உயிர்ப்பிக்கப்படுதல், விசுவாசம், அன்பு என்கிற வரிசைப்படி

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

நாம் பிறர் மீது அரைகுறையாகவாவது அன்பு செலுத்த முடிவதற்கு அடித்தளமாக இருப்பது, இயேசுக்கிறிஸ்துவில் நாம் அவர்களை பூரணமாக நேசிக்கிறவர்களாக இருக்கிறோம் என்பதாலேயே. இதை உங்களுக்கு நிச்சயப்படுத்துவதே இன்றைக்கு என்னுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. வேறுவிதமாக சொல்வோமானால், நீங்கள் அன்புசெலுத்த வேண்டிய அளவுக்கு செலுத்தாமல் தோல்வியுற்றாலும், கிறிஸ்துவின் பூரணத்துவமானது உங்களுடைய தோல்வியை ஈடு செய்யும் விதத்தில் கடவுளுக்கு முன்பாக நிற்கிறதென்பதை நீங்களே உணர வேண்டுமென விரும்புகிறேன். மக்கள் பேரில் வைக்கும் அன்பினால் அல்ல, கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமே கிறிஸ்துவோடுள்ள இணைப்பை அனுபவிக்கும் வழிமுறையாகும் என்பதை நீங்கள் கண்டுணர வேண்டுமென விரும்புகிறேன். எனவே விசுவாசமே முதலாவது வந்து, அன்பிற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். அது அன்பினின்று வேறுபட்டதாயிருக்க வேண்டும். இல்லையானால், அன்பானது அழிக்கப்பட்டுவிடும்.

இந்த விதத்தில் அன்பானது ஏற்படவில்லையென்றால், குற்றமனப்பான்மையினாலும் நம்பிக்கையின்மையினாலும் உங்களது தோல்விகளினால் மேற்கொள்ளப்படுவீர்கள். அப்படி நிகழ்ந்ததானால் ஒன்று நீங்கள் கடுமையாக சட்டதிட்டங்களுக்குள் உங்களை உட்படுத்திக் கொள்வீர்கள் அல்லது ஒழுக்கமில்லாது அழிவுக்குள்ளாவீர்கள்.

1 யோவா 5: 3-4 வசனங்களின் கருத்துக் கோர்வை

1 யோவா 5: 3-4 வசனங்களில் நாம் கடந்த வாரத்தில் சிந்தித்த காரியங்களைத் தொடர்ந்து நோக்குவோம். நாம் ஏன் அதை செய்யப் போகிறோமென்றால், மறுபிறப்பு, கிறிஸ்துவில் விசுவாசம், மக்களிடம் அன்பு செலுத்துதல் ஆகிய இவை அனைத்தும் எவ்விதத்தில் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கே. உங்களுடைய வேதத்திலிருந்து இவைகளை நீங்களே பார்த்தறியப் போகிறீர்களா அல்லது அவைகளை நான் விசுவாசிப்பதைக் குறித்து கேட்கப் போகிறீர்களா -உங்கள் வேதத்திலிருந்து பார்த்தறிவதே உதவும்.

முதலாம் இணைப்பு: பிறரை நேசித்தல்

3ஆம் வசனம் கூறுகிறது, "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளும் அல்ல". சிலசமயங்களில் மக்கள் கடவுளிடம் அன்புகூருவதை அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுதலுக்கு சமமாக கருதுவார்கள். அதற்கு அவர்கள் யோவா 14:15ஐ குறிப்பிடுவார்கள்: "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்". ஆனால் இந்த வசனமோ கிறிஸ்துவில் அன்புகூருவதை அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காண்பிக்கிறது. என்னிடத்தில் அன்புகூருவதென்பது ஒரு காரியம் - நீங்கள் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதென்பது மற்றொரு காரியம். ஒன்று மற்றொன்றிற்கு வழிநடத்திச் செல்கிறது. ஒன்று உங்களிடத்தில் இருந்தால், நீங்கள் மற்றதை செய்வீர்கள். அன்புகூருதலும் கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சமமானவை அல்ல.

