என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்

ஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுக்கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், இங்கே பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்து கொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிகாலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.

மரித்தவர்களாயும், குற்றமுள்ளவர்களாயும், மறுபிறப்பின்மேல் அதிகாரமற்றவர்களாயும் இருக்கும் நிலை

தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணவேண்டுமானால், நாம் அனைவரும் மறுபிறப்பை அனுபவிக்க வேண்டும் என்று இயேசுக்கிறிஸ்து கூறியிருக்கிறார் (யோவா 3:3). ஆனால், மறுபிறப்பை அடைவதென்பது நம் கையில் இல்லை என்கிற உண்மை நமக்குக் கலக்கத்தை தருவதாயிருக்கிறது. ஒரு குழந்தையானது எப்படி தன்னுடைய பிறப்பை தானாகவே நிர்ணயித்துக் கொள்ள முடியாதோ அதுபோலவே, நமது மறுபிறப்பை நாமாகவே ஏற்படுத்திக் கொள்ள முடியாது. இன்னும் திட்டமாகச் சொல்வோமானால், இறந்துபோன மனிதன் எப்படி தானாகவே உயிர் பெற்றுக் கொள்ள முடியாதோ அதுபோலவே ஆவிக்குரிய உயிரடைதலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியாது. நாம் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருப்பதே நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதற்குக் காரணமாயிருக்கிறது. நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதற்குக் காரணமும் அதுதான், நாமாகவே ஏன் மறுபிறப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதற்குக் காரணமும் அதுதான். இதன் காரணமாகத்தான் நாம் கடவுளுடைய பரிபூரண கிருபையைக் குறித்துப் பேசுகிறோம். மேலும் இதன்காரணமாகவே நாம் தேவனுடைய பரிபூரண கிருபையை நேசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

பாவத்தைப் பொக்கிஷமாகவும், நம்மைக் குறித்து உயர்வாகவும் எண்ணிக் கொள்வதால், கிறிஸ்துவை பொக்கிஷமாக எண்ணமுடியாத நிலையில் நாம் மறுபிறப்புக்கு முன்னால் இருக்கிறோம். வேறுவிதமாகச் சொல்வோமானால் பாவநிலையின் உச்சகட்டமாக தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறவர்களாக இருந்ததால், இயேசுக்கிறிஸ்துவை உயர்த்திப் பார்க்கவேண்டியதான தாழ்மை நம்மிடத்தில் காணப்படவில்லை. இது நமது குற்றம். நம்மிடத்திலுள்ள பெரும் தீமையான காரியம் இது. ஆவிக்குரிய கடினநிலைக்கும், மரித்த நிலைக்கும் நாமே காரணம். கிறிஸ்துவின் மகிமையையும் மேன்மையையும் உணராதவர்களாக அவருக்கு விரோதமாக இருக்கிற நமது நிலையை நம் மனசாட்சியே மன்னிக்காது.

நெருப்பு உண்டாகிற போது உஷ்ணமும் தோன்றும்

நமக்குள் ஏதோ ஒன்று நிகழ வேண்டும். நாம் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார் (யோவா 3:3). பரிசுத்தஆவியானவர் நம் இருதயத்தில் அற்புதம் செய்து, நமக்கு புதிய ஆவிக்குரிய ஜீவனைக் கொடுக்க வேண்டும். நாம் மரித்தவர்களாயிருந்தோம். நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. சத்தியத்தின் மீது மேலான நாட்டம் கொண்டு கேட்கத்தக்கதான காதுகள் நமக்கு வேண்டும். கிறிஸ்துவும் அவருடைய இரட்சிப்பின் வழிகளும்தான் உன்னதமானவை என்பதைக் காணத்தக்கதான கண்கள் நமக்கு வேண்டும். தேவனுடைய வசனத்தை ஏற்றுக் கொள்ளத்தக்கதான இளகிய மனது நமக்குத் தேவை. சுருக்கமாகச் சொல்வோமானால், நமக்கு ஒரு புதிய வாழ்க்கை தேவை. நாம் மறுபடியும் பிறக்க வேண்டும்.

