நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்? பாகம் 1

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பிணாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

கடவுளைக் குறித்து எழுதப்பட்டதான புத்தகங்களிலேயே மிகவும் உன்னதமான புத்தகம், ஜான் கல்வினுடைய Institutes என்கிற புத்தகம். அந்த புத்தகமானது ஆரம்பிக்கும் விதமாவது: "நாம் அடைந்திருக்கிறதான எல்லாவிதமான ஞானமும், அது உண்மையான, ஆரோக்கியமான ஞானமாக இருக்கும்பட்சத்தில், அது இரண்டு காரியங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அது கடவுளைக் குறித்ததும், நம்மைக் குறித்ததுமான அறிவை உள்ளடக்கியுள்ளது". இக்காலங்களில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடவுளைக் குறித்த காரியங்களை கிரகித்துக் கொள்வதும், அவைகளை ஏற்றுக் கொள்வதும் நமக்கு சிரமம் என்பதல்ல - அது ஏறக்குறைய வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், நம்மைக் குறித்த காரியங்களை விளங்கிக் கொண்டு, அவைகளை ஒத்துக் கொள்வது நமக்கு அதிக சிரமமாயிருக்கும் என்பதே. முதலாவது, நம்மைக் குறித்து நாம் உண்மையாகவே விளங்கிக் கொண்டிருந்தால்தான், கடவுளைக் குறித்த உண்மையான அறிவைப் பெற முடியும். இரண்டாவதாக, நம்மை நாமே நன்றாக விளங்கிக் கொண்டிருப்பதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், நமது உண்மையான நிலையை கடவுளின் உதவியில்லாமல் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை.

மனிதனின் இருதயத்தில் இருப்பதை யாரால் அறியக்கூடும்?

எரேமியா தீர்க்கதரிசி எழுதுகிறார்: "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார்?" (எரே 17:9). தாவீதும் சங் 19:12ல் கூறுகிறார்: "தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்". வேறுவிதமாக சொல்வோமானால் நமது பாவத்தின் ஆழத்தை நம்மால் உணர்ந்து கொள்ளவே முடியாது. நமது பாவத்தின் முழு ஆழத்தையும் நாம் உணர்ந்து கொண்டால்தான் நமக்கு பாவமன்னிப்பு அருளப்படும் என்றிருந்ததானால், நாம் அனைவருமே அழிந்துதான் போயிருப்போம். ஒருவனுமே தனது பாவநிலையின் ஆழங்களை அறியான். எவனும் அறிந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அது மிகமிக ஆழமானது.

ஆனால், நாம் நம்மைக் குறித்து விளங்கிக் கொள்ளவே முடியாதபடிக்கும் வேதாகமம் நம்மை விட்டு வைக்கவில்லை. நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை நம்மால் முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடியாது என்பதால், நமது பாவத்தின் கொடூரத்தை நாம் அறியவே வழியில்லை என்று அர்த்தமல்ல. நமது ஆத்துமாவின் நிலையைக் குறித்த பயங்கரமான நிலையை வேதாகமம் நமக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறது. ஏன் அப்படி காண்பிக்கிறதென்றால், அப்போதுதான் நமக்கு என்ன தேவை என்பது நமக்குத் தெரியவரும். நமக்குத் தேவையானதை கடவுள் அருளிச் செய்யும்போது, நாம் மகிழ்ச்சிப் பெருக்கில் நிறைய முடியும்.

நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?

நாம் மறுபிறப்பைக் குறித்த ஒரு தொடர்பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். யோவா 3:7ல் "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்" என்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். யோவா 3:3ல் "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்" என்றும் கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமானது. அதில்தான் மோட்சமோ அல்லது நரகமோ நிர்ணயிக்கப்படுகிறது. நாம் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டோம். ஆகவே, இன்றைக்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி, ஏன் என்பதாகும். ஏன் அது மிகவும் அத்தியாவசியமானது? ஏன் வேறுவிதத்தில் அதற்குத் தீர்வு காணமுடியாதா? புதுவிதமான வாழ்க்கையை ஆரம்பிப்பதின் மூலமாகவோ அல்லது நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலோ அல்லது நம்மை நாமே ஒழுக்கத்திற்குட்படுத்திக் கொள்வதாலோ அதற்கு தீர்வு காண முடியாதா? அடிப்படையானதும், ஆவிக்குரியபிரகாரமானதும், தெய்வீகமானதுமான இந்த காரியம் எதனால் மறுபிறப்பு அல்லது உயிர்ப்பிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது? இந்தக் கேள்விக்குத்தான் நாம் இந்த தியானத்திலும் அடுத்துவரும் தியானத்திலும் விடை காணப் போகிறோம்.