இயேசுவில் அன்புகூருவதோ அல்லது கடவுளில் அன்புகூருவதோ அவர் கட்டளைகளின்படி செய்வதை உள்ளடக்கியே இருக்கிறது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் அது மாத்திரமல்ல காரியம். அதனால்தான் 1 யோவா 5:3ல், யோவான், "அவருடைய கற்பனைகள் பாரமானவைகளும் இல்லை" என்கிறார். கடவுளில் அன்புகூருவதென்பது வெறும் வெளிப்படையான கீழ்ப்படிதல் மாத்திரமல்ல. அவருடைய கற்பனைகளை பாரமாக நினைக்காத ஒரு இருதயத்தைக் கொண்டிருப்பதாகும்.

அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்றால், அவை எப்படிப்பட்டவை? அவைகள் விரும்பத்தக்கவைகள். நீங்கள் முழுமனதாலும் செய்ய விரும்புகிறவைகள் உங்களுக்கு பாரமாகவே இராது. சங்கீதக்காரன் சொல்வதை கவனியுங்கள். சங் 40:8: "என் தேவனே, உமக்குப் பிரியமானதை செய்ய விரும்புகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது". சங் 119:24: "உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது". சங் 119:35: "உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன்". சங் 119:82: "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்". கடவுளில் அன்புகூருதல் என்பது அவரை நம்பத்தகுந்தவராக வியந்து, மதித்து, பொக்கிஷமாகக் கருதி, அவரில் மிகுந்த மனமகிழ்ச்சியாக இருந்து, அவருடைய சித்தமே உங்களுக்கு மனமகிழ்ச்சியாகவும் பாரமற்றதாகவும் எண்ணுவதாகும்.

கடவுளின் எந்தக் கற்பனைகள்?

வசனங்கள் 3, 4இல் உள்ள இணைப்புக்கு நாம் போவதற்கு முன்பாக, கடவுளின் எந்தக் கற்பனைகளை மனதில் வைத்தவராக யோவான், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரில் அன்பு வைப்பதாகும் என்று குறிப்பிடுகிறார் என்பதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். 4:20 முதல் உள்ள வசனங்களின் கருத்துக் கோர்வையை நாம் விளங்கியிருந்தோமானால் அது வெளிப்படையாகவே இருப்பதைக் காண்போம். 4:20ல் யோவான் கூறுகிறார், "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்". ஆகவே, குறிப்பாக நாம் கீழ்படிய வேண்டிய கட்டளையாக யோவான் மனதில் வைத்திருப்பது, மற்றவர்களில் அதுவும் சகோதரரில் அன்புகூருவதன் மூலமாக நாம் கடவுளில் அன்புகூருகிறவர்களாகக் காணப்படுவோம் என்பதாகும்.

1யோவா 5:1லும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்: "பிறப்பித்தவனிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்". அதேதான் மீண்டும்: நீங்கள் கடவுள்பேரில் அன்புகூருகிறீர்கள் என்பதற்கு அடையாளம், மற்றவர்களில், முக்கியமாக மற்ற சகோதரரிடத்தில் அன்புகூருவதாகும். 2ஆம் வசனம் அதையே வேறுவிதமாக, நீங்கள் கடவுளிடத்தில் அன்புகூருவதே அவருடைய பிள்ளைகளிடத்திலும் அன்புகூருகிறீர்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறது: "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்". அன்பு என்றால் என்ன என்பதற்கு உணர்ச்சிபூர்வமான விளக்கம் கொடுத்து, கடவுளையும் அவருடைய கற்பனைகளையும் தள்ளி வைத்துவிடுகிறதான நிலமையிலிருந்து பாதுகாப்பதற்காகவே யோவான் இக்கருத்தை வலியுறுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். யோவான் சொல்வது: நீங்கள் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் கடவுளை நேசிக்காவிட்டால் நீங்கள் யாரையுமே நேசிக்கவில்லை. நீங்கள் ஒருவேளை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். வசனம் 2ல் யோவான் கூறுகிறார், "நாம் தேவனிடத்தில் அன்புகூரும்போது . . தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்."