இது எப்படி நடக்கிறதென்று நாம் முந்தைய ஆறு தியானங்களில் பார்த்தோம். பரிசுத்தஆவியானவர், விசுவாசத்தின் மூலமாக, நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு இணைத்து, நமக்கு புதிய ஜீவனை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அளிக்கிறார். மறுபிறப்பில் நாம் பெற்றுக் கொள்கிறதான புதியஜீவனானது, விசுவாசம் இல்லாமலோ, இயேசுவோடு இணைப்பு இல்லாமலோ ஏற்படுவதல்ல. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராகவும், மிகுந்த அன்புள்ளவராகவும், பரிபூரண கிருபையுள்ளவராகவும் நம்மை உயிர்ப்பிக்க சித்தங்கொள்ளும்போது, அவர் நம்மை கிறிஸ்துவோடு இணைப்பதின் மூலமாகத்தான் நமக்கு புதியஜீவனைத் தருகிறார். "தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது" (1யோவா 5:11). இந்த புதியஜீவன், இயேசுவில் விசுவாசத்தை ஏற்படுத்துகிறதை நாம் முதலாவதாக உணருகிறோம். இதில் கால இடைவெளி இல்லை. நாம் மறுபடியும் பிறக்கும்போது அவரை விசுவாசிக்கிறோம். நாம் அவரை விசுவாசிக்கத் தொடங்கும் போது, நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுகிறோம். நெருப்பு உண்டாகும்போது அங்கே உஷ்ணம் இருக்கிறது. மறுபிறப்பு ஏற்படும்போது அங்கே விசுவாசமும் இருக்கிறது.

நாம் எப்படி மறுபடியும் பிறக்கிறோம்?

நாம் இதுவரை ஆறு தியானங்களில் இரண்டு கேள்விகளை தியானித்தோம்: மறுபிறப்பு என்றால் என்ன? ஏன் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும்? இப்போது நாம் மூன்றாவது கேள்விக்கு செல்லப் போகிறோம். நாம் எப்படி மறுபடியும் பிறக்கிறோம்? அல்லது நாம் மறுபிறப்பு அடையும் வழி என்ன? இந்த கேள்வியை நான் கடவுளின் பார்வையிலிருந்தும் நமது பார்வையிலிருந்தும் கேட்கிறேன். கடவுள் அதை எவ்விதத்தில் நடைபெறச் செய்கிறார்? நாம் அதை எவ்விதத்தில் பெறுகிறோம்? கடவுள் எப்படி நம்மை உயிர்ப்பிக்கிறார்? நாம் அதில் எவ்விதத்தில் பங்கு கொள்கிறோம்?

மறுபிறப்பில் கடவுளின் பங்கும் நமது பங்கும்

நாம் ஆவிக்குரியபிரகாரமாக மரித்த நிலையில் இருப்பதால் மறுபிறப்பில் நமக்கு எந்தப் பங்கும் இல்லையென்று நான் கூறப் போவதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், உயிர்த்தெழுதலில் மரித்தவர்களுக்கும் பங்கிருக்கிறதே. இதற்கு நான் ஒரு உதாரணத்தை காட்டுகிறேன். லாசருவின் கல்லறைக்கு முன்னால் இயேசு நின்ற போது, அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. தனக்குத் தானே உயிரை வருவித்துக் கொள்ள லாசருவால் இயலாது. அவன் செத்தவனாயிருந்தான். லாசரு அல்ல, இயேசுவே புதிய உயிரைக் கொடுத்தார். யோவா 11:43ல், மரித்துப் போன லாசருவிடம் இயேசுக்கிறிஸ்து, "லாசருவே வெளியே வா" என்று கூறுகிறார். அடுத்த வசனம் கூறுகிறது: "மரித்தவன் வெளியே வந்தான்". இப்படியாக லாசரு, உயிர்த்தெழுதலில் தனது பங்கை நிறைவேற்றினான். அவன் வெளியே வந்தான். கிறிஸ்து அதற்குக் காரணராயிருந்தார். லாசரு அதை செய்தான். கிறிஸ்து உயிர்த்தெழச் செய்தார். லாசரு உயிர்த்தெழுந்தான். எழுந்திருக்குமாறு இயேசுக்கிறிஸ்து லாசருவிடம் கட்டளையிட்ட அந்நேரமே, லாசரு எழுந்திருந்தான். தேவன் நமக்கு புதியஜீவனைத் தருகின்ற அந்த வேளையிலேயே நாம் வாழத் தொடங்கிவிடுகிறோம்.

