தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள். அவரிடத்தில் பாவமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான். இதினால் தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.

இன்றைக்கு நாம் சந்திக்கப் போகிற கேள்வி, மறுபிறப்பின் அற்புதத்தை அனுபவித்த மக்கள், இரட்சிப்பின் பூரண நிச்சயத்தோடு வாழ முயற்சிக்கையில், தங்கள் பாவநிலையை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? அதாவது, ஒருபுறம் மறுபடியும் பிறந்திருப்பதின் தன்மை, மறுபுறம் நம்மில் தொடர்ந்து இருக்கிற பாவநிலை ஆகிய இவை இரண்டிற்கிடையேயுள்ள போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? இரட்சிப்பின் நிச்சயத்தை இழந்து போகிறதான ஆபத்தான நிலைமையையும், மறுபடியும் பிறக்காமலேயே மறுபடியும் பிறந்திருப்பதாக துணிகரமாக நினைத்துக் கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலமையையும் எப்படி சரியானபிரகாரம் எடைபோடுவீர்கள்? மறுபிறப்பின் நிச்சயத்தை அனுபவிக்கிறவர்களாகவும், அதே சமயத்தில் மறுபிறப்பிற்கே சற்றும் சம்பந்தமில்லாத நமது வாழ்வின் பாவநிலையை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளாமலும் வாழ்வதெப்படி?

இந்த அனுதின போராட்டத்தில், வேதத்தின் மற்ற புத்தகங்களைக் காட்டிலும் நமக்கு உதவியாயிருக்கும்படிக்கே எழுதப்பட்டது போல இருக்கிறது யோவானின் முதலாம் நிருபம். 1யோவா 5:13ஐ கவனியுங்கள்: "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், . . . தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்". விசுவாசிகள், தாங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்கிற பூரணநிச்சயமுடையவர்களாயிருக்கவும், தாங்கள் என்றுமே அழியாத புதிதான, ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்கிற நிச்சயத்தை அடைய உதவியாயிருக்கும்படிக்கே இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கிறது என்று யோவான் கூறுகிறார். மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக நீங்கள் வந்துவிட்டதை இந்த நிருபத்தின் மூலமாக நீங்கள் நிச்சயத்தோடு உணர்ந்துகொள்ள வேண்டும் என்று கடவுளும் யோவானும் விரும்புகிறார்கள்.

1யோவா 3:14 கூறுகிறது, "நாம் . . மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்". இயேசுவும் யோவா 5:24ல் கூறுகிறார்: "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". நியாயத்தீர்ப்பு நமக்கு நீங்கிவிட்டது, மரணமும் நமக்கு நீங்கிவிட்டது, ஏனென்றால் நமக்கு பதிலாக நமது இடத்தில் இயேசு நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டார், நமக்கு பதிலாக இயேசு மரித்ததின் மூலமாக மரணமும் நம்மை விட்டு நீங்கிப் போயிற்று. இதை விசுவாசிகளாகிய நாம் அறிந்து கொள்ள வேண்டுமென யோவானும் இயேசுக்கிறிஸ்துவும் வைராக்கியம் கொண்டிருக்கிறார்கள். இதன்காரணமாக, நம்மில் புதிதானஜீவன் உருவாகியிருக்கிறது, இந்த ஜீவன் அழியாதது, இதை எடுத்துப்போட முடியாது. அது நித்தியமானது. இந்த நிச்சயத்தைதான் நீங்கள் பெறும்படியாக யோவானும் இயேசுக்கிறிஸ்துவும் விரும்புகிறார்கள். "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறிய, . . . உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்" (1யோவா 5:13).