பிறரில் அன்புகூருவதில் கற்பனைகள் முழுமையடைகிறது

நீங்கள் கடவுளை நேசிக்கவில்லையானால், உங்களால் யாருக்கும் எவ்வித நன்மையும் செய்ய இயலாது. அவர்கள் அழிந்து போய்க் கொண்டிருக்கிறதான நிலைமையிலே ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு உணவளிக்கலாம், உடையளிக்கலாம், இருப்பிடம் அளிக்கலாம், அவர்களை வசதியாக வாழச் செய்யலாம். ஆனால் கடவுளின் மனதில் அன்பு என்பது அதுவல்ல. உணவு, உடை, இருப்பிடமளிப்பதும் அன்புதான் - அத்தோடு கிறிஸ்துவின் மூலமாக கடவுளை அறிந்து நேசிப்பதற்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற கட்டளையையும் அது உள்ளடக்கியுள்ளது. நீங்கள் கடவுளை நேசிக்காதவர்களாயிருந்தால் உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் கடவுளில் அன்புகூராதவர்களாயிருக்கும் பட்சத்தில், நித்தியவாழ்க்கைக்குரிய பலனை ஏற்படுத்தும் விதத்தில் மற்றவர்களை நேசிக்க முடியாது.

இப்போது நமக்கு விடை கிடைத்திருக்கிறது: "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல" என்று யோவான் கூறும்போது, அந்தக் கற்பனைகள் பிறரில், அதிலும் முக்கியமாக சகோதரரில் அன்புகூருவதில் முழுமையடைகிறது என்கிற அர்த்தத்திலேயே சொல்லுகிறார். நாம் 3ஆம் வசனத்தை இவ்வாறாக விளக்கிக் கூறலாம்: "பிறரை, அதிலும் முக்கியமாக அவருடைய பிள்ளைகளை நாம் நேசிப்பதே கடவுளில் அன்புகூருவதாகும். கிறிஸ்துவைப் போல் அன்பு செலுத்துகிற தியாகமனப்பான்மையுள்ள வாழ்க்கையானது நமக்கு பாரமானதும் அல்ல. இப்படியாக செய்வதின் மூலமாக பிதாவிடம் நாம் கொண்டிருக்கிற அன்பை வெளிப்படுத்த நாம் மிகவும் வாஞ்சிக்கிறோம்.

இரண்டாம் இணைப்பு: மறுபிறப்பு

3-4 வசனங்களில் காணப்படுகிற கருத்துக் கோர்வையின் இரண்டாம் இணைப்பை பார்ப்போம்: "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்". கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதின் மூலமாக அவரில் அன்புகூருதல் - அதாவது மற்றவர்களிடத்திலும் அன்புகூருதல் - பாரமானதாக இருக்கப் போவதில்லை என்பதை நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன் என்று யோவான் கூறுகிறார். அவை பாரமானவைகளல்ல, ஏனென்றால், "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்" என்று 4ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

மறுபிறப்பில் நாம் உலகத்தை ஜெயித்திருக்கிறபடியால் நம்மால் கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க முடியும். "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்". கடவுளிலும் மற்றவர்களிலும் நாம் அன்பு செலுத்தாதபடிக்கு தீய சக்திகள் உலகத்தில் கிரியை செய்துகொண்டிருக்கின்றன என்பது இதனால் தெரிகிறது. மறுபிறப்பில் அத்தீயசக்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பிரச்சனை: உலகிலுள்ள சக்திகள்

இந்த சக்திகள் யாவை? இந்நிருபத்தில் இதற்கு மிகத் தெளிவான பதிலைப் பெறுவதற்கு 1யோவா 2:15-17க்குச் செல்வோம்:

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல. அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

உலகில் மேற்கொள்ள வேண்டியதான சக்திகள் (வச 16): "மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும்" ஆகும். ஒட்டு மொத்தமாக இதைக் குறிப்பிட வேண்டுமானால், நம்மிடம் இல்லாதவைகளின் மீது அடங்கா ஆசையும், நம்மிடம் உள்ளவைகளைக் குறித்த பெருமையும் என்று கூறலாம். நாம் விரும்புகிறவைகள் நமக்கு இல்லாதபோது, உலகமானது நம்மை பொருளாசையில் விழப்பண்ணுகிறது. நாம் விரும்புகிறவைகளை நாம் அடைந்திருக்கும்போது, உலகமானது நம்மைப் பெருமையினால் கறைப்படுத்துகிறது.

இதுதான் நம்மை கடவுளிடமும் மற்றவர்களிடமும் அன்புசெலுத்த விடாமல் தடுக்கிறது. நமக்குப் பொருள்களின் மீது அடங்கா ஆசை. அவை நம்மிடம் இல்லாவிட்டால் அதை அடைய பேராசைப்படுகிறோம். அதை நாம் பெற்றிருக்கும்போது, அதைக் குறித்து ஓயாமல் பேசுவதை விரும்புகிறோம். இவற்றிலெல்லாம் கடவுள் எங்கே இருக்கிறார்? நம்முடைய பொருள்களுக்காக நாம் ஒருவேளை அவருக்கு நன்றி செலுத்துகிறவர்களாகக் கூட இருக்கலாம். அது பொருள்களின் மீதுள்ள நன்றியை வெளிப்படுத்துமேயொழிய, அதைக் கொடுத்தவராகிய கடவுளின் மீதுள்ள நன்றியை அல்ல.