ஆகவேதான், நாம் எப்படி மறுபடியும் பிறக்கிறோம் அல்லது நாம் மறுபடியும் பிறக்கின்ற வழிதான் என்ன என்ற கேள்வியை எழுப்பும்போது, நான் ஒன்றல்ல, இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். அதாவது, நமது மறுபிறப்பில் கடவுள் என்ன செய்கிறார்? நமது மறுபிறப்பில் கடவுளின் பங்கு என்ன? என்பது ஒரு கேள்வி. அடுத்தபடியாக, நமது மறுபிறப்பில் நாம் என்ன செய்கிறோம்? மறுபிறப்பில் நமது பங்கு என்ன? இதில் முதலாவது கேள்வியை நான் இன்று உங்களிடம் கேட்கிறேன்: நமது மறுபிறப்பில் கடவுளின் செயல்பாடு என்ன? கடவுள் நம்மை எவ்விதத்தில் உயிர்ப்பிக்கிறார்?

கடவுள் நம்மை எவ்வாறு உயிர்ப்பிக்கிறார்?

1பேது 1:3-25 வசனங்களில் இதற்கான விடை மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • முதலாவது விடையை 4ஆம் வசனத்தில் காணலாம் : "இயேசுக்கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே . . .நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்".

  • இரண்டாவதாக, 23ஆம் வசனத்திலே காண்கிறபடி, "என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே" கடவுள் நம்மை உயிர்ப்பிக்கிறார் அல்லது அழைக்கிறார் (15ஆம் வசனத்தில் காண்கிறோம்).

  • மூன்றாவதாக, 18ஆம் வசனம் கூறுகிறது, முன்னோர்களால் பாரம்பரியமாக அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று மீட்கப்பட்டீர்களென்று.

அழியாத சுதந்திரம்

இதைக் குறித்து நாம் இன்னும் விவரமாகப் பார்ப்பதற்கு முன்பாக, கடவுள் நம்மை மறுபடியும் பிறக்க வைக்கும் வழிமுறையில், மேற்கூறிய மூன்று காரியங்களும் எவ்விதத்தில் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறதென்று பார்ப்போம். கடவுளின் இந்த மூன்று செயல்பாடுகளிலும் அழியாத தன்மை என்பது காணப்படுகிறது. வச 3-4: "நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர், இயேசுக்கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்". இதில் நாம் பார்க்கிற கருத்து என்னவென்றால், உயிர்ப்பித்தலின் மூலமாக கடவுள் நமக்கு புதியஜீவனை மட்டுமல்லாமல், நித்தியமான ஜீவனையும் அருளுகிறார் என்பதே. 4ஆம் வசனத்தில் "ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி . . நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" என்பதைக் காண்கிறோம். புதியஜீவனைக் குறித்த நம்பிக்கையே இதில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருக்கிறது. அது ஜீவனுள்ளது - அது செத்துப் போகாது. அழியாத சுதந்திரத்தை அது சுதந்தரித்துக் கொள்ளும். இதுவே முக்கியமான விஷயம். மறுபிறப்பில் நாம் அடைகிற புதியஜீவனானது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். நாம் ஒருபோதும் மரிப்பதில்லை.

