசனங்களில் உள்ளவைகளை மறந்துவிட்டீர்களானால், நீங்கள் என்ன கூறுவீர்களென்றால்: "கடவுள் மனித அவதாரம் எடுத்ததில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் அவரைப் போல நாமும் செய்ய வேண்டும். கடவுள் நம்மை நேசித்தார். எப்படி அவர் நம்மை நேசித்தார் என்பதை நாம் பார்த்து அதேவிதமாக நாமும் நேசிக்கிறோம். அப்படி செய்வதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்" என்பீர்கள்.

ஆனால் யோவானோ தாம் 7-8 வசனங்களில் எழுதியவைகளை மறக்கவில்லை. "அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்." ஆகவே அவர் "நாம் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்" என்று கூறும்போது அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறாரென்றால், மீனென்றால் தண்ணீரில் நீந்த வேண்டும், பறவைகள் என்றால் வானத்தில் பறக்க வேண்டும், உயிருள்ளவைகள் என்றால் சுவாசிக்க வேண்டும், பழங்கள் என்றால் இனிப்பாயிருக்க வேண்டும், எலுமிச்சை என்றால் புளிக்க வேண்டும், கழுதைப்புலி என்றால் சிரிப்பதைப் போல சத்தமிட வேண்டும் என்கிறார். மறுபிறப்படைந்தவர்கள் என்றால் அன்பு செலுத்த வேண்டும். நாம் அப்படிப்பட்டவர்கள்தான். அன்பு செலுத்துவது ஒரு வெளிவேஷம் அல்ல. தேவனுடைய பிள்ளைகளுக்கு இது இயற்கையான ஒன்று. அன்பு காட்டும்போது நாம் யாரென்பதை உணருகிறோம். கடவுளின் வித்து நமக்குள் இருக்கிறது. கடவுளின் ஆவி நமக்குள் இருக்கிறது. கடவுளின் சுபாவம் நமக்குள் இருக்கிறது. கடவுளின் அன்பு நம்மில் பூரணப்படுகிறது.

குமாரனை அனுப்பின கடவுளின் அன்பே நமக்கு உள்ளானதூண்டுதல்

ஆம், புறம்பான தூண்டுதல் ஒன்று இருக்கிறது. சரித்திரபூர்வமாக கடவுளின் குமாரன் இவ்வுலகில் வந்து நமக்காக தமது ஜீவனைக் கொடுத்து நம்மைத் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டதை கண்டுணர்வது புறம்பான தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பிரத்தியேகமாக இருப்பது உள்ளான தூண்டுதல். தமது குமாரனை உலகில் அனுப்பினதாகிய தேவஅன்பு மறுபிறப்பின் மூலமாக நமக்குள் ஏற்பட்டு, நமது ஆத்துமாவின் உயிர்நாடியாக செயல்பட்டு, உள்ளான தூண்டுதலாக இருக்கிறது. நமக்குள் தேவனுடைய ஆவி உருவானதை உள்ளாக உணரச் செய்வது போலவே, மறுபிறப்பானது, சரித்திரத்தில் தேவஅன்பு வெளிப்பட்டதை அனுபவிக்கச் செய்கிறது.

நான் ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும் வருகிறேன். நம்மேல் தேவன் கொண்டிருக்கும் அன்புக்கும், நாம் ஒருவரிலொருவர் கொண்டிருக்கும் அன்பிற்கும் இடையேயுள்ள இணைப்பை, மறுபிறப்பு உருவாக்குகின்றதான அம்சத்தின் மீது, பரிசுத்த வாரத்திலே பிரவேசித்திருக்கும் இவ்வேளையிலே, நாம் கவனம் செலுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன். கடவுள் உங்கள் பேரில் அன்பு செலுத்துவதால் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்துவது எப்படி உருவாகிறது என்று யாரேனும் உங்களைக் கேட்டால், அதற்கு பதில் என்ன? இதோ: மறுபிறப்புதான் அந்த இணைப்பை ஏற்படுத்துகிறது என்பதே. நம்முடைய மரித்துப்போன, சுயநலமான இருதயத்தை கடவுளுடைய உயிருள்ள, அன்பான இருதயத்தோடு பரிசுத்தஆவியானவர் இணைப்பதே மறுபிறப்பாகும். அதன் காரணமாக அவருடைய ஜீவன் நமக்கு ஜீவனாகிறது, அவருடைய அன்பு நம்முடைய அன்பாகிறது.