நமது நிலை: நாம் மரித்தவர்களாயிருக்கிறோம்

இந்த தியானத்தின் ஆரம்பத்தில் நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வேதபகுதி, எபேசியர் 2ஆம் அதிகாரத்திலிருப்பது. இதில் இரண்டு முறை, 1, 5 ஆகிய வசனங்களில் நாம் பாவத்தினால் மரித்தவர்களாயிருக்கிறோம் என்று பவுல் குறிப்பிடுகிறார்: "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை . . ." (வச1), "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்"(வச4-5). ஆகவே, இரண்டு முறை பவுல் நம்மை "மரித்தோர்" என்று விவரிக்கிறார்.

இதற்குத் தீர்வு: "கடவுள் நம்மை உயிர்ப்பித்தார்"

இதற்குத் தீர்வை 5ஆம் வசனத்தில் காண்கிறோம்: "தேவனோ . . நம்மை . . . உயிர்ப்பித்தார்". உங்களுடைய மரித்துப் போயிருந்த நிலையை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளாவிட்டால், கடவுள் உங்கள் மீது கொண்டிருக்கும் மகாஉன்னதமான அன்பின் முழுமையை உங்களால் அனுபவிக்க முடியாது. அவருடைய அன்பின் ஆழத்தை 4ஆம் வசனத்தின் மூலமாக அறிந்து கொள்ளுகிறோம். நாம் மரித்துப்போன நிலையிலிருந்தும்கூட அந்த அன்பானது நம்மை உயிர்ப்பித்தது. "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்". நம்மீது கொண்ட மிகுந்த அன்பினாலே நம்மை உயிர்ப்பித்தார். நீங்கள் மரித்த நிலையில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திராவிட்டால், கடவுளின் மிகுந்த அன்பையும் அறியாமல்தான் இருப்பீர்கள்.

"அவர் நம்மை உயிர்ப்பித்தார்" என்கிற இந்த அற்புதமானது இயேசு கூறுகின்ற மறுபிறப்புக்கு சமமான உண்மையாக இருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் நமக்கு ஆவிக்குரிய ஜீவன் இல்லாமல் இருந்தது. ஆவிக்குரிய செத்த நிலையிலிருந்து தேவன் நம்மை உயிரோடே எழுப்பினார். இப்போது நாம் உயிருள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஆவியினால் பிறக்க வேண்டும் (யோவா 3:5) என்றும், "ஆவியே உயிர்ப்பிக்கிறது" (யோவா 6:63) என்றும் இயேசுக்கிறிஸ்து சொன்னதிற்கு இது ஒத்ததாக இருக்கிறது.

அன்பாகிய புதியஉடன்படிக்கை

உயிர்ப்பித்தல், மறுபடியும் பிறத்தல், உயிரோடு எழுப்புதல் ஆகிய இவை யாவும் தேவனுடைய மகா பெரிய இரக்கத்தின் ஐசுவரியத்தினாலும், அவருடைய உன்னதமான அன்பினாலும் ஏற்பட்டது என்று நாம் கூறலாம் அல்லவா? "தேவனோ, (1) இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், (2) நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்". இதுதான் புதுஉடன்படிக்கையின் அன்பு. இந்தவிதமான அன்பைத்தான் அவர் தமது மணவாட்டியின்மீது வைத்திருக்கிறார். அவர் அவளை மரித்தவளாகக் காண்கிறார் (எசேக் 16: 4-8), தமது குமாரனையே அவளுக்காக மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்கிறார். அதன் மூலமாக அவளுக்கு உயிர் அளிக்கிறார். அவளை என்றென்றுமாக உயிரோடிருக்கும்படியாகச் செய்கிறார். "நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை" (யோவா 10:28).

மறுபடியும் பிறப்பது ஏன் அவசியம்?