அழிவற்ற விலைமதிப்பு

18-19 வசனங்களில் அதே கருத்து முக்கியத்துவப்படுத்தப்பட்டிருப்பதை கவனியுங்கள்: "உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே". நமது ஜீவன் மீட்கப்படுவதற்காக இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் கிரயமாக செலுத்தப்பட்டது. மீட்கப்படுகிறதற்காக செலுத்தப்படுகிற குறைந்த மதிப்புள்ளதாகிய வெள்ளி, பொன் ஆகியவற்றுடன் முற்றிலும் வித்தியாசமானதாக இந்த இரத்தம் ஒப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி, பொன் ஆகியவைகள் ஏன் குறைவாக மதிப்பிடப்படுகிறதென்றால் அவை "அழிந்து போகும்" இயல்புடையவை என்பதால்தான். வச 18: "அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும்".

ஆகவே, இயேசுக்கிறிஸ்து தமது இரத்தத்தைக் கிரயமாகி செலுத்தி நமக்கு சம்பாதித்துக் கொடுத்த புதிய ஜீவனானது மறுபடியுமாக சிறைப்பட்டுப் போகக்கூடிய ஆபத்தில் இல்லை. ஏனென்றால் அவர் செலுத்தியுள்ள கிரயமானது அழிந்து போகக்கூடியதல்ல. இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தின் மதிப்பு நித்தியத்துக்கும் உரியது. ஆகவே அதன் மதிப்பு அழிந்து போவதேயில்லை. அதற்கு அழியாத மதிப்பு உண்டு. இவ்விதமாகத்தான் நாம் மீட்கப்படுகிறோம். மறுபிறப்பில் நாம் பெற்றுக் கொள்கிற புதியஜீவனுடைய விலை இப்பேர்பட்டது. அவ்விலையை நமக்காக இயேசு செலுத்திவிட்டார்.

அழியாத வித்து

மூன்றாவதாக, 23ஆம் வசனத்திலும் அழியாத என்கிற அதே கருத்து தொனிப்பதை கவனியுங்கள்: "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்". அடுத்தபடியாக அவர் ஏசா 40:6-8 வசனங்களை 24, 25ஆம் வசனங்களில் குறிப்பிடுகிறார்: "மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே". ஆகவே 4ஆம் வசனத்தில் காணப்படுகிற உயிர்த்தெழுதலும், 18ஆம் வசனத்தில் காணப்படுகிற மீட்பின் கிரயமும் போல இதுவும் அழிவில்லாத தன்மையை உடையதென்று சுட்டிக் காண்பிக்கிறது. தேவவசனத்தின் மூலமாக விதைக்கப்படுகிற விதை அழிவில்லாதது. ஆகவே, அது பிறப்பிக்கிறதான ஜீவனும் என்றென்றைக்கும் நிற்கிறதும் அழிவில்லாததுமாய் இருக்கிறது.

புதியபிறப்பின் அழிவற்ற வாழ்க்கை

புதியபிறப்பைக் குறித்து பேதுரு மொத்தத்தில் கூறுகின்ற கருத்தை நாம் கவனிக்கிறோம். ஒரு ஜீவனுள்ள நம்பிக்கைக்குள்ளாக நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்பதையே அவர் வலியுறுத்துகிறார். வேறுவிதமாகக் கூறுவோமானால், மறுபிறப்பில் தேவன் நம்மில் உருவாக்குகின்ற ஜீவனானது நித்தியமானதும் அழிவில்லாததுமாயிருக்கிறது. மறுபிறப்பில் நமக்குள் ஏற்படுகின்றதான புதிய சுபாவம் அழிந்து போக முடியாது. அது என்றென்றைக்குமாக நிலைத்திருக்கும். இதைத்தான் புதியபிறப்பின் முக்கிய கருத்தாக பேதுரு சுட்டிக் காண்பிக்கிறார். மறுபிறப்பின் மூலமாக ஏற்படுவது ஒருபோதும் அழிந்து போகாது. உபத்திரவப்படுதலைக் குறித்து பேதுரு தமது நிருபத்தில் எழுதிக் கொண்டு போகிறார். அதன் காரணமாகவே பேதுரு இக்கருத்தை வலியுறுத்துவதாக நான் நினைக்கிறேன். உபத்திரவங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அவைகள் உங்கள் உயிரை எடுத்துப் போட்டாலும், புதியபிறப்பின் மூலமாக நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறதான ஜீவனை அழித்துப் போட முடியாது. அது அழிவில்லாதது.