இந்த அன்பே, இயல்பில் கடவுள் யாரென்றும், நாம் நித்தியஜீவனை அடையும்படிக்கு சரித்திரத்தில் தமது குமாரனை நமது பாவங்களை நிவிர்த்தி செய்யும் கிருபாதாரபலியாக அனுப்பினதை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் யாரென்பதை விளக்கும் விதமாக மறுபிறப்பானது நம்மை இப்படியாக இணைக்கிறது. நாம் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால் நாம் ஒருவரிலொருவர் அன்புகூருவோம்.

மறுபடியும் பிறந்தவர்கள் எவ்விதத்தில் அன்பு செலுத்துவர்

இப்போது மீதியிருக்கும் நேரத்தில், இதை இங்கு பெத்லேகேம் சபையிலுள்ள நாம் எவ்விதத்தில் உபயோகிக்கலாம் எனக் கூறுவதில் செலவிட விரும்புகிறேன். 11ஆம் வசனத்தில் நம் எல்லோருக்கும் யோவான் அப்போஸ்தலன் கூறுவதையே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்: "பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்திலொருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்." நாம் உயிர்ப்பிக்கப்பட்டவர்களானால், நாம் அன்பு செலுத்துகிறவர்கள். நாம் மறுபடியும் பிறந்திருந்தால், தேவனுடைய அன்பு நமக்குள் இருக்கிறது. "நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்" (1யோவா 3:14).

இது எப்படியிருக்கும்?

மறுபிறப்பின் மூலமாக ஏற்படுகிற தேவஅன்பு நமது வாழ்க்கையில் செயல்படுவது பலவிதங்களில் தெளிவாகக் காணப்படும் என யோவான் குறிப்பிடுகிறார். அவைகளில் இரண்டை நான் குறிப்பிடுகிறேன். பெத்லேகேம் சபையில் அவை நமது வாழ்க்கையை மாற்றியிருக்கும் விதமானது - இன்னும் அதிகமதிகமாக செயல்பட வேண்டும்.

1) மற்றவர்களின் நன்மையை பார்த்து தாழ்மையோடு சந்தோஷப்படுதல்

1 யோவா 3:11-14: "நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாய் இருந்ததினிமித்தந்தானே. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்."

12ஆம் வசனத்தில் எதிர்பார்க்கப்படுகிறதான அன்பைக் குறித்து எங்களுக்கு சொல்லவே தேவையில்லையே என நினைப்பீர்கள். "தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்." இங்கு பெத்லேகேம் சபையிலே ஒரு கொலைகாரக் கூட்டமே அமர்ந்திருக்கிறதென நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேனா? இல்லை. யோவானும் அப்படியாகக் கவலைப்பட்டார் என நான் நினைக்கவில்லை. அவர் கொலையைப் பற்றி இங்கு பேசவில்லை. 12ஆம் வசனத்தில், "அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்?" என்று கேட்கிறார். அதுதான் அவருக்கு முக்கியமாகப் படுகிறது. சபையார் ஒருவரிலொருவர் அன்பு காண்பிப்பதற்கும், காயீனுடைய மனப்பான்மைக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருக்கிறது என்று அவர் நினைக்கிறார்.