"மரித்தவர்களாயிருத்தல்" என்பதற்கு என்ன அர்த்தம் என்பதே கேள்வி. இதற்கு ஏறக்குறைய பத்து பதில்கள் புதியஏற்பாட்டில் இருக்கின்றன. நாம் உண்மையோடும் ஜெபத்தோடும் அவைகளை கவனத்தில் கொள்வோமானால், அவைகள் நம்மை மிகுந்த தாழ்மைக்கு உட்படுத்தும். அது மாத்திரமல்ல, மறுபிறப்பாகிய ஈவை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டிருப்பதை நினைத்து வியப்படையச் செய்யும். அவைகளில் ஏழு காரியங்களைக் குறித்து இந்தத் தியானத்திலே பார்ப்போம். மீதி மூன்றை அடுத்த தியானத்திலே வேறுசில கேள்விகளோடுகூட சேர்த்துப் பார்ப்போம். அந்தக் கேள்விகள்: நாம் நிஜமாகவே மாறத்தான் வேண்டுமா? வெறுமனே மன்னிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட முடியாதா? பரலோகம் செல்வதற்கு அது போதாதா? இவை யாவையும் அடுத்த தியானத்திலே நாம் பார்க்கலாம்.

மறுபிறப்பு இல்லாவிட்டால், நம்முடைய உண்மையான நிலை என்ன என்பதைக் குறிப்பிடும் வேதாகம விளக்கங்கங்களும், மறுபடியும் பிறப்பது ஏன் அவசியம் என்பதற்குரிய பதிலும் கீழ்வருமாறு:

1) மறுபிறப்பு இல்லாத நிலையில், நாம் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்துப்போன நிலையில் இருக்கிறோம்(எபே 2:1-2).

மரித்தல் என்பது உயிரில்லாத தன்மையைக் குறிக்கிறது. சரீரப்பிரகாரமாகவோ, அல்லது நடத்தையிலோ உயிரற்ற நிலையில் இருப்பதாக வசனம் கூறவில்லை. "உலகவழக்கத்தின்படி நடந்தீர்கள்"(வச2), "செய்தீர்கள்"(வச3) என்று வசனம் கூறுவதைப் பார்க்கிறோம். "மாம்ச இச்சையின்படி நடந்து, மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து" வாழ்ந்திருந்தோம். பாவமே செய்ய இயலாதபடிக்கு நாம் மரித்தவர்களாக இருக்கவில்லை. ஆனால், கிறிஸ்துவின் மகிமையைப் பார்க்கவோ உணரவோ முடியாதவண்ணமாக நாம் மரித்தநிலையில் இருந்தோம். நாம் ஆவிக்குரியபிரகாரமாக மரித்தவர்களாயிருந்தோம். கடவுள், கிறிஸ்து, வேதம் ஆகிய காரியங்களுக்கு நாம் உணர்ச்சியற்றவர்களாயிருந்தோம். மறுபிறப்பை அடைவதற்கு முன்பாக நாம் இருந்த நிலையை இனிவரும் 9 காரியங்களும் எப்படி விவரிக்கிறதென்று பாருங்கள்.

2) மறுபிறப்பில்லாத நிலையில், நாம் சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளாயிருக்கிறோம் (எபே 2:3).

"சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்"(வச 3). இங்கே நாம் அறியவேண்டிய முக்கிய கருத்து, நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல, நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே. மறுபிறப்பு இல்லாத பட்சத்தில் நானேதான் எனக்குப் பிரச்சனையாக இருக்கிறேன். நீங்கள் எனது பிரச்சனை அல்ல. என் பெற்றோர் என் பிரச்சனை இல்லை. எனது விரோதிகள் என்னுடைய பிரச்சனை அல்ல. எனக்கு நானேதான் பிரச்சனை. என்னுடைய செயல்களோ, எனது சூழ்நிலைகளோ, நான் வாழ்வில் சந்திக்கும் மக்களோ எனது பிரச்சனை அல்ல. என்னுடைய சுபாவம்தான் எனது பெரும் பிரச்சனையாயிருக்கிறது.

ஆதியில் நல்ல சுபாவம் இருந்து, பின்னால் தீமையை செய்து அதனால் தீயசுபாவத்தை நான் பெறவில்லை. "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்" (சங் 51:5). இதுதான் நான். எனது சுபாவமே சுயநலமானது. நான் என்னைக் குறித்து மாத்திரமே சிந்திப்பவன். எனது தேவையையே பார்த்துக் கொள்பவன். எனது பிரச்சனைகளுக்கு நீங்கள்தான் காரணம் என்பது போல தோன்றப் பண்ணும் வித்தை அறிந்தவன். இதைக் கேட்கிற நீங்கள், ஆம் எங்களுக்கும் அப்படிப்பட்ட ஆட்களைத் தெரியும் என்று சொல்வீர்களானால், நீங்கள் முழுவதும் கண்தெரியாத குருடர்களாய்த்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் உங்கள் இருதயம் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.