இதற்கு தீர்வு: மறுபிறப்பு

கடவுளையும் மற்றவர்களையும் நேசிப்பது நமக்கு பாரமானவைகளாக இருப்பதற்குக் காரணம் நமது ஆவலெல்லாம் உலகப் பொருட்களின் மீது இருப்பதுதான். அதில் நல்லவைகளும் இருக்கலாம், தீயவைகளும் இருக்கலாம். அது பொருள் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அல்லது உறவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அவை எதுவாக இருந்தாலும், அவை கடவுள் அல்ல. கடவுளுக்கு மேலாக நாம் அவைகளில் நாட்டம் கொள்ளும்போது அவை விக்கிரகமாகின்றன. கடவுளிடமும் மற்றவர்களிடமும் செலுத்த வேண்டிய அன்பை அவை எடுத்துக் கொள்கின்றன. உலகமெங்கிலும் உள்ள பிரச்சனையே அதுதான். அதற்குத் தீர்வுதான் என்ன?

1 யோவா 5:3-4ல் யோவான் இதற்கு பதிலளிக்கிறார். 4ஆம் வசனத்தில் அவர் கூறுவதாவது, கடவுளிலும் மற்றவர்களிலும் அன்பு செலுத்துவது நமக்கு பாரமானதாக இருக்காது (வச3) என்பதற்குக் காரணம் நாம் மறுபடியும் பிறந்திருப்பதால்தான். இந்த மறுபிறப்பானது உலகத்தை ஜெயித்திருக்கிறது: "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்." அவர் என்ன சொல்கிறார் என்பது இப்போது நமக்கு விளங்குகிறது. உலகத்தின்மீது வைக்கின்ற ஆசையின் வேரை மறுபிறப்பானது துண்டித்துப் போடுகிறது. உலகத்தை ஜெயிப்பதென்றால், மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையுமாகிய இவைகளெல்லாம் இனி நம்மை ஆள்வதில்லை என்பதே. அதனுடைய அதிகாரமானது முறிக்கப்பட்டுவிட்டது.

மூன்றாம் இணைப்பு: இயேசுவில் விசுவாசம்

இது எப்படி நடக்கிறது? அதைத்தான் 4ஆம் வசனத்தின் பின்பகுதி நமக்கு கூறுகிறது (சங்கிலியின் மூன்றாம் இணைப்பு): "நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." மறுபிறப்பானது மாம்சத்தின் இச்சையையும் கண்களின் இச்சையையும் உலகத்தின் பெருமையையும் ஜெயங்கொள்ளக் காரணம் அது விசுவாசத்தை உருவாக்குகிறது.

மறுபிறப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக கடவுளால் தீர்மானமாக செய்யப்படுகிற கிரியை என்னவென்றால் அவர் உருவாக்குகிற புதிய ஜீவன், இயேசுக்கிறிஸ்துவின் மேன்மையை மற்ற எல்லா காரியங்களைக் காட்டிலும் உயர்ந்ததாகக் காண்கிறது. இயேசுவை எல்லாவற்றிலும் மேன்மையாகக் காண்கிற இந்த ஆவிக்குரிய பார்வையானது, ஒரு கனப்பொழுதும் தாமதியாமல், இயேசுக்கிறிஸ்துவைப் பொக்கிஷமாக ஏற்றுக் கொள்கிறது. அதுதான் விசுவாசம்: நமது கண்கள் திறக்கப்பட்டதால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தியத்தையும் அழகையும் தகுதியையும் அவர் இருக்கிறவண்ணமாகவே கண்டு ஏற்றுக் கொள்வது.