கள்ளப் போதகர்களின் அறிவீனம்

யோவான் இந்தக் கடிதத்தை எழுதுகின்ற சபைகளில் நடந்து கொண்டிருந்த ஏதோவொரு விஷயம் அவரை மிகவும் பாதித்திருக்கின்றது. அது எதுவாக இருந்தாலும், இரட்சிப்பின் நிச்சயத்தை அழித்துவிடுமோவென அஞ்சத்தக்கதாக அது இருந்திருக்கிறது. நற்காரியங்களையும், உறுதியான நிச்சயத்தையும் உண்டாக்குவது போன்ற செய்தியை அளிக்கிற கள்ளப்போதகர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் அவர்கள் கூறுவதற்கு எதிர்மறையான விளைவுகளையே அப்போதனைகள் அளித்தன. இந்தக் கள்ளப்போதகர்களை சந்திக்கும்விதமாக யோவான் பதில் கூறும்போது, இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெறுவதற்கு போராடுகையில் நமது சொந்த பாவங்களை எவ்விதமாக சமாளிப்பது என்று நமக்குக் காண்பிக்கிறார். அந்தக் கள்ளப் போதகர்கள் என்ன போதித்தார்கள்?

முதலாவதாக, ஏற்கனவே இருந்தவராகிய தேவனுடைய குமாரனான இயேசுக்கிறிஸ்து மாமிசத்தில் வரவில்லை எனக் கூறினார்கள். ஏற்கனவே இருப்பவராகிய தேவகுமாரன், நம்மைப் போன்றதான மாமிச சுபாவத்தோடு முற்றிலும் இணைந்தவராக ஆனார் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவர்களைக் குறித்து யோவான் கூறுவதை பாருங்கள், 1யோவா 4:1-3: "பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால், மாம்சத்தில் வந்த இயேசுக்கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுக்கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல."

இயேசுக்கிறிஸ்துவை மாமிசத்திலிருந்து பிரித்தல்

கிறிஸ்தவத்தின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட இந்த கள்ளப் போதனையைக் குறித்து நாம் அதிகமாக கூறலாம் என்றாலும், இன்றைக்கு நான் ஒரு காரியத்தில் மாத்திரம் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்தக் கள்ளப் போதகர்கள் இயேசுவையும் அவர் மாமிசத்தில் வந்ததையும் பிரித்தனர். 2ஆம் வசனத்தில் பாருங்கள்: "மாம்சத்தில் வந்த இயேசுக்கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது." ஏற்கனவே இருப்பவராகிய இயேசுக்கிறிஸ்துவை மாமிச சரீரத்தோடு தொடர்புபடுத்துகின்ற கருத்தை அவர்கள் விரும்பவில்லை.

நமது இன்றைய கேள்வியோடு தொடர்புடையதான காரணத்தை நாம் இங்கே காண்கிறோம். இயேசுக்கிறிஸ்துவை மாமிச சரீரத்தையுடையவராக பார்க்காமல் இருப்பது, இந்த கள்ளப் போதகர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பார்க்கிற விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயேசுவை அவர்கள் சரீரவாழ்க்கையிலிருந்து பிரித்தது போலவே, கிறிஸ்தவர்களையும் அவர்களுடைய சாதாரண உலகவாழ்க்கையிலிருந்து பிரிக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களை மாமிசத்திலிருந்து பிரித்தல்

இதை இன்று நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வசனபகுதியிலேயே காணலாம்: 1யோவா 3:7ல் யோவான் கூறுகிறார், "பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் (கள்ளப் போதகர்களை மனதில் வைத்துக் கூறுகிறார்) வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." அவர் என்ன சொல்லுகிறார்? நீங்கள் நீதியைச் செய்யாமலேயே நீதிமான்களாயிருக்கலாம் என்று போதிக்கிற கள்ளப் போதகர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார். "ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் . . நீதியுள்ளவனாயிருக்கிறான்".