மறுபிறப்புக்கு முன்னான நமது சுபாவத்தை, "கோபாக்கினையின் பிள்ளைகள்" என பவுல் வர்ணிக்கிறார். பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி சொந்தமோ அது போல கடவுளின் கோபாக்கினைக்கு சொந்தமுடையவர்கள் நாம். கடவுளுடைய மகிமையை எதிர்த்து நிற்கிற கலககுணமும், சுயநலமும், கடினமனதும் உடைய நம்மீது கடவுளின் பரிசுத்த கோபாக்கினை வருவது இயற்கையே அல்லவா? அதுதான் சரியானதும்கூட.

3) மறுபிறப்பற்ற நிலையில், நாம் இருளை விரும்புகிறவர்களாகவும், ஒளியை பகைக்கிறவர்களாகவும் இருக்கிறோம் (யோவா 3:19-20).

இதுவே ஆக்கினைத்தீர்ப்பு: ஒளியானது உலகத்திலே வந்திருந்தும், மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியால், அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறார்கள். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் (யோவா 3:19-20).

இயேசு கூறுகிற இந்த வார்த்தைகள் மறுபிறப்பில்லாத நிலையில் நமது சுபாவம் எப்படியிருக்கிறதென்பதை படம்பிடித்துக் காண்பிக்கிறது. ஆவிக்குரிய வெளிச்சம் நம்மை நோக்கி வரும்போது நாம் சும்மா இருப்பதில்லை. அதை எதிர்க்கப் பார்க்கிறோம். ஆவிக்குரிய இருள் நம்மை சூழ்ந்து கொள்ள வரும்போதும் நாம் சும்மா இருப்பதில்லை. அதை அரவணைத்துக் கொள்ளுகிறோம். உயிர்ப்பிக்கப்படாத இருதயத்தில் அன்பும், வெறுப்பும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவை எப்போதுமே தவறான திசையை நோக்கிச் செல்கிறதாகவே காணப்படுகிறது. எதை நேசிக்க வேண்டுமோ அதை வெறுப்பதும், எதை வெறுக்க வேண்டுமோ அதை நேசிப்பதுமாகவே உயிர்ப்பிக்கபடாத இருதயம் செயல்படுகிறது.

4) மறுபிறப்படையாத நிலையில், நமது இருதயம் கல்லைப் போல கடினமாக இருக்கிறது (எசேக் 36:26; எபே 4:18).

எசேக் 36:26ஐ கடந்த தியானத்திலே பார்த்தோம். "கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" என்று கடவுள் அங்கு சொல்லுகிறார். எபே 4:18ல் பவுல், நம்முடைய நிலமையாகிய, அந்தகாரத்தையும், இருதயக் கடினத்தையும், அறியாமையையும், தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராக இருக்கிற நிலமையையும் தெளிவாகக் காண்பிக்கிறார். "அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால், தங்களில் இருக்கும் அறியாமையினால் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள்". அறியாமையுடையவர்களாய் இருப்பது நமது அடிப்படை பிரச்சனை அல்ல. அதைக் காட்டிலும் பெரிதானதொன்று இருக்கிறது. அது, "இருதயக் கடினத்தினால் உண்டாகும் அறியாமை". நமது அறியாமை, கபடற்ற அறியாமை அல்ல, அது குற்றமுள்ள அறியாமை. கடினமும், எதிர்க்கிற குணமுமுள்ள இருதயத்தில் அது வேர் கொண்டிருக்கிறது. சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிறவர்கள் என்று ரோம 1:18ல் பவுல் சொல்லுகிறார். அறியாமை நமது தலையாய பிரச்சனை அல்ல. இருதயக்கடினமும், எதிர்த்து நிற்பதுமே நமது பிரதான பிரச்சனை.

5) மறுபிறப்பற்ற நிலையில், நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியவோ அல்லது அவரைப் பிரியப்படுத்தவோ முடியாமல் இருக்கிறோம் (ரோம 8:7-8).

"மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்" என்று ரோமர் 8:7-8ல் பவுல் கூறுகிறார். "மாம்சசிந்தை", "மாம்சத்துக்குட்பட்டவர்கள்" என்பவைகளை பவுல் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்பதை நாம் அடுத்த வசனத்தின் மூலமாக சொல்லலாம். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல், ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள்" (ரோம 8:9). வேறுவிதமாக சொல்வோமானால், மறுபிறப்பை அடைந்ததால் ஆவியைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும், மறுபிறப்பை அடையாததினால் ஆவியைப் பெறாமல் இருப்பவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை சுட்டிக் காண்பிக்கிறார். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும் (யோவா 3:5).

பரிசுத்தஆவி இல்லாமல், நமது மனது எப்போதும் கடவுளின் அதிகாரத்தை எதிர்க்கும், ஆகவே நாம் அவருக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறோம் என்பதே பவுல் சொல்ல வருவதின் கருத்து. "மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது". நாம் அவருக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களாக இருந்தோமானால், அவரைப் பிரியப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்போம். "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்". கடவுள் நம்மை மறுபடியும் பிறக்கச் செய்யும் வரைக்கும், கடவுளுக்கடுத்த காரியங்களில் நாம் இப்படித்தான் மரித்தவர்களாயும், இருளில் இருப்பவர்களாயும், கடினமனதுடையவர்களாயும் இருக்கிறோம்.

6) மறுபடியும் பிறவாவிட்டால், நம்மால் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது (எபே 4:18; 1கொரி 2:14).

இருளில் இருப்பதிலும், கடினமனதுடையவர்களாயிருப்பதிலும் வேறு என்ன காரியங்கள் அடங்கியுள்ளதென்பதை பவுல் 1கொரி 2:14ல் காண்பிக்கிறார். அதைக் குறித்து நாம் எதுவும் செய்ய முடியாதவர்களாகவும் இருக்கிறோம். "ஜென்ம சுபாவமான மனுஷனோ (அதாவது உயிர்ப்பிக்கப்படாத மனிதன்) தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். கடவுளுக்கடுத்த காரியங்கள் ஏதோ மனிதபுத்திக்கு எட்டாதது போலிருப்பது இதில் பிரச்சனையல்ல. அவனுக்கு அவைகள் பைத்தியமாகத் தோன்றுவதே பிரச்சனை. "மனிதன், தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்". அவைகள் அவனுக்கு மிகுந்த முட்டாள்தனமாகத் தோன்றுவதால்தான் அவைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறான்.

ஏற்றுக் கொள்ள இயலாது என்று சொல்லும்போது, அதை ஏற்றுக் கொள்ள அவனுக்கு சரீர பெலன் இல்லை என்று அர்த்தம் கொள்ளாமல், அவனுடைய சுபாவத்தினால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் ஆவிக்குரியவைகளை "ஏற்றுக் கொள்ளான்” என்று பவுல் எழுதும்போது, அவனுடைய இருதயம் கடவுளின் காரியங்களை ஏற்றுக் கொள்வதை எதிர்க்கிறது எனக் குறிப்பிடுகிறார். அப்படி எதிர்ப்பதற்குக் காரணம், அவை முட்டாள்தனமாக இருப்பதால்தான் என அவன் மனது சமாதானம் சொல்லிக் கொள்கிறது என்று அர்த்தங்கொள்ளுகிறார். எதிர்ப்பு முழுமையாக இருப்பதால் இருதயத்தால் ஆவிக்குரியவைகளை ஏற்கமுடியாமல் போகிறது. இது மனிதனுடைய இயலாமையைக் காண்பிக்கிறது. ஆனால், இது அவன் மேல் திணிக்கப்பட்ட இயலாமை அல்ல. உயிர்ப்பிக்கப்படாத மனிதனுக்கு, கடவுளுக்குரியவைகளை ஏற்கும் மனம் இல்லாததால்தான் அவன் கடவுளுடையவைகளை ஏற்க இயலாதவனாயிருக்கிறான். அவனுடைய மனநிலை, பாவம் செய்வதற்கே மிகவும் ஆர்வமாக இருப்பதால் அவனால் நல்லதைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அது ஒரு உண்மையான, பயங்கரமான அடிமைத்தனம். ஆனால் அது குற்றமற்ற அடிமைத்தனம் அல்ல.