விசுவாசமானது இயேசுவை மேலானவராகக் காண்கிறது

ஆகவேதான் விசுவாசம் உலகை ஜெயிக்கிறது. உலகமானது அதனுடைய ஆசை இச்சைகளில் நம்மை அடிமைகளாக்கி வைத்திருந்தது. ஆனால் மறுபிறப்பின் காரணமாக நம் கண்கள் திறக்கப்பட்டுவிட்டதால் இயேசுவை சிறந்தவராக காணுகின்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மாம்சத்தின் இச்சைகளைக் காட்டிலும் இயேசுவே சிறந்தவர், கண்களின் இச்சையைக் காட்டிலும் இயேசு மேலானவர், நம்மை பேராசையிலும் பெருமையிலும் நெருக்குகின்ற ஐசுவரியத்தைக் காட்டிலும் இயேசு மேலானவர் (மாற் 4:19).

இப்போது நாம் நமது ஆரம்ப கேள்வியான உயிர்ப்பிக்கப்படுதலுக்கும், இயேசுவில் வைக்கும் விசுவாசத்திற்கும், பிறரை நேசித்தலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பதிலளிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். அதைக் குறித்தும், அது ஏன் மிகவும் முக்கியமானது என்பதைக் குறித்தும் நாம் இப்போது பதிலளிக்கலாம்.

விசுவாசம் ஏற்பட மறுபிறப்பே காரணம்

முதலாவது நாம் கூறுவது, மறுபிறப்பே விசுவாசம் உருவாக காரணமாயிருக்கிறது. இது 1யோவா 5:1ல் தெளிவாகக் காணப்படுகிறது: "இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்." கடவுளால் பிறப்பிக்கப்படுவது நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் நம்மைப் பிறப்பிக்கிறார் என்பதற்கு உடனடி நிருபணம் நம்முடைய விசுவாசமே.

விசுவாசத்தின் முதற்கனி பிறரை நேசிப்பதாகும்

இரண்டாவதாக நாம் சொல்லக்கூடியது, மக்களை நேசிப்பதே விசுவாசத்தின் முதற்கனியாகும். ஆகவேதான் யோவான் 4ஆம் வசனத்தில் எடுத்துரைக்கிறார்: நம்முடைய விசுவாசமே உலகத்தை - அதாவது, பிறரை நேசிப்பதற்கு தடையாக இருப்பவற்றை - ஜெயிக்கிற ஜெயம்.

வரிசைக்கிரமம்: மறுபிறப்பு, விசுவாசம், அன்பு

இவை நடைபெறுகின்ற வரிசைக்கிரமத்தைக் காணலாம்: 1) மறுபிறப்பு, 2) இயேசுவில் விசுவாசம், 3) கடவுளுடைய கற்பனையாகிய பிறரை நேசித்தல் போன்றவற்றை பாரமானதாக எண்ணாமல் செய்தல். கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துகிறார். கிறிஸ்துவை யாரென்று உணர்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியஜீவனை மறுபிறப்பு ஏற்படுத்துகிறது. அப்படி ஏற்றுக் கொள்வதால் உலகத்தின் மீதிருக்கும் ஆசைகள் வேரறுக்கப்பட்டு, பிறர் மீது அன்பு செலுத்தும்படியாக நாம் விடுவிக்கப்படுகிறோம்.

இந்த வரிசைக்கிரமம் ஏன் முக்கியமானது?

இரட்சிக்கும் விசுவாசத்தையும் பிறரில் அன்பு செலுத்துவதையும் குறித்து நீங்கள் குழப்பம் அடையாமல் இருப்பதற்கு அது மிகவும் அவசியம். கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தையும் மக்களிடத்தில் அன்பு செலுத்துவதையும் ஒன்றாகப் பார்க்கிற சிலர் இன்றைக்கு உண்டு. அவர்கள் கூறுவது: விசுவாசம் என்றால் உண்மையோடிருத்தல் என்று அர்த்தம், அப்படியாக உண்மையோடிருத்தலில் பிறரை நேசிப்பதும் அடங்கும். ஆகவே கிறிஸ்துவில் விசுவாசம் என்பதையும் பிறரை நேசித்தலையும் வேறுபடுத்திப் பார்க்க வழியில்லை என்பார்கள்.