12ஆம் வசனத்தில் இறுதியில் அதற்கு பதிலளிக்கிறார்: "தன் கிரியைகள் பொல்லாதவைகளும் தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாய் இருந்ததினிமித்தந்தானே". அன்பானது சகோதரனைக் கொலை செய்யாது என்பதை மாத்திரம் யோவான் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, தன் சகோதரன் ஆவிக்குரிய விதமாகவோ அல்லது நற்குணங்களிலோ தன்னைக் காட்டிலும் உயர்வானவனாகக் காணப்பட்டால் அந்த அன்பானது சினமடையாது. காயீன் பொல்லாங்கனாயிருந்தபடியால் மாத்திரம் ஆபேலைக் கொன்றுவிடவில்லை. ஆபேலின் நீதியுள்ள குணங்களும் தனது பொல்லாத குணங்களும் பெரும் வேறுபாட்டைக் காண்பித்தபடியால் அவனுக்கு அதிக ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டது. தன்னைக் குறித்த குற்றஉணர்வை அது அவனுக்குள் ஏற்படுத்தியது. ஆபேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமேயிருக்கவில்லை: ஆபேலின் நற்குணமானது, காயீனுடைய பொல்லாங்கை அவனுக்கு எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. தனது தீயகுணத்திற்காக மனந்திரும்பி தன்னை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக அவன் ஆபேலை ஒழித்துக் கட்டினான். கண்ணாடியின் முன் நின்று நீங்கள் பார்ப்பதை உங்களுக்குப் பிடிக்காவிட்டால் கண்ணாடியையே உடைத்து விடுவதா.

காயீனைப் போன்று நாம் எப்படி இருக்கக் கூடும்? நம்மிலுள்ள ஏதாவதொரு பலவீனமோ அல்லது தீயபழக்கமோ இன்னொருவருடைய நற்குணத்தோடு ஒப்பிடுகையில் அதிக முரண்பாட்டைக் காண்பித்ததென்றால், நம்மை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக, நமக்கு தாழ்வுமனப்பான்மையை உருவாக்குகின்ற அவர்களிடமிருந்து விலகிப் போகப் பார்க்கிறோம். நாம் அவர்களைக் கொன்றுவிட மாட்டோம். ஆனால் அவர்களைத் தவிர்க்கப் பார்ப்போம். இன்னும் மோசமாக நடப்போமானால், நம்மைக் குறைவுடையவர்களாகக் காண்பிக்கிற அந்த நபரைக் குறித்து ஏதாவது குறைகூறி அவர்களை நல்லவர்களாகக் காண்பிக்கிற விஷயங்களிலிருந்து தாழ்வுபடுத்த முயற்சிப்போம். பிறரின் நற்குணத்தை ஒன்றுமில்லாததாக்கக் கூடிய சிறந்த வழிமுறை என்னவென்றால் அவர்களுடைய குறைவுகளின் மீது கவனத்தை திசை திருப்புவதாகும். அவர்களுடைய நற்குணங்களிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்கிறோம்.

ஆனால், யோவானின் கருத்து என்னவென்றால்: அன்பு இப்படி செய்யாது. மற்ற சகோதரனோ சகோதரியோ நற்பழக்கங்களிலும், நல்ல மனப்பான்மையிலும், நற்குணங்களிலும் முன்னேறிச் செல்வதைக் கண்டு அன்பானது சந்தோஷப்படும். இவ்விதமான வளர்ச்சிகளில் அன்பு சந்தோஷங்கொள்ளும். நமது சொந்த வளர்ச்சியைக் காட்டிலும் மற்றவர்களின் வளர்ச்சி வேகமாக ஏற்பட்டால், அன்பானது தாழ்மையோடு சந்தோஷப்படுகிறவர்களோடுகூட சேர்ந்து சந்தோஷப்படும்.