7) மறுபிறப்பில்லாத நிலையில், நம்மால் கிறிஸ்துவிடம் வந்து, அவரைக் கர்த்தராக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது (யோவா 6:44, 65; 1கொரி 12:3).

"பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாது" என்று பவுல் தெரிவிக்கிறார் (1கொரி 12:3). மேடையில் நடிக்கிற ஒரு நடிகனோ அல்லது சபையிலுள்ள மாய்மாலக்காரனோ "கிறிஸ்துவே கர்த்தர்" என்கிற வார்த்தையை பரிசுத்தஆவியின் உதவியின்றி கூறவே முடியாது என்று பவுல் குறிப்பிடவில்லை. ஆவியினால் பிறவாத எவனும், அப்படி சொல்வதின் உள்ளான அர்த்தத்தை உணர்ந்து அவ்வாறு கூற முடியாது என்று பவுல் குறிப்பிடுகிறார். மரித்துப்போன, இருளில் இருக்கிற, கடினமுள்ள, எதிர்க்கிற குணமுடைய இருதயத்தால், இயேசுக்கிறிஸ்து தனது வாழ்க்கையை ஆளுகிற ஆண்டவராக இருக்கிறார் என்கிற உண்மையை, மறுபிறப்படையாமல், சந்தோஷத்துடன் கூற முடியாது.

அல்லது, இயேசுவே யோவான் 6ல் 3 முறை கூறுவது போல, பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் அவரிடத்தில் வரமாட்டான். பிதா இழுத்துக் கொள்ளும்போது ஒருவன் இயேசுக்கிறிஸ்துவோடு ஜீவஇணைப்பைப் பெறுவதைத்தான் நாம் மறுபிறப்பு என்று அழைக்கிறோம். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்" (வச37). "பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (வச44). "ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்" (வச67). இழுப்பது, கொடுப்பது, பெறுவது ஆகிய காரியங்கள் யாவும் மறுபிறப்பில் கடவுள் செய்கிற கிரியைகள். அவை இல்லாவிட்டால் நாம் கிறிஸ்துவிடம் வரமாட்டோம். ஏனென்றால் அவரிடம் வருவதற்கு நமக்கே விருப்பம் இல்லை. மறுபிறப்பில் அதுதான் மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையிலானதும், அவசரமானதுமான பதில்

மறுபிறப்பு ஏன் அவசியம் என்பதற்கு இன்னும் அதிகமான காரியங்களைக் கூறலாம். ஆனால், இந்த தியானத்திற்கு இதுபோதும். ஆச்சரியகரமான நம்பிக்கைகளை அள்ளித்தரும் எபே 2:4-5 வசனங்களைத் திரும்பவும் ஒரு முறை படித்து விட்டு, முடிவுக்கு வருவோம். "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்".

இதற்கு இரண்டு விதங்களில் மறுமொழி அளிக்கக் கூடும்: பெயரளவிலும், பொதுவான விதத்திலும் இதற்கு பதில் அளிப்பது ஒருவிதம். அடுத்தது, தனிப்பட்ட முறையில் உணர்ந்து, அவசரமாக அளிக்கின்ற பதிலாகும். முதலாவது விதத்தில் கொடுக்கப்படுகிற மறுமொழி: அது எப்படி ஆகும்? இது எப்படி ஆகும் என்கிற கேள்விகளைக் கேட்பது. இரண்டாவது வகையின்படி கூறப்படுவது: என்னை இன்றைக்கு இங்கே அழைத்து வந்தது கர்த்தரே. இந்த வசனங்களின் மூலமாக கர்த்தர் இன்று என்னோடே பேசினார். கடவுளின் இரக்கமும், அன்பும், கிருபையும் தேவை என்பதை உணர்ந்தேன். அவை இன்றைக்கு எனக்கு எவ்வளவு அருமையானதாகத் தென்படுகிறது!. ஓ! கர்த்தாவே என்னை இங்கு இன்று அழைத்து வந்த உமது கிருபைக்கு ஒப்புவிக்கிறேன். உமது கிருபை என்னை விழித்தெழச் செய்தது, என்னை மென்மையாக்கிற்று, இருதயத்தைத் தொட்டது. தேவனுடைய இரக்கத்தின் ஐசுவரியத்திற்கும், மிகுந்த அன்பிற்கும், கிருபையின் வல்லமைக்கும் மிகுந்த நன்றி.