விசுவாசமும் அன்பும்: பிரிக்க முடியாதது ஆனால் வெவ்வெறானவை

அதை மாபெரும் தவறாகக் கருதுகிறேன். ஏன் என்பதை விளக்க முயற்சிக்கிறேன். கிறிஸ்துவில் விசுவாசமும், மக்களை நேசித்தலும் பிரிக்க முடியாதவை. ஆனால் அவை வேறுபடுத்திப் பார்க்க முடியாதவையல்ல. இவை இரண்டும் வேறுபட்டதாக இருப்பதால்தான் யோவான் கடவுளுடைய எதிர்பார்ப்புகள் யாவையும் விசுவாசம் அன்பு ஆகிய இவ்விரண்டிற்குள்ளாக அடக்குகிறார். 1யோவா 3:23: "நாம் அவருடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது (ஒருமை). இந்த புத்தகத்திலுள்ள ஜீவனைக் குறித்த பரிசோதனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இதில் அடங்கிவிடுகிறது: இயேசுவின் மேல் விசுவாசமாயிருந்து, ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்.

இவை ஏற்பட்டிருக்கிற வரிசைப்பிரகாரம் மிகவும் முக்கியமானது. அது முக்கியமென்பதற்குக் காரணம்: நீங்கள் அன்பு செலுத்த வேண்டிய பிரகாரமாக அன்பு செலுத்தாமலிருக்கிற ஒரு நேரம் வரப்போகிறது. அன்பு செலுத்துதல் மறுபிறப்பின் அடையாளமென்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அப்போது உங்கள் இருதயமே உங்களை குற்றப்படுத்தினால் என்ன செய்வீர்கள்? இரட்சிப்பின் நிச்சயத்தைக் குறித்து அவ்வேளையிலே நீங்கள் எப்படி போராடப் போகிறீர்கள்?

பிறரை நேசிப்பதில் இயேசு ஒருபோதும் தவறவேயில்லை

உங்கள் நம்பிக்கையைக் குறித்து அவ்வேளையிலே போராடுவதற்கு சரியான வழியொன்றிருக்கிறது. கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திற்கும் மக்களை நேசிப்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அது சார்ந்துள்ளது. 1யோவா 2:1ஐ படியுங்கள்: "என் பிள்ளைகளே நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் (அதாவது பிறரை நேசிக்க வேண்டியபிரகாரமாக நேசிக்காமல் போனானென்றால்), நீதிபரராயிருக்கிற இயேசுக்கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்". நீங்கள் தோல்வியடைந்தாலும் - நீங்கள் பாவம் செய்தாலும், நீங்கள் அன்பு செலுத்த வேண்டிய பிரகாரமாக செலுத்தாமற் போனாலும் - பிதாவுக்கு முன்பாக உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் நிற்கிறார். இந்த பரிந்து பேசுகிறவர் "நீதியுள்ளவர்." அதாவது அவர் பூரணர். (ரோம 8:33-34)

நீங்கள் பாவம் செய்திருந்தாலும் அவர் பாவம் செய்யவில்லை. நீங்கள் அன்புகூர வேண்டிய விதத்தில் அன்புகூராமலிருந்தாலும், அவர் ஒருபோதும் அன்புகூர வேண்டிய விதத்தில் தவறவேயில்லை. இவர்தான் பிதாவுக்கு முன்பாக உங்களுக்காக பரிந்து பேசுகிறவராக நிற்கிறார் - உங்களுக்கு விரோதமாக அல்ல, உங்களுக்காக பரிந்து பேசுகிறவராக. உள்ளபடி சொல்வதானால், உங்களுடைய தோல்வியின் காரணமாகவே அவர் அதைச் செய்கிறார். "ஒருவன் பாவஞ்செய்வானானால், நீதிபரராயிருக்கிறவர் . . . நமக்காக பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

அவருடைய நீதி பாவமற்ற தன்மையுமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நாம் செய்யத் தவறியவைகளை அவர் பூரணமாக செய்திருக்கிறார். விசுவாசத்தினால் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறபடியினால் இது நமக்கும் வந்து பலிக்கிறது. விசுவாசம் அவரை ஏற்றுக் கொள்கையில் கடவுளுக்கு முன்பாக நம் தேவைகள் யாவற்றிற்கும் அவரே போதுமானவராக இருக்கிறார். அவரே நமது நீதி, நமது பூரணம், நமது பரிபூரண அன்பு. பரிசுத்தமுள்ள கடவுளுக்கு முன்பாக இதுவே நமது நம்பிக்கையின் அடித்தளமாயிருக்கிறது.