வேறுவிதமாகச் சொல்வோமானால், இயேசுக்கிறிஸ்துவை சரீரவாழ்க்கையிலிருந்து அவர்கள் பிரிப்பதை மாத்திரம் யோவான் எதிர்க்கிறவராக இராமல், கிறிஸ்தவர்களையும் அவர்கள் சரீரத்திலிருந்து செய்ய வேண்டியதான காரியங்களை பிரித்து கள்ளப்போதகர்கள் போதிப்பதையும் அவர் எதிர்க்கிறார்: "இயேசுக்கிறிஸ்துவுக்கு சரீரம் ஒரு பொருட்டல்ல, ஆவிக்குரியபிரகாரமாக அவர் கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதே முக்கியம். ஏற்கனவே இருப்பவரான கிறிஸ்துவுக்கும், மனிதனாகிய இயேசுவுக்கும் உண்மையில் தொடர்பில்லை. அதுபோலவே நமது சரீரமும் ஒரு பொருட்டல்ல. நாம் எப்படியோ ஆவிக்குரியபிரகாரமாக மறுபடியும் பிறந்திருக்கிறோம். இந்த புதுசிருஷ்டிக்கும், நாம் சரீர வாழ்க்கையில் செய்கின்ற நீதிக்கோ பாவத்திற்கோ எந்த சம்பந்தமுமில்லை". இந்த தவறைத்தான் 1யோவா 3:7ல், யோவான் சுட்டிக் காண்பிக்கிறார். அதாவது உங்கள் வாழ்க்கையில் நீதியைச் செய்யாமலேயே நீங்கள் ஆவிக்குரியபிரகாரமாக நீதியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிற அவர்களுடைய தவறான போதனையை சுட்டிக் காண்பிக்கிறார்.

இந்த கள்ளப்போதகர்களுக்கு யோவான் மூன்று பதில்களைத் தருகிறார்

கிறிஸ்து மனிதனாக அவதரித்தது என்றென்றும் நிலைநிற்கும்

இயேசுவுடைய மாமிசத்தையும், ஏற்கனவே இருந்தவராகிய கிறிஸ்துவையும் பிரிக்கவே முடியாது என்பதை யோவான் முதலாவதாக வலியுறுத்திக் கூறுகிறார். 1யோவா 4:2: "தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால், மாம்சத்தில் வந்த (வந்திருக்கிற) இயேசுக்கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது". (குறிப்பு: தமிழ் வேதாகமத்தில் "மாம்சத்தில் வந்த" என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "மாம்சத்தில் வந்திருக்கிற" என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும். இவ்வாறுதான் ஆங்கில வேதாகமத்தில் உள்ளது. இந்தக் கருத்தை கீழே ஜான் பைப்பர் வலியுறுத்துகிறார்). வந்த என்று இருந்தால் இது சிலகாலம் நிகழ்ந்து பின்னர் முடிந்து போனது என்று பொருள்படும். வந்திருக்கிற என்று சொல்லும்போது அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள்படும்.

இயேசுவின் மனிதஅவதாரம் என்றென்றைக்கும் நிலைத்திருப்பது. திரித்துவத்தின் இரண்டாம் நபர் என்றென்றுமாக மனித சுபாவத்தோடு இணைக்கப்பட்டவராயிருப்பார். நாம் எப்போதும் அவரை இயேசுவாக, நம்மைப் போன்றவராக, எல்லையில்லாத அளவில் நமக்கு மேலானவராக - அநேகம் சகோதரரில் முதற்பேறானவராக (ரோம 8: 29) அறிந்திருப்போம். கடவுள் தாம் உருவாக்கின மாமிச சிருஷ்டிகளை ஒருபோதும் அறுவெறுக்கவில்லை. அவர் மாமிசத்தில் வந்தார். தேவகுமாரன் என்றென்றுமாக மாமிச சரீரத்தில் இருக்கிறார். கிறிஸ்துவைக் குறித்த அவர்களுடைய கள்ளப் போதனையை சரிப்படுத்தும் விதமாக யோவானின் முதலாவது பதில் அமைந்திருக்கிறது. அவர் மாமிசத்தில் வந்தார் என்பது கற்பனையல்ல. அது இரண்டாம் பட்சமானதுமல்ல. அது அவசியமற்றது எனக் கூறமுடியாது. அவர் சரீரத்தில் அடைந்த தழும்புகள் என்றென்றைக்கும் அவரை அடையாளங்காட்டும்.