கடவுள் செய்திருக்கும் இந்த மூன்று கிரியைகளை நாம் மீண்டும் ஒரு முறையாக பார்த்து, அவை எவ்விதத்தில் புதியபிறப்புக்கு வழிவகுக்கின்றன என்பதைக் காண்போம். அவைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். அவை ஏற்பட்டிருந்த வரிசையின்படியே அவைகளை நோக்குவோம்: 1) இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கடவுள் நம்மை மீட்டுக் கொண்டார். 2) கடவுள் இயேசுக்கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்தார். 3) கடவுள் நம்மை அழைத்தார்.

1) இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கடவுள் நம்மை மீட்டுக் கொண்டார்

வச 18-18: "உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே". புதிய பிறப்பு சம்பந்தமாக, இதில் நாம் காண்கிற முக்கிய கருத்து, பாவத்திற்கு அடிமைகளாயிருந்த நம்மை மீட்பதற்கு ஒரு கிரயம் செலுத்தப்படாவிட்டால் அழிவில்லாத புதியஜீவனை அடைய முடியாது என்பதே. நம்மை அழித்துப் போடக்கூடியதான சிந்தைகளுக்கும், உணர்வுகளுக்கும், செயல்களுக்கும் அடிமைப்பட்டவர்களாக, சிறைப்பட்டவர்களாகவே நாம் இருந்தோம் என்பதை இவ்வசனம் நமக்கு அறிவிக்கிறது. தேவனால் கேடான சிந்தைக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவர்களாக தேவகோபாக்கினைக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். (ரோம 1: 21, 24, 26, 28). பாவத்தின் இந்த அடிமைத்தனத்திலிருந்து நாம் மீட்கப்படாமல் இருந்தோமானால் நாம் அழிந்திருப்போம். கடவுள் தமது கோபாக்கினையைத் தீர்த்துக் கொள்ளும் மீட்பின் கிரயமாக கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார் (ரோம 8:3, கலாத் 3:13).

நமது மறுபிறப்பிற்கு இதுவே உறுதியான அஸ்திவாரமாக இருக்கிறது. நம்மைக் கிறிஸ்துவோடு இணைத்து, நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்தி, நமக்கு புதியஜீவனைக் கொடுப்பதற்கு கடவுளின் குமாரனாகிய கிறிஸ்துவின் ஜீவனோடு சம்பந்தமுடைய ஏதாவதொரு சரித்திரபூர்வமான நிகழ்வு இவ்வுலகில் ஏற்பட வேண்டியதாக இருந்தது. "மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்" என்று மாற் 10:45ல் இயேசுக்கிறிஸ்து குறிப்பிடுகிறார். இதற்காகவே கிறிஸ்து சரித்திரபூர்வமாக இவ்வுலகில் அவதரித்தார். மனுஷகுமாரன், "அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார்". எந்த மறுபிறப்பு நிகழ்வதற்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது. மறுபிறப்பானது வெறும் புதியவாழ்க்கையாக இல்லாமல் நித்தியவாழ்க்கையாகவும் இருக்கிறபடியால், அதற்கு செலுத்தப்படும் விலைக்கிரயமும் அழிவில்லாததாக இருக்க வேண்டும். அது வெள்ளியோ பொன்னோ அல்ல, அழிவற்ற ஒரு கிரயமாயிருக்க வேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்திற்கு அழிவில்லாத மதிப்பு இருக்கிறது. ஆகவே மீட்பின் வல்லமையை அது ஒருபோதும் இழந்து போகாது. அதன் மூலமாக பெறுகின்ற ஜீவனும் அழியாதது. அழியாததான நித்திய ஜீவனைத் தரக்கூடியதான மீட்பின் கிரயத்தை செலுத்தியதின் மூலமாக கடவுள் புதியஜீவனை அளிக்கிறார்.

2) கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழப் பண்ணினார்

நாம் நித்தியஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியான மறுபிறப்பை அடைவதற்கு, இயேசுக்கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுவதான இரண்டாவது சரித்திரபூர்வமான சம்பவம் இவ்வுலகில் நிகழ வேண்டியதாயிருந்தது. 1பேது 1:3-5 - "நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர், இயேசுக்கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். . . .தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்த சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது". "இயேசுக்கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே . . . நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்". ஆகவே, கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துவதின் இரண்டாவது செயல், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததின் மூலமாக என்பதை அறிகிறோம்.

பரிசுத்தஆவியானவர் நமது மரித்துப் போன இருதயத்தை எடுத்து, விசுவாசத்தின் மூலமாக, கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் உருவாகும்படியாக, அவரோடு இணைக்கும்போது, மறுபிறப்பு ஏற்படுகிறது. கிறிஸ்துவோடு இணைவதின் மூலமாக நமக்கு புதியஜீவன் ஏற்பட வேண்டுமானால், கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. மனிதனாக அவதரித்த கிறிஸ்துவிடம் இணைப்புப் பெறுவதின் மூலமாகத்தான் மறுபிறப்பு நிகழ்கிறதேயழிய, தேவனுடைய குமாரனாக மாத்திரம் இருந்த கிறிஸ்துவின் மூலமாக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறுபிறப்பில் நாம் பெற்றுக் கொள்கிற புதியஜீவனானது, சரித்திரபூர்வமாக வந்து உலகில் அவதரித்த இயேசுக்கிறிஸ்துவின் ஜீவனாகும். ஆகவே அவர் மரித்தோரிலிருந்து எழாவிட்டால், புதியஜீவனுக்கு வழியில்லை. எனவே மறுபிறப்பை அடைவதற்கு தேவன் செய்திருக்கும் இரண்டாவது கிரியை, இயேசுக்கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழச் செய்ததே.

3) கடவுள் நம்மை அழைக்கிறார்

மறுபிறப்பை அடைந்து கொள்ள மூன்றாவது வழிமுறையாக தேவன் செய்வது நம்மை அழைப்பதே. வச 14-15: "நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்". நம்மில் ஏதோ நிகழ்ந்திருக்கிறபடியினால், நாம் முன்பைக் காட்டிலும் இப்போது வேறுவிதமாக நடக்க வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். வச 15 - "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்". தேவன் இவ்விதமாக நம்மை அழைப்பது நமது மறுபிறப்பிற்கு வழிவகுக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவர் நம்மை மீட்டுக் கொண்டார். அவர் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டதான ஜீவனைப் பெற்று வாழும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார்.

