மற்றவர்களின் மறுபிறப்புக்கு உதவும் கடவுளின் மருத்துவச்சிகள் நீங்கள்

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசி பார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாய் இருங்கள்.

கடவுள் அவிசுவாசிகளை மறுபடியும் பிறக்க வைப்பதால் மாத்திரமே, இரட்சிக்கும் விசுவாசம் ஏற்படுகிறது என்கிற வேதாகம உண்மை (1யோவா 5:1), சுவிசேஷம் அறிவிப்பதில் ஒருவேளை நமக்கு அதிகாரத்தையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தரலாம். அல்லது அது நமது சுவிசேஷ பணியில் நமக்கு ஆபத்தானதாகவும் அர்த்தமற்றதாகவும் உற்சாகமின்மையையும் அவிசுவாசிகளிடம் நமது சாட்சியில் மந்த நிலையையும் ஏற்படுத்துவதாகத் தோன்றலாம். அப்படி நமக்கு அது ஆபத்தாகவும் அர்த்தமற்றதாகவும் உற்சாகமின்மையையும் அவிசுவாசிகளின் முன்னிலையில் நமது சாட்சியில் மந்த நிலையை ஏற்படுத்துவதாகத் தோன்றுமானால் நமது உணர்வுகள் சத்தியத்தோடு ஒத்துப் போவதாக இல்லை என்பதை நாம் அறிந்து கொண்டு, நமது எண்ணங்களை மாற்றும்படிக்கு கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும்.

இவ்விதமாகத்தான் நான் எனது அனுதின வாழ்க்கையை நடத்தி வருகிறேன். என்னுடைய உணர்வுகள் கடவுளுடையதைப் போல இல்லை. கடவுள் கடவுள்தான். என்னுடைய உணர்வுகள் சத்தியத்தைப் பிரதிபலிப்பதில்லை. கடவுளின் வார்த்தையே சத்தியத்தை பிரதிபலிக்கிறது. என்னுடைய மனதில் தோன்றுவதே எனது உணர்வுகளில் எதிரொலிக்கிறது. சில நேரங்களில் - பல நேரங்களிலுங்கூட - என்னுடைய உணர்வுகள் சத்தியத்தோடு ஒத்திருப்பதாக இல்லை. அப்படி இருக்கும் வேளைகளில் - ஒவ்வொரு நாளும் சிறிய அளவிலாவது அது ஏற்படுகிறது - என்னுடைய குறைபாடுள்ள உணர்வுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக நான் சத்தியைத்தை வளைத்து விடாமல் இருக்க முயற்சி செய்கிறேன். அதற்கு பதிலாக கடவுளிடம் கெஞ்சுகிறேன்: அவருடைய சத்தியத்தை விளங்கிக் கொள்கிறதான எனது அறிவை சுத்தப்படுத்தும் என்றும், என்னுடைய உணர்வுகளை சத்தியத்தோடு ஒத்துப் போகும் விதமாக மாற்றி அமையும் எனவும் வேண்டுகிறேன்.

இப்படியாகத்தான் நான் என்னுடைய தினசரி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்தப் போராட்டத்தில் நீங்களும் என்னோடுகூட போராடுவீர்கள் என நினைக்கிறேன்.

கடவுளின் சத்தியத்தோடு ஒத்துப் போகும் உணர்வுகள்

ஒருவன் மறுபிறப்படைந்து இரட்சிக்கும் விசுவாசத்தை அடைவதற்கு, கடவுள் அவனில் முதலாவதாக கிரியை செய்தால்தான் அது நிகழும் என்பது போன்ற சில ஆவிக்குரிய சத்தியங்களின் காரணமாக, அவிசுவாசிகளிடம் சாட்சிகூறுவதற்கு இயலாமல் எனது உணர்வுகள் உற்சாகமற்றதாகவோ, அர்த்தமில்லாததாகவோ, ஆர்வம் குன்றியோ, மந்த நிலையாகவோ இருக்குமானால் நான் என் கைகளையும் இருதயத்தையும் கர்த்தருக்கு முன்பாக உயர்த்தி இவ்வாறாக வேண்டிக் கொள்ளுவேன்: "ஓ, கர்த்தாவே, இந்த சத்தியமானது உமது வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனக்கு விடுதலையையும், உற்சாகத்தையும், சந்தோஷத்தையும், சாட்சி கூறுதலில் தைரியத்தையும், சுவிசேஷம் அறிவித்தலில் நம்பிக்கையையும் அளிக்கும்விதமாக நான் இந்த சத்தியத்தை காணும்படி உமது ஆவியானவரின் அருளைத் தாரும்".

சத்தியத்தோடு ஒத்துப்போகாததான இந்த விதமான செத்த உணர்வுகளை ஒழிப்பதற்கு தேவையான வல்லமையை எப்படி பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதை நீங்களும் என்னோடுகூட சேர்ந்து கற்றுக் கொண்டு வருகிறீர்கள் என நினைக்கிறேன். மேலும் உங்களுடைய எண்ணங்கள் சத்தியத்தோடு ஒத்துப் போகும்படியான மாறுதலை அடைவதற்கு எவ்வாறு கடவுளையே பற்றியிருக்க வேண்டும் என்பதையும் கற்று வருகிறீர்கள் என நம்புகிறேன்.

சுவிசேஷத்தை சொல்லுங்கள்

நாம் கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதியிலே ஆரம்பித்த இந்த மறுபடியும் பிறத்தலைக் குறித்த தொடர் தியானம், கடவுளுக்கு சித்தமானால், இன்றைக்கும் அடுத்த வாரமுமாக நான் அளிக்கப் போகிற செய்திகளோடு முடிவடைகிறது. சுவிசேஷம் அறிவித்தலில் நமது கடமையையும் - முக்கியமாக மறுபிறப்பில் கடவுளின் தீர்மானிக்கும் பங்கும், அதை அவர் நடைமுறைப்படுத்துவதில் நமது பங்கும் - ஆகிய இவைகளைக் குறித்து பார்ப்பதோடு இத்தியானங்களை நிறைவுக்குக் கொண்டுவருவது எனக்கும் பரிசுத்தஆவியானவருக்கும்கூட நலமென்று தோன்றுகிறது. சுருக்கமாக சொல்வதானால், அப்படியானால் - நாம் இந்த தியானங்களில் பார்த்தது அவிசுவாசிகள் மறுபிறப்பு அடைவதில் நாம் என்ன உதவி செய்ய வேண்டும் என்பதே.

இதற்கு வேதம் தரும் பதில் சந்தேகத்துக்குரியதாகவோ குழப்பமானதாகவோ இல்லை. அது தரும் பதில்: இயேசுவைக் குறித்த நல்ல செய்தியை ஜனங்களிடம் அன்பு நிறைந்த உள்ளத்தோடும், ஊழியம் செய்யும் ஆவலோடும் கூறுங்கள். இந்த குணாதிசயங்களைக் குறித்து நீங்கள் 2 கொரி 4:5ல் பார்க்கலாம்: "நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்". கிறிஸ்துவை கர்த்தரென்று அறிவிக்கிறோம். எங்களையோ உங்களுக்கு ஊழியக்காரரென்று சொல்லுகிறோம். நொறுங்குண்ட மனதை உடைய ஊழியராயிரமால், இறுமாப்போடு கிறிஸ்துவை அறிவிப்பது சுவிசேஷத்திற்கே எதிரிடையானது. சுவிசேஷத்தையே அறிவியாமல் மௌனமாக இருக்கின்ற நிலை அன்பிற்கே எதிரிடையானது. "நாங்கள் . . கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ . . உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்". ஜனங்கள் மறுபிறப்படைவதற்கு நாம் அதைத்தான் செய்கிறவர்களாய் இருக்கிறோம். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை ஜனங்களிடம் அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் சொல்லுகிறோம்.

நாம் மறுபடியும் 1பேது 1:22 முதல் பார்ப்போம். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அன்பான இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் செய்கின்ற நமது பங்கிற்கும் மறுபிறப்பிற்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை அதில் பார்ப்போம்.

கடவுளின் வார்த்தையின் மூலமாக மறுபிறப்பு

இந்த வசனபகுதிக்கு இரண்டு தியானங்களை ஒதுக்கியுள்ளோம். அது அவ்வளவு முக்கியமானது. ஆனால் இப்போது நமது கேள்வி வித்தியாசமானது: அவிசுவாசிகளுக்கு நாம் சாட்சி கொடுப்பதற்கும் மறுபிறப்பைப் பற்றிய உண்மைக்கும் என்ன சம்பந்தம்? நாம் ஏற்கனவே பார்த்தவைகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். இதைக் குறித்த எல்லா கருத்துக்களையும் முடிவுரையாக பார்க்க விரும்பினால், நீங்கள் அந்த பழைய செய்திகளை திரும்பவும் கவனிக்க வேண்டும்.

வச 22: "நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாயிருக்கும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்". வச 22ல் காண்கிற ஆத்தும சுத்தம்தான் மறுபிறப்பில் ஏற்படுகிறது. சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் என்பது சுவிசேஷத்தில் விசுவாசம் வைப்பதாகும். சத்தியம் என்பது கிறிஸ்துவின் சுவிசேஷம், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதென்பது இயேசுவில் விசுவாசம் வைத்தல். மாயமற்ற சகோதர சிநேகமாவது மறுபிறப்பினால் ஏற்படுகின்ற கனியாகும். ஆகவே பேதுரு சொல்லுகிறார்: இப்படி உங்களுக்குள் ஏற்பட்டிருக்கிறபடியால், "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்". வேறுவிதமாக சொல்வதானால், நீங்கள் சுவிசேஷத்தை விசுவாசித்ததால் மறுபடியும் பிறந்திருக்கிறபடியால் அன்பு செலுத்தும்படியாக மாற்றப்பட்டிருக்கிறீர்கள். அதை வெளிப்படுத்துங்கள். ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்.

23ஆம் வசனத்திலும் மறுபிறப்பின் வார்த்தைகளையே உபயோகிக்கிறார்: "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே." மறுபிறப்பிற்கும், மற்றவர்களின் மறுபிறப்பில் உங்களுடைய பங்கு என்னவென்பதற்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கப்படுத்துகிற மிக முக்கியமான வசனம் இது. இதில் காணும் முக்கியமான பாகம்: "என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே".

இன்னொரு விதமாகச் சொல்வோமானால், ஆவிக்குரிய மரணமடைந்தவர்களாயும், அவிசுவாச இருதயத்தைக் கொண்டவர்களாயும் இருப்பவர்களிடம் புதிய ஜீவனை உருவாக்கும் விதையாக தேவன் உபயோகிப்பது தேவ வசனமாகிய விதையையே. "அழிவுள்ள வித்தினாலே அல்ல, (அதாவது), என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே." இதைக் காட்டிலும் முக்கியமான வசனங்கள் வேதத்தில் அதிகமாக இல்லை. அதில் அடங்கியுள்ள காரியங்களை நீங்கள் விளங்கிக் கொண்டீர்களானால் அது உங்கள் வாழ்க்கையையே வேறுவிதமாக மாற்றிவிடும்.

கர்த்தருடைய வசனம் : சுவிசேஷம்

இதன் கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் கர்த்தருடைய வார்த்தை என்றால் என்னவென்று நிச்சயித்துக் கொள்ளவேண்டும். கர்த்தருடைய வார்த்தை என்பதை பல விதங்களில் விளங்கிக் கொள்ளலாம். உலகம் தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்டது (எபி 11:3). இயேசுக்கிறிஸ்து கர்த்தருடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டார் (யோவா 1:1, 14). பத்துக் கட்டளைகள் தேவனுடைய வார்த்தையாகக் குறிப்பிடப்பட்டது (மாற் 7:13). இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் தேவவசனமென்று அழைக்கப்பட்டது (ரோம 9:6).

ஆனால், இங்கே 23ஆம் வசனத்தில் பேதுரு, நாம் தேவவசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டோம் என்பதை விசேஷித்த அர்த்தத்தோடு கூறுகிறார். முதலாவது அதை அவர் ஜீவனுள்ளதும் என்றென்றைக்கும் நிலைத்திருப்பதும் என்று குறிப்பிடுகிறார். "என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய . . . வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே." தேவனுடைய வசனம் ஜீவனுள்ளதாயிருக்கிறது, ஏனென்றால் அது புதிய ஜீவனை அளிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. மேலும் தேவவசனம் என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாயிருக்கிறது, ஏனென்றால் அதன் மூலமாக உருவாகின்ற ஜீவனானது என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.

அடுத்தபடியாக பேதுரு 24-25ஆம் வசனங்களில் ஏசா 40:6-8 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டுகிறார். கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து தாம் கூறுவதற்கு ஆதரவாக இருக்கும் பொருட்டு அதை உபயோகிக்கிறார்: "மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்." கர்த்தருடைய வசனம் பூவைப் போன்றதோ புல்லைப் போன்றதோ அல்ல. அவை சிறிது நேரத்திற்கு மாத்திரம் மலர்ந்து செழித்து மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. பிறகு அவை இல்லாமல் போய்விடுகிறது. அவர்களில் இருந்த ஜீவன் அழிந்து விடுகிறது. ஆனால் கர்த்தருடைய வசனமோ அப்படியல்ல. அது உருவாக்குகின்ற ஜீவன் என்றென்றைக்கும் தொடர்ந்து இருக்கின்றது. ஏனென்றால் ஜீவனை உருவாக்குவதும், ஜீவனைப் பாதுகாப்பதுமான வசனம் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கிறது.

அடுத்தபடியாக, "கர்த்தருடைய வசனம்" என்று தான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை பேதுரு தெளிவாகக் கூறுகிறார். அதை 25ஆம் வசனத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடுகிறார், "உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே." உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்ட வசனம் - அதுதான் அழிவில்லாத வித்து. அதுதான் நீங்கள் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டதற்குக் காரணமாயிருந்து ஜீவனுள்ளதும் என்றென்றைக்கும் நிற்கிறதுமான தேவவசனம். ஆகவே, மரித்த, அவிசுவாசமுள்ள இருதயத்தை கடவுள் உயிர்ப்பிப்பது சுவிசேஷமாகிய தேவவசனத்தின் மூலமாகவே.

உலகத்திலுள்ள மிகச் சிறந்த செய்தி

அந்த செய்தி இதுதான்: தேவகுமாரனாகிய கிறிஸ்து, நமது இடத்தில் மரித்தார் - நமக்கு பதிலாளாக மரித்தார் - நமது பாவங்களுக்குரிய கிரயத்தை செலுத்துவதற்காக மரித்தார், குற்றமில்லாத நீதியை சம்பாதிப்பதற்காக மரித்தார், கடவுளுடைய எல்லா கோபங்களையும் சகித்து அதை அகற்றும்படியாக மரித்தார், நாம் நித்திய நித்தியமாக அவருடைய சமூகத்தில் சந்தோஷத்துடன் தரித்திருப்பதற்காக மரணத்தை வென்று உயிரோடே எழுந்தார் - இவை யாவுமே நமக்கு இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதால் மாத்திரம் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. இதுதான் நற்செய்தி. இன்றைக்கு, இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கும் இதுதான் உலகத்திலுள்ள செய்திகளிலேயே மிகவும் சிறந்த செய்தியாக இருக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் (அருகாமையிலும் தூரத்திலும்) இச்செய்தியை அறியாமல் இருக்கிறார்கள்.

ஆகவே செய்தி இதுதான் - நீங்கள் மிகவும் நேசிக்கிற யாராவது இருந்தால் (அல்லது ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தால்), அவர்கள் ஜீவனுள்ள நம்பிக்கைக்குள்ளாக பிறக்கும்படி நீங்கள் விரும்பினால் முக்கியமானது இதுதான்: யாராவது மறுபடியும் பிறக்க வேண்டுமானால், அது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சுவிசேஷமாகிய கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதின் மூலமாக நிகழும். அவர்கள், "என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய . . . சுவிசேஷத்தின்" மூலமாக மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுவார்கள்.

  • சுவிசேஷமாகிய தேவவசனத்தின் மூலமாக தேவன் மறுபடியும் பிறக்கச் செய்கிறார்.
  • சுவிசேஷத்தை நீங்கள் மற்றவர்களுக்கு சொல்வதால் தேவன் அவர்களில் மறுபிறப்பை ஏற்படுத்துகிறார்.
  • கிறிஸ்து யார், அவர் தமது சிலுவை மரணத்தின் மூலமாகவும், உயிர்த்தெழுதலின் மூலமாகவும் என்ன செய்தார் என்கிற செய்திகளின் மூலமாக கடவுள் ஜனங்களை மறுபடியும் பிறக்கச் செய்கிறார்.
  • நீங்கள் சுவிசேஷத்தை அறிவிப்பதன் மூலமாக கடவுள் மரித்துப் போயிருக்கும் இருதயங்களுக்கு புதுஜீவனை அளிக்கிறார்.

இரட்சிக்கும் சுவிசேஷ விதை

பழைய கேள்விக்கே திரும்புவோம்: அவிசுவாசிகள் மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? பதில்: கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை மக்களுக்கு அன்பான இருதயத்தோடும், பணிவிடை புரியும் வாழ்வோடும் சொல்லுங்கள். இந்த அன்பான இருதயத்தைக் குறித்தும் பணிவிடையின் ஆவியைக் குறித்தும் நாம் பிறகு விவரமாகப் பேசலாம். ஆனால் இப்போதைக்கு ஒரு அருமையான உண்மையின்மீது சற்று கவனத்தைத் திருப்புங்கள்: இரட்சிக்கின்ற விதை எதுவென்றால் அது தேவனுடைய வசனமே - பிரசங்கிக்கப்படுகிற சுவிசேஷமே. விசுவாசிகள் தங்கள் வாயினால் அவிசுவாசிகளிடம் கூறுகின்ற சுவிசேஷ வசனமே புதியஜீவனை உருவாக்குகின்ற விதையாக இருக்கிறது. குருடர்களின் கண்களைத் திறந்து பார்வையளிக்கிற அறுவைசிகிச்சை கருவியாக நீங்கள் விவரித்து சொல்லுகின்ற சுவிசேஷ வார்த்தைகள் இருக்கின்றது.

இது நமக்கு வெறுமனே நம்பிக்கையை மாத்திரம் அளிப்பதாயிராமல் நம்முள் ஒரு தீவிரமான ஆர்வமாக எழும்ப வேண்டுமல்லவா? இத்தகைய ஆர்வத்தை நமக்குள் மூட்டுவதற்கு இந்த செய்தியில் தேவன் தமது வார்த்தையை உபயோகிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். ஆகவே அவருடைய வார்த்தையையே இன்னும் கவனித்துப் பாருங்கள். யாக் 1:18: "அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." கர்த்தரின் சகோதரனாகிய யாக்கோபின் வார்த்தைகளிலே இதைக் காண்கிறோம்: "சத்திய வசனத்தினாலே." அவ்விதமாகத்தான் அவர் நம்மை முதற்பலனாக்கினார். இது மறுபிறப்பைக் குறிக்கிறது.

அவருடைய மகிமையை அறிவித்தல்

நாம் தியானிக்க எடுத்துக் கொண்டிருக்கிற ("என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான . . வித்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்") 1பேது 1:23-25 வசனங்களுக்கு பிற்பாடு ஒன்பது வசனங்கள் தள்ளி வருகின்ற 2:9ல் பேதுரு சொல்கிறார்: "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்தஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்."

கடவுள் உங்களை இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு சுவிசேஷமாகிய தேவவசனத்தினாலே வரவழைத்திருக்கிறார் (1:23-25). இந்த வெளிச்சத்திலிருந்து கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? எதற்காக நாம் இங்கே இருக்கிறோம்? இங்கிருப்பதின் ஒரு முக்கியமான காரணம்: "உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கே." கிறிஸ்துவின் மகிமையை அறிவிப்பதினால் நமது சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு கிறிஸ்துவின் அன்பும், வல்லமையும், ஞானமும் நிறைந்த வெளிச்சத்தினிடத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

ஏன்? ஏனென்றால் இப்படித்தான் மற்றவர்களும் மறுபிறப்பை அடைகிறார்கள் - இந்த நற்செய்தியை கேட்பதின் மூலமாக. அவர்கள் மறுபிறப்படையும்போது இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வருகிறார்கள். அவ்வெளிச்சத்தில் அவர்கள் கிறிஸ்துவை யாரென்று காண்கிறார்கள். அவர் யாரென்பதை அறிந்து கொள்வதால் அவரைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். அவர் யாரென்பதைக் கண்டுகொண்டதால் அவரை மகிமைப்படுத்துகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவில் மகிழ்ச்சியடைவதைக் கண்டு நமது சந்தோஷமும் நிறைவடைகிறது.

இன்றைக்கு என்ன நடக்கிறது?

இன்றைக்கு இங்கே பெத்லகேம் சபையிலும், இந்நகரிலுள்ள மற்ற சபைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தை அவிசுவாசிகளுக்கு ஆர்வத்தோடு சொல்லும்விதமாக என்ன நடக்கிறது? நாம் சொல்ல வேண்டிய அளவுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில்லை. அதற்குரிய காரணங்களில் ஒன்று என்னவென்றால் அமெரிக்காவில் வாழ்க்கை முறை மிகவும் மகிழ்ச்சிகரமாக, கோலாகலமாக இருப்பதால், நித்தியத்துக்குரிய ஆபத்தையும், ஆவிக்குரிய தேவையையும் குறித்து நாம் பேசாமலிருப்பது மாத்திரமல்ல, அதைக் குறித்து நாமே உணராதவர்களாயும் இருக்கிறோம். உலகமானது மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால், அழிந்து போகிற நிலையிலிருக்கிற மக்களிடம் பேசுவதற்கு நமக்கே தயக்கமாக இருக்கிறது.

ஆகவே ஒருவேளை கர்த்தர் என்ன செய்யக்கூடுமென்றால், எருசலேம் சபைக்கு அவர் செய்ததையே இங்கும் செய்ய நேரிடலாம். அப் 1:8ல் இயேசுக்கிறிஸ்து கூறியிருந்தபடி அவர்கள் உலகமெங்கும் போய் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் சுவிசேஷம் அறிவிக்கும்படியாக செல்லாமல் இருந்தார்கள். ஆகவே ஸ்தேவான் எழும்பி மறுக்கவியலாத ஒரு சாட்சியை (அப் 6:10) அறிவித்தபோது, விரோதிகளால் ஸ்தேவானைக் கொல்ல மாத்திரமே முடிந்தது (அப் 7:60).

அவர்கள் அதைச் செய்தபோது, எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவர் மீதும் உபத்திரவம் உண்டாயிற்று. "அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர் தவிர மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப் போனார்கள்" (அப் 8:1). அதனால் என்ன விளைந்தது? அப் 8:4: "சிதறிப் போனவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்."

உபத்திரவத்திற்கும் துன்பத்திற்கும் இழப்பிற்கும் சிதறடிக்கப்படுதலுக்கும் வீடுகளில்லாத நிலைக்கும் கிடைத்த பலன் ஆச்சரியகரமாக இல்லையா? ஓ, உபத்திரவங்களும் துன்பங்களும் பஞ்சமும் நிர்வாணமும் ஆபத்தும் பட்டயமும் துப்பாக்கியும் தீவிரவாதமும் நம்மை பயப்படுத்தி, முறுமுறுக்கிறவர்களாக ஆக்கிவிடாமல், நாம் சுவிசேஷத்தையும் காணாமற்போன மக்களையும் நேசிக்கும்விதமாக, தைரியத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக மாற்றுமானால் எவ்வளவு நன்மையாயிருக்கும்! இதைத்தான் துன்பத்துக்குள்ளான கிறிஸ்தவர்கள் செய்தார்கள். அவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். ஒருவேளை கடவுள் அதைத்தான் இப்போதும் செய்வார். சில இடங்களில் அவர் அதைத்தான் செய்கிறார் - உபத்திரவப்படுகிற கிறிஸ்தவர்கள் அன்போடும் தைரியத்தோடும் தெளிவோடும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கூறுவதால் ஆயிரக்கணக்கானோர் மறுபிறப்படைந்து கொண்டிருக்கிறார்கள்.

சுவிசேஷத்திற்கு வாஞ்சையாயிருத்தல்

அந்தவிதமான சந்தோஷத்துடனான தைரியத்தை நோக்கி நாம் எப்படி செல்வது? கர்த்தருக்கு சித்தமானால் அதைக் குறித்த சில உறுதியான உதாரணங்களுடன் அடுத்த வாரத்தில் நான் கூறுவேன். இன்றைக்கு இந்த பதிலோடு முடிக்கிறேன்: 1பேது 2:1-3ல் பேதுரு கூறியிருப்பவைகளைக் கடைப்பிடித்தோமானால் நாம் சந்தோஷத்தோடும் தைரியத்தோடும் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக ஆகலாம். அவர் கூறும் புத்திமதியாவது:

இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவர் என்பதை நீங்கள் ருசி பார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

"புதிதாய் பிறந்த குழந்தை" என்று அவர் இங்கே குறிப்பிடுவதால் அங்கு இருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் முதிர்ச்சியற்றவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் முதிர்ச்சியின்மையை இங்கே குறிப்பிடவில்லை. மறுபிறப்படைந்தவர்கள் யாவரும் எதை விரும்புவார்கள் என்பதையே அவர் இங்கு விவரிக்கிறார். குழந்தைகள் பாலை வாஞ்சிப்பது போல நாமும் அதை வாஞ்சிக்க வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். களங்கமில்லாத ஞானப்பால் என்று திருவசனத்தை விவரிக்கிறார்.

ஆகவே கருத்து இதுதான்: என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே நீங்கள் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அவர் இப்போதுதான் கூறினார். அடுத்தபடியாக அவர் சொல்வது: குழந்தைகள் பாலை வாஞ்சிப்பது போலவே நீங்கள் தினமும் தேவவசனத்தை வாஞ்சியுங்கள் என்கிறார். மடிந்து போகாமல் ஜீவனோடு இருக்கும்படியாக குழந்தையானது அநுதினமும் பாலை வாஞ்சிப்பது போல நீங்களும் தேவ வசனத்தின் தேவையை தினமும் உணருங்கள் என்கிறார். "மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத் 4:4). பேதுரு சொல்லுகிறார்: நீங்கள் துர்க்குணத்தினின்றும் கபடத்திலிருந்தும் வஞ்சகத்திலிருந்தும் பொறாமையிலிருந்தும் புறங்கூறுதலிலிருந்தும் விடுதலையடையப் போகிறீர்களென்றால் - சுவிசேஷத்தை அன்பான இருதயத்தோடும் பணிவிடை செய்கின்ற ஆவியோடும் சொல்லப் போகிறீர்களென்றால் - குழந்தையானது பாலுக்காக பசி தாகத்தோடு இருப்பதுபோல் நீங்களும் கர்த்தருடைய வசனத்தின்மேல் பசியும் தாகமுமாயிருக்க வேண்டும்.

நீங்கள் ருசி பார்த்ததுண்டா?

நீங்கள் ஏன் இதை செய்ய விரும்ப வேண்டும்? வச 3: "கர்த்தர் தயையுள்ளவர் என்பதை நீங்கள் ருசி பார்த்ததுண்டானால்" . . இந்த வாஞ்சை உங்களுக்கு ஏற்படும். தனிப்பட்டவிதத்தில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு இதுவே முக்கியமான காரியமாயிருக்கிறது: நீங்கள் கர்த்தருடைய வசனத்தில் - அதிலும் முக்கியமாக சுவிசேஷத்தில் - கர்த்தர் நல்லவர் என்பதை ருசிபார்த்திருக்கிறீர்களா? ருசித்திருக்கிறீர்களா? இல்லையென்றால்: அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால்: அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறீர்களா? உங்கள் இருதயம் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் கிறிஸ்துவை விரும்பப்படத்தக்கவராக உணர்ந்திருக்கிறதா?

இதில்தான் நாம் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டும். கர்த்தர் நல்லவர் என்பதை நாம் ருசித்து உணர்ந்தவர்களாயிருந்தால், கடவுளின் வல்லமையுள்ள உயிர்ப்பிக்கும் விதையை நாம் பரப்பத் தொடங்குவோம். கர்த்தரே நமது சந்தோஷம். அவரே நமது பொக்கிஷம். கர்த்தரே நமக்கு மாம்சமும் பாலும் தண்ணீரும் திராட்சைரசமுமாயிருக்கிறார். அவர் நமது நாவின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, நம்மை தைரியமாக சுவிசேஷம் அறிவிக்கக் கூடியவர்களாக மாற்றுவாராக. ஏனென்றால் நாம் தேவ வசனமாகிய திராட்சரசத்தை அருந்தியவர்களாகவும் கடவுளின் தயவை ருசித்தவர்களாகவும் இருக்கிறோமே.