ஆகவே நாம் கற்றுக் கொள்கிற பாடம்: எங்கெங்கே நீங்கள் ஏதாவது வளர்ச்சியையோ, தூய்மையையோ, ஆவிக்குரிய ஒழுக்கத்தையோ, நற்பழக்கங்களையோ, நல்மனப்பான்மையையோ பார்க்கிறீர்களோ உடனே சந்தோஷப்படுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள். அதைப் பாராட்டுங்கள். அதற்காக ஆத்திரமடையாதீர்கள். காயீனைப் போல இருக்காதீர்கள். காயீனுக்கு எதிர்மாறாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் நற்குணத்தைப் பார்த்து நீங்கள் உற்சாகம் பெறுங்கள். அன்பு தாழ்மையானது. அன்பு மற்றவர்களின் நன்மையில் சந்தோஷப்படும். அன்பு தனது குற்றங்களை மூடி வைக்காது. குற்றங்களைத் திருத்திக் கொள்ள அன்பு நடவடிக்கை எடுக்கும். மற்றவர்களின் பலம் எதுவோ அதைப் பார்த்து ஒவ்வொருவரும் சந்தோஷம் அடைவார்களானால் அது எவ்வளவு அழகான ஐக்கியமாக இருக்கும்! இத்தகைய தன்மையுள்ளதே மறுபிறப்பில் தேவனுடைய பிள்ளைகள் பெறும் தேவஅன்பு.

2) மற்றவர்களின் தேவையை சந்தித்தல் - எதை இழந்தும்

மறுபிறப்பின் மூலமாக விளைந்த கடவுளின் அன்பு நமது வாழ்க்கையில் செயல்படுவதை வெளிப்படுத்தும் இரண்டாவது விதமாக யோவான் கூறுவது 1யோவா 3:16-18 வசனங்களில் காணப்படுகிறது: "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாய் இருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்."

அன்பைக் குறித்ததான மூன்று காரியங்களை அவர் குறிப்பிடுகிறார். அவை ஒவ்வொன்றும் முக்கியத்துவத்தில் அதிகரிப்பதாயிருக்கிறது. முதாவதாக, அன்பானது பிறருக்காக கிரியைகளைச் செய்யும் என்கிறார். வசன 18: "என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்." பேச்சின் மூலமாக பிறரிடம் அன்பு செலுத்துவது முக்கிய வழியல்ல என்று அவர் கூறவில்லை. அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பதற்கும் உரிய காரியங்களை நாவானது ஏராளமாகக் கொண்டிருக்கிறது. கிரியைகளினால் உதவி செய்யவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது வெறுமனே பேசிக் கொண்டிராதேயுங்கள் என்கிற அர்த்தத்தில் கூறுகிறார். ஒருவருக்கொருவர் கிரியைகளால் உதவிக் கொள்ளுங்கள்.

இதையடுத்து நாம் மிகவும் கவனிக்கத்தக்கதான இன்னொரு முக்கியமான காரியத்தைக் குறிப்பிடுகிறார். வச16: "நாமும் சகோதரருக்கு ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்." நமக்காக தமது ஜீவனைக் கொடுத்ததினாலே கிறிஸ்து நம் மீது அன்புகூர்ந்தார். நாம் மறுபடியும் பிறந்தபோது இந்த அன்பு நம்முடைய அன்பாக ஆயிற்று. மற்றவர்கள் வாழவேண்டும் என்பதற்காக தனது சுயம் மரிக்க வேண்டும் என்கிற உத்வேகம் மறுபிறப்படைந்தவர்களில் ஆழமாக ஏற்படும். மறுபிறப்படைந்தவர்களில் கிறிஸ்து இருக்கிறார் என்றால் அவன் வேலைக்காரனையொத்த இருதயத்தைக் கொண்டிருப்பான். தியாகமுள்ள ஆவியைக் கொண்டிருப்பான். மற்றவர்கள் உயர வேண்டுமென்பதற்காக தான் தாழ்மையடைய ஆயத்தமாயிருப்பான். மற்றவர்களை உபயோகித்து விருத்தியடைவதில் அன்புக்கு விருப்பம் இராது. மற்றவர்கள் விருத்தியடைவதையே அன்பு விரும்பும். அதற்காக நமது ஜீவனையே இழக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. இயேசு நம்மைப் பார்த்துக் கொள்ளுவார்.