(நாம் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தால்), கடவுள் இவ்விதமாக அழைத்தபோது, நமக்கு என்ன நடந்தது என்பதை விளங்கிக் கொள்வதற்கு, எல்லாருக்கும் கொடுக்கப்படும் பொதுவான சுவிசேஷ அழைப்பிலிருந்து இந்த அழைப்பை வேறுபடுத்தி பார்ப்பது உதவும். வச 23-25ஐப் பாருங்கள்: "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே". கடவுளின் வித்து தேவவசனத்தின் மூலமாக வருகிறது என்பதை கவனியுங்கள். இந்த தேவனுடைய வசனமே "உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது" என்று 25ஆம் வசனம் கூறுகிறது. ஆகவே சுவிசேஷமானது யாவருக்கும் பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால் எல்லோரும் மறுபடியும் பிறப்பதில்லை. பொதுவான அழைப்பு - சுவிசேஷமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டுவருகிற கர்த்தருடைய வசனம் - மரித்த நிலையிலுள்ள அனைவருடைய செவிகளையும் எட்டுகிறது. ஆனால் எல்லோரும் உயிர்பெறுவதில்லை. ஏன் சிலர் மாத்திரம் உயிர்பெற்று விசுவாசத்தை அடைகிறார்கள்? ஏன் சில குருடர் மாத்திரம் பார்வையடைகிறார்கள்? சில செவிடருக்கு மாத்திரம் கேட்கிறது?

சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிகப்படுகிறது, வித்து சிலரிடம் மாத்திரம் விதைக்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டில் இதற்கு பல கோணங்களில் விடையளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை இங்கு 23ஆம் வசனத்தில் காணலாம்: ஒருசிலர் "தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே" மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். சுவிசேஷமானது சகலருக்கும் அறிவிக்கப்படுகிறது. அழிவில்லாத வித்து சிலரிடம் விதைக்கப்படுகிறது. இது ஒரு பதில். இன்னொரு விதமாக சொல்வதானால் சிலரே அழைக்கப்படுகிறார்கள். சுவிசேஷம் அறிவிக்கப்படும்போது எல்லாரையும் வெளிப்படையாக அழைப்பது போன்ற பொதுவான அழைப்பு அல்ல இது. மாறாக, உள்ளான பலனை ஏற்படுத்துகின்றதான, கடவுளின் சிருஷ்டிப்பின் வார்த்தைகளடங்கிய ஜெய தொனி. லாசருவின் கல்லறையில் இயேசு அழைத்தது போன்ற அழைப்பு. மரித்தவனிடம் அவர் பேசுகிறார்: "லாசருவே வெளியே வா!" (யோவா 11:43). அந்த அழைப்பு, கட்டளையிட்டதை உருவாக்கும்.

இதுவே, சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்படுகையில் வெளிப்படையான பொதுவான அழைப்பாக அனைவரும் கேட்பதற்கும், உள்ளான பலனைக் கொடுக்கிறதான அழைப்புக்கும் உள்ள வித்தியாசம். உள்ளான அழைப்பானது, கடவுளின் சர்வவல்ல சிருஷ்டிப்பின் குரலும், தடுத்து நிறுத்த முடியாததுமாகும். அவர் கட்டளையிட்டதை அது உருவாக்கும். கடவுள் செவியிடமோ அல்லது மனதிடமோ மாத்திரம் பேசுவதில்லை. அவர் இருதயத்தோடு பேசுகிறார். அவருடைய உள்ளான இருதய-அழைப்பு, குருட்டாட்டமுள்ள இருதயத்தை பார்வையடையச் செய்கிறது. செவிடான இருதயத்தை கேட்கும்படியாக செய்கிறது. கிறிஸ்துவே எல்லாவற்றிலும் உயர்ந்தவர் என்கிற உண்மையை உணரும்படியாக செய்கிறது. மிகச் சிறந்த பொக்கிஷமாகிய கிறிஸ்துவை அந்த இருதயமானது விரும்பிப் பற்றிக் கொள்கிறது. தேவவசனமாகிய சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் நம்மை அழைக்கும்போது இதைத்தான் அவர் நடப்பிக்கிறார் (1பேது 2:9, 5:10 வசனங்களைப் பாருங்கள்).