கிறிஸ்தவ செயல்கள் உயிருள்ள தன்மையை உறுதிப்படுத்தும்

ஒருவனின் ஆவிக்குரிய வாழ்க்கையையும் அவன் செயல்படும் விதத்தையும் பிரித்துப் பார்க்கிற கள்ளப்போதனையை அழுத்தந்திருத்தமாக மறுக்கும் விதத்தில் யோவானின் இரண்டாவது பதில் அமைந்திருக்கிறது. சொல்லப்போனால், ஒருவனின் ஆவிக்குரிய தன்மை, அவன் செயல்படுகிற விதத்தில் பிரதிபலிக்க வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார். அப்படி இல்லையானால் அவன் ஆவிக்குரியவனல்ல என்கிறார். இதைத்தான் நாம் 1யோவா 3:7ல் பார்த்தோம்: "பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்". வஞ்சிக்கிறவர்கள் சொல்லுகிறதாவது: நீங்கள் நீதியைச் செய்யாமலிருந்தாலும் நீதியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஆனால் யோவான் சொல்லுகிறார்: நீதியைச் செய்கிறவன் மாத்திரமே நீதிமான். செய்கை, உயிருள்ள நிலையை உறுதிப்படுத்தும்.

இதைத்தான் யோவான் திரும்பத் திரும்ப இந்த நிருபத்திலே கூறிக்கொண்டேயிருக்கிறார். உதாரணமாக 1யோவா 2:29ல் அவர் கூறுகிறார், "அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்". வேறுவிதமாக சொல்வதானால், நீதியைச் செய்வதே ஒருவன் மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கு நிருபணமாகவும் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

பாவஞ்செய்யாதிருத்தல்: மறுபிறப்பிற்கு நிருபணம்

1யோவா 3:9ஐ கவனியுங்கள்: "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்". ஒருவன் பாவம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பது அவன் மறுபடியும் பிறந்தவனல்ல என்பதற்கு நிருபணமாகவும் அதை உறுதிசெய்வதாகவும் இருக்கிறது. செயல்பாடுகள் உயிருள்ள தன்மையை உறுதிப்படுத்துகிறது. பாவஞ்செய்யாமை, மறுபடியும் பிறந்திருப்பதை நிருபித்து உறுதிப்படுத்துகிறது.

பாவ வாழ்க்கையை மறுபிறப்பு மாற்றுவதற்குக் காரணம், நாம் மறுபடியும் பிறந்தபோது "தேவனுடைய வித்து" நமக்குள் தரித்திருப்பதாலும், நம்மால் "தொடர்ந்து பாவம் செய்ய முடியாததாலும்" என்று யோவான் கூறுகிறார். நமது தினசரி வாழ்க்கைக்கும் மறுபிறப்புக்கும் சம்பந்தமிருப்பது எவ்வளவு நிச்சயம். வித்து என்பது தேவனுடைய ஆவியாயிருக்கலாம் அல்லது தேவனுடைய வார்த்தையாக இருக்கலாம் அல்லது தேவனுடைய தன்மையாக இருக்கலாம் - அல்லது இம்மூன்றுமாகவே இருக்கலாம். அது என்னவாக இருந்தாலும், மறுபிறப்பில் தேவனே வல்லமையாக கிரியை செய்கிறபடியால் அவர்கள் தொடர்ந்து பாவம் செய்து கொண்டேயிருக்க முடியாது. பாவதன்மையோடு தேவனுடைய வித்தினால் ஒத்துப் போக இயலாது.

ஆவிக்குரிய நிலையையும் சரீரத்திற்குரிய நிலையையும் பிரிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த கள்ளப் போதகர்களுக்கு மனிதஅவதாரத்தைக் குறித்தும் உயிர்ப்பிக்கப்படுதலைக் குறித்தும் ஒன்றும் விளங்கவில்லை. ஏற்கனவே இருந்தவராகிய கிறிஸ்து, மனிதஅவதாரத்தில், ஒரு மாமிச சரீரத்தில் உண்மையாகவே இணைக்கப்பட்டிருக்கிறார். மறுபிறப்பில், கிறிஸ்துவில் உருவாகிற புதுசிருஷ்டியானது, தவிர்க்க முடியாததான, கீழ்ப்படிகின்றதான, மெய்யான விளைவுகளை நமது சரீரவாழ்க்கையில் ஏற்படுத்துகிறது.