முதலாவது யோவான் சொல்வது, அன்பானது கிரியைகளைக் கொண்டது. அது மற்றவர்களுக்கு நன்மை செய்யும். இரண்டாவதாக அவர் கூறுவது, அப்படி செய்வதற்கு எவ்வளவு விலைக்கிரயமானாலும் அதை நாம் செய்வோம். "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே . . . நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்."

மூன்றாவதாக, இதைச் செய்ய வேண்டுமானால் பிறரின் தேவைகளை சந்திப்பதற்கு பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்கிறார். வச17: "ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?". நாம் ஒருவருக்கொருவர் ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று யோவான் என்ன அர்த்தத்தில் கூறுகிறாரென்றால் நம்மிடம் உள்ளவைகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார். அன்பு சொந்தங்கொண்டாடாது. எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்பதை அன்பு அறியும். அவருடையவைகளை நாம் நிர்வகிக்கிறவர்களாகவே இருக்கிறோம். நம்மிடமுள்ளவைகளெல்லாம் அவருக்கு உரியது. கடவுள் அன்பாக இருக்கிறார். நாம் மறுபடியும் பிறந்த போது அவருடைய அன்பு நமக்கு சொந்தமாகிறது. அந்த அன்பு இப்போது நம் கைகளிலுள்ள அவருடைய பொருட்களை நிர்வாகம் செய்கிறது.

ஆகவே முதலாவதாக, நாம் வெறும் வாய்வார்த்தைகளினால் அல்ல, செயல்களினாலே அன்பை செலுத்துகிறவர்களாயிருப்போம். அடுத்தபடியாக நம்மை நாமே வெறுக்கிறவர்களாகவும் தியாக மனப்பான்மையுள்ளவர்களாகவும் இருப்போம். கிறிஸ்து நமக்காகத் தமது ஜீவனையும் கொடுத்தது போல பிறருக்காக ஜீவனைக் கொடுக்கிறவர்களாயிருப்போம். அடுத்தபடியாக நம்மிடம் உள்ள யாவும் கடவுளுக்கே சொந்தம் என்பதையும், நாமும் கடவுளுக்கே சொந்தம் என்பதையும் உணர்ந்தவர்களாக மிகுந்த உதாரத்துவமாக பிறருக்கு கொடுக்கிறவர்களாக இருப்போம். நாம் அவருடைய பிள்ளைகள். நாம் அவருடைய சுபாவத்தை அடைந்திருக்கிறோம். அவர் அன்பாயிருக்கிறார்.

இயேசுவின் மரணம் கடவுள் அன்பாயிருப்பதை காண்பிக்கிறது

ஆகவே இந்த பரிசுத்த வாரத்திலே நாம் பிரவேசிக்கையிலே, தமது குமாரனை அனுப்பியதின் மூலமாக தேவன் தமது அன்பை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தமது ஜீவனை நமக்காக கொடுத்ததின் மூலமாக பிதாவின் அன்பு எத்தகையது என்பதை குமாரன் காண்பித்திருப்பதையும் புத்துணர்வோடு நோக்குங்கள். கிறிஸ்துவில் நாம் தேவனுடைய அன்பின் மகிமையைக் காண்கையில், மறுபிறப்பின் மூலமாக தேவனுடைய அன்பு நம்மில் உருவாவதையும், அது ஒருவரிலொருவர் அன்பு செலுத்தும் நிலையை உருவாக்குவதன் காரணமாக நமது மறுபிறப்பை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளும்படியாக ஊக்கத்துடன் ஜெபிப்போமாக.

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம்,
ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.
அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து,
அவரை அறிந்திருக்கிறான்.
- 1 யோவா 4:7