கிறிஸ்துவை அவர் இருக்கிறவண்ணமாகப் பார்த்தல்

உள்ளான பலனைக் கொடுக்கிறதான கடவுளின் விசேஷித்த அழைப்பின் வல்லமையை தெளிவாக விளக்குகிற வசனம் 1கொரி 1:22-24 என நான் நினைக்கிறேன். "யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபலனும் தேவஞானமுமாயிருக்கிறார்". யூதர், கிரேக்கர் ஆகிய அனைவருமே சுவிசேஷத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களில் சில யூதரும் சில கிரேக்கரும் அந்த சுவிசேஷத்தின் மூலமாக சில அனுபவங்களுக்குட்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவை குறித்து இடறலாகவோ, சுவிசேஷத்தை பைத்தியமாகவோ எண்ணுவதை நிறுத்திவிட்டார்கள். அதற்கு பதிலாக அவர்கள் கிறிஸ்துவை "தேவபலனாகவும் தேவஞானமாகவும்" காணத் தொடங்கிவிட்டார்கள். என்ன ஆயிற்று? "எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபலனும் தேவஞானமுமாயிருக்கிறார்". வல்லமையுள்ளதும், சிருஷ்டிக்கிறதுமான கடவுளின் அழைப்பு அவர்களுடைய கண்களைத் திறந்தது. கிறிஸ்துவின் பெலனையும் ஞானத்தையும் உணர்ந்து கொள்ளும்விதமாக அவர்கள் கிறிஸ்துவைக் காணத் தொடங்குகிறார்கள்.

நம்மை மறுபடியும் பிறக்கச் செய்வதில் தேவனுடைய மூன்றாவது கிரியையாக இது இருக்கிறது. 1) இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு அவர் பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்தும் தேவகோபத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார். நாம் நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளும்படியாக பாவிகளாகிய நமது கடனை அவர் தீர்த்தார். 2) அவர் இயேசுக்கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். அவரோடு நம்மை இணைப்பதின் மூலமாக நமக்கு அழியாத நித்தியஜீவனைத் தரும்படியாக அப்படி செய்தார். 3) சுவிசேஷத்தின் மூலமாக அவர் நம்மை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து நித்தியஜீவனுக்கும் அழைத்து, நமக்கு பார்க்கக் கூடிய கண்களையும், கேட்கக் கூடிய காதுகளையும் கொடுத்தார். நாம் அவரை விசுவாசித்தோம். பொக்கிஷமாகிய கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம்.

மறுபடியும் பிறந்தவர்களுக்கு சகலமும் நன்மையே

ஓ! தங்களுக்குள் நிகழ்ந்ததின் மகிமையை ஒவ்வொரு விசுவாசியும் உணர்ந்து கொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்! கடவுள் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதும், உங்களுக்குள்ளாக என்ன செய்திருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்துவின் அழிவில்லாத இரத்தத்தினாலே நீங்கள் மீட்கப்பட்டிருக்கிறீர்கள். ஜீவனுக்கேதுவான நித்திய நம்பிக்கையை அடையும்படியாக நீங்கள் கிறிஸ்துவோடுகூட உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். லாசருவைப் போல மரணத்திலிருந்து உயிரோடு எழும்பும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவை விலையேறப்பெற்ற பொக்கிஷமாக நீங்கள் காணுகிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அடுத்தமுறை வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கும்போது, நாம் இதுவரை பார்த்த காரணங்களினால், ரோம8:28ல் புதிய வல்லமையைக் காண்பீர்கள்: "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்". நீங்கள் அழைக்கப்பட்டவர்களாயிருந்தால், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தால் சகலமும் உங்களுக்கு நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சகலமும்!! நீங்கள் இதுவரைக்கும் மறுபடியும் பிறவாதவர்களாயிருந்தால், அவருடைய அழைப்பைக் கேளுங்கள்!. கிறிஸ்துவின் இந்த சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் உங்களை அழைப்பதைக் கேளுங்கள். கேட்டு விசுவாசியுங்கள். கிறிஸ்துவை யாரென