மறுபிறப்படைந்தவர்களில் பாவமேயில்லை என்கிற கருத்தை ஏற்பதற்கில்லை

மறுபிறப்படைந்தவர்களிடம் எந்த பாவமும் இல்லை என்கிற தவறான போதனையைத் தள்ளிவிடுகிறது யோவானின் மூன்றாவது பதில். "நீதிமானாக இருப்பதையும்" நீதியைச் செய்வதையும்" (3:7) பிரித்ததினால் இந்த கள்ளப் போதனை ஏற்பட்டதென்பது தெளிவாகத் தெரிகிறது . இதன் காரணமாக அவர்கள் என்ன சொல்லக் கூடுமென்றால், "உங்கள் சரீரமானது பாவகரமான காரியம் எதையும் செய்தாலும், அதை உண்மையில் நீங்கள் செய்யவில்லை. உங்களிலுள்ள மறுபிறப்படைந்த தன்மையே உங்களுடைய உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலையானது, உங்களது தினசரி வாழ்க்கையைக் காட்டிலும் மேலான நிலையிலுள்ளது. அது பாவத்தினால் கறைபட முடியாதது" என்பார்கள்.

நீங்கள் யாரென்பதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் இந்தக் கள்ளப் போதகர்கள் பிரித்து வைப்பதினால், கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பாவமே செய்ய மாட்டார்கள் என்கிற கருத்தை அவர்கள் கூறுவதற்கு வழி ஏற்படுகிறது. அவர்களால் எப்படி முடியும்? அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். அவர்கள் புது சிருஷ்டிகள். அவர்களில் தேவனுடைய வித்து தரித்திருக்கிறது. இதனால் யோவான் மூன்று விதங்களில் அந்தத் தவறை திருத்த வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்களும் காண வேண்டியது அவசியமாயிருக்கிறது.

1) பாவமில்லாத கிறிஸ்தவர்கள் யாருமில்லை

1யோவா 1:8: "நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது". நாம்! நாம் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள். வேறுவிதமாக சொல்வதானால், இந்தக் கள்ளப் போதகர்களின் போதனைகளினால் உங்களை நீங்களே வஞ்சித்துக் கொள்வதற்கு இடம் கொடாதேயுங்கள். பாவமில்லாத கிறிஸ்தவர்கள் ஒருவருமில்லை.

2) மறுபிறப்படைந்தவர்களுக்கு பரிந்து பேச ஒருவர் இருக்கிறார்

1 யோவா 2:1: "என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுக்கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்". வேறுவிதமாக சொல்வோமானால், நீங்கள் பாவம் செய்தீர்களானால், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல என்று யோவான் கருதவில்லை. நீங்கள் பாவம் செய்தால் உங்களுக்காகப் பரிந்து பேசுகிறவராக இயேசுக்கிறிஸ்து இருக்கிறார் என்று அவர் கூறுகிறார். மறுபிறப்படைந்தவர்களுக்கு மாத்திரம்தான் அவர் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

3) மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு

1 யோவா 5: 16-17: "மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன். அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு. அதைக் குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன். அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு".

கடைசி வாக்கியத்தை கவனியுங்கள் : "மரணத்துக்கேதுவல்லாத பாவமுமுண்டு". இதனால்தான் உங்கள் சகோதரன் பாவம் செய்வதை நீங்கள் காண்கிறீர்கள். அவன் உங்கள் சகோதரன். மறுபடியும் பிறந்தவன். அவன் பாவம் செய்கிறான். இது எப்படி நடக்கும்? ஏனென்றால் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமும் உண்டு. யோவான் சிலவிதமான பாவங்களைக் குறிப்பிட்டு சொல்லுகிறார் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், பழக்கத்தின் காரணமாக இடைவிடாமல் செய்கிறதும் அவை ஆழமாக வேரூன்றிப் போயிருப்பதுமானவைகளையே குறிப்பிடுகிறார். வழியைவிட்டு விலகச் செய்கிறதான விடாப்பிடியான சில பாவங்கள், மனமாறுதலைத் தேடியும் கண்டடையக் கூடாத, ஏசாவைப் போன்ற நிலமைக்கு இட்டுச் சென்றுவிடும் (எபி 12:16-17).