இயேசுவை விசுவாசித்தல் : பிறரை நேசித்தலின் வேர்

இயேசுவை விசுவாசித்தல், பிறரை நேசித்தலில் இருந்து வேறுபட்டது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. அவரை விசுவாசித்தலே வேராயிருக்கிறது. இயேசுவை விசுவாசித்தல் என்றால் அவரை ஏற்றுக் கொள்வதாகும். பிறரை நேசித்தல் என்பது அவர்களிடம் செல்வதாகும். நாம் இயேசுவை நம்முடைய பூரணராக ஏற்றுக் கொண்டபடியால், நாம் குறைவுடையவர்களாயிருந்தாலும் பிறரிடம் போக இயலுகிறது. இயேசுவை ஏற்றுக் கொள்ளுதலென்றால் அவரே நமது இரட்சிப்பின் ஆதாரம் என்பதாகும். அவரே நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தின் அடித்தளமாவார். அவருடைய நீதியும், அவருடைய பூரணமும், அவருடைய அன்புமே முடிவில் பிதாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படப் போகிறது. மக்களை நேசிப்பதல்ல, இயேசுவில் கொண்டிருக்கும் விசுவாசமே இயேசுவை என்னுடைய நீதிக்கும் பூரணத்திற்கும் அன்புக்கும் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவேதான் நான் இடறினாலும் நம்பிக்கையோடு இருக்க முடிகிறது. கடவுளுக்கு முன் என் நிலை, நான் நடப்பதையோ இடறிவிழுவதையோ பொறுத்து ஏற்றத் தாழ்வுகளோடோ அல்லது சேருதலும் விலகுதலுமாகவோ இருப்பதில்லை. என் நிலை, எனக்காக பரிந்து பேசுகிறவருடைய நீதியினால்தான். பரிபூரணரான என்னுடைய பரிந்துரையாளர் சொல்லுகிறார், "பிதாவே, என்னிமித்தமாக, உம்முடைய ஊழியனாகிய ஜானின் குற்றங்களைப் பாராமல் தயை பாராட்டுவீராக. என்னுடைய குற்றமற்ற அன்பினிமித்தமாக, அவனுடைய குற்றமுள்ள அன்பை பொருட்படுத்தாமல் அவனுக்கு தயை செய்வீராக. பிதாவே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் (1 யோவா 3:20). தன்னுடைய இருதயத்தில் அவன் என்னை வைத்து என் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகவே, நான் அவனுக்கு சொந்தம், என்னுடைய குற்றமற்ற அன்பு அவனுடையதாகும்".

இயேசு, நமது பூரணரான பரிந்துரையாளர்

ஆகவே கடவுள் என்னை கிறிஸ்துவில் பார்க்கிறார். என்னுடைய தோல்வியின் நிமித்தமாக நான் மனமுடைந்து போவதில்லை. நம்பிக்கையற்று ஒடுங்கி விடுவதில்லை. என் நேசரிடம் ( 1யோவா 1:9) என் குற்றங்களை அறிக்கையிடுகிறேன். அவர் சம்பாதித்த பாவமன்னிப்பை நான் பெற்றுக் கொள்கிறேன். அவர் தருகின்ற தேவ கோபாக்கினையை போக்குகிற கிருபாதாரபலியை நான் சார்ந்திருக்கிறேன் (1 யோவா 2:2). என்னுடைய பூரணரான பரிந்துரையாளர் மூலமாக கடவுள் என்னைக் காண்கிறார் என்று என் இருதயத்திற்குக் கூறி நிச்சயப்படுத்திக் கொள்கிறேன் (3:19).

நான் ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கிறேன். நாம் பிறரில் அன்பு செலுத்துவதில் குறையுள்ளவர்களாக இருப்பதுகூட நாம் ஏற்கனவே கிறிஸ்துவில் அவர்களை குறையில்லாமல் அன்பு செலுத்தியவர்களாகக் காணப்படுவதால்தான் என்பதை நீங்களே பார்த்து உணரும்படியாக விரும்பினேன். கடவுளுக்கு முன்பாக நமக்கு இருக்க வேண்டிய பூரணம் அவரில் இருக்கிறது. அது மற்றவர்களை நாம் நேசிப்பதினால் அல்ல, அவரை நம்புவதால் ஏற்படுகிறது. இந்த நிச்சயமே நாம் மற்றவர்களை நேசிப்பதற்கு முக்கிய தேவையாயிருக்கிறது. இந்த நிச்சயத்தை நாம் இழந்து போனோமானால், நாம் எல்லாவற்றையும், மற்றவர்களை நேசிக்கிற வல்லமையையுங்கூட இழந்து போவோம்.