மறுபடியும் பிறந்தவர்கள் பாவத்தை எப்படி சமாளிக்கிறார்கள்?

நாம் ஆரம்பத்தில் எழுப்பின கேள்விக்கே இப்போது வந்துவிட்டோம்: மறுபிறப்பின் அற்புதத்தை அனுபவித்த மக்கள், இரட்சிப்பின் பூரண நிச்சயத்தோடு வாழ முயற்சிக்கையில், தங்கள் பாவநிலையை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்னுடைய விடை: யோவானின் போதனையை உபயோகித்து அதை சமாளியுங்கள். யோவான் மாய்மாலத்தைக் குறித்து எச்சரிக்கிறார் (மறுபிறப்பு அடைந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கையில் அதற்கு எதிர்மாறாக நடப்பது). மேலும் பாவிகளுக்கான கிறிஸ்துவின் கிருபாதார பலியையும் அவருடைய பரிந்து பேசுதலையும் குறித்து யோவான் சந்தோஷத்தோடு அறிவிக்கிறார்.

கேள்வி என்னவென்றால்: இந்த இரண்டு உண்மைகளையும் நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்? உங்களையே வஞ்சித்துக் கொள்ளாதபடிக்கு அவருடைய எச்சரிப்பை நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள்? "நாம் பாவம் செய்வோமானால் நமக்காக பரிந்து பேசுகிறவர் இருக்கிறார்" என்கிற வாக்குத்தத்தத்தை எவ்விதத்தில் பயன்படுத்துகிறீர்கள்? இந்த இரண்டு உண்மைகளும் உங்கள் வாழ்க்கையில் எப்படி செயல்படுகிறது என்பதே உங்களுடைய மறுபிறப்பிற்கு நிருபணமாயிருக்கிறது.

நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால் அவை இப்படியாக செயல்படும்:

1) துணிகரத்தை விட்டோடி, பரிந்து பேசுகிறவரை நாடுதல்

உங்களுடைய சொந்த பாவநிலையைக் குறித்து அணலற்றும், கவலையீனமாகவும், துணிகரமானதொரு மனநிலைமைக்குள்ளாக நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தமாக வாழ்கிறீர்களா அல்லது உலகப்பிரகாரமாக இருக்கிறீர்களா என்பதைக் குறித்து சிந்திக்காமல் இருக்கிறீர்கள். தீயசிந்தனைகளையும் தீயபழக்கவழக்கங்களையும் குறித்த விழிப்புணர்வை இழந்து - பாவகரமான நிலமைக்குள்ளாக மூழ்கத் தொடங்குகிறீர்கள்.

மறுபடியும் பிறந்தவர்கள் இவ்வித அனுபவத்துக்குள்ளாகும்போது, 1யோவா 3:9ல் சொல்லப்பட்டிருக்கும் சத்தியமானது ("தேவனால் பிறந்தவனெவனும் பாவஞ்செய்யான்") பரிசுத்தஆவியினால் அவனில் கிரியை செய்யும். அவனை அவனுடைய அபாயகரமான பாவநிலையிலிருந்து எழுப்பி, தனக்காக பரிந்து பேசுகிறவரிடமும், அவருடைய கிருபாதார பலியினிடமும், பாவமன்னிப்பையும் நீதியையும் நாடி ஓடச் செய்யும். அவரிடம் தனது பாவங்களை அறிக்கையிட்டு பரிசுத்தமாகுதலைப் பெற்றுக் கொள்கிறான் (1:9), கிறிஸ்துவின் மீதுள்ள அவனது அன்பு புதுப்பிக்கப்படுகிறது. அவரோடுள்ள இனிய தொடர்பு மீண்டும் கிடைக்கிறது. பாவத்தை வெறுக்கிற நிலை மறுபடியும் உருவாகிறது. கடவுளின் சந்தோஷமே மறுபடியும் அவனுக்கு பெலனாகிறது.

2) நம்பிக்கையின்மையை விட்டோடி, பரிந்து பேசுகிறவரை நாடுதல்

நீங்கள் பயத்திலும், தைரியமின்மையிலும் மூழ்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய நீதியிலும், மற்றவர்கள் பேரில் அன்பு செலுத்துதலிலும், பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும் பெரிதும் குறைவுடையவர்களாயிருக்கிறீர்கள் என்கிற அவநம்பிக்கை உடையவர்களாயிருக்கிறீர்கள். உங்களுடைய மனசாட்சி உங்களை கடிந்து கொள்கிறது. மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று நிருபிக்க முடியாதபடிக்கு உங்களுடைய செயல்கள் மிகவும் குறைவுள்ளதாகத் தோன்றுகிறது.

மறுபடியும் பிறந்தவர்கள் இந்த நிலையை அனுபவிக்கும்போது, 1யோவா 2:1ல் உள்ள சத்தியம், பரிசுத்தஆவியானவராலே, அவனை அவனுடைய அவநம்பிக்கையிலிருந்து மீட்கிறது: "என் பிள்ளைகளே, (அவர்களுடைய மனசாட்சியோடு மென்மையாக பேசவிரும்புகிறார்), நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுக்கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்".

மாய்மாலத்தைக் குறித்ததான யோவானின் எச்சரிக்கை, உங்களை மலைச்சரிவு போன்ற துணிகரத்திலிருந்து திருப்புகிறது. பரிந்து பேசுகிறவரைக் குறித்ததான அவருடைய வாக்குத்தத்தம், பள்ளத்தாக்கு போன்ற அவநம்பிக்கையிலிருந்து உங்களை மீட்கிறது.

மீட்கும் வல்லமையுடைய கர்த்தரின் வார்த்தை

மறுபிறப்பானது உங்களை வசனத்தை கேட்கும்படியாகவும், அதை பயனுள்ளதாகவும் மீட்கும்வகையிலும் உபயோகித்துக் கொள்ள வைக்கிறது. "நமக்காக பரிந்து பேசுகிறவர் இருக்கிறார்" என்கிற வாக்குத்தத்தத்தை, பாவத்தை அலட்சியப்படுத்தும் நோக்கத்தில், மறுபிறப்பு உபயோகிக்காது.

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்" என்கிற எச்சரிப்பை, அவநம்பிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மறுபிறப்பு உபயோகிக்காது. யோவானின் போதனையை எப்படி உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்கிற பகுத்தறிவை மறுபிறப்பு உருவாக்குகிறது: அந்த எச்சரிப்புகளினால் மறுபிறப்பு, தூய்மையையும் தெளிவையும் பெறுகிறது. பரிந்து பேசுகிறவரையும், கிருபாதாரபலியையும் குறித்த வாக்குத்தத்தத்தினால் மறுபிறப்பானது உற்சாகத்தையும் வலிமையையும் அடைகிறது.

தேவனுடைய வார்த்தைக்கு இவ்விரண்டு விதமாக நீங்கள் செயல்படுவதின் மூலமாக தேவன்தாமே உங்கள் மறுபிறப்பை உறுதிப்படுத்துவாராக. இந்த எச்சரிப்பையும் வாக்குத்தத்தத்தையும் நீங்கள் பற்றிக் கொண்டு, உங்கள் இரட்சிப்பின் பூரண நிச்சயத்தைக் காத்துக் கொள்வதில், அவைகளை சரியானபடி ஆவிக்குரிய விதத்தில் உபயோகிக்க தேவன்தாமே அருள் செய்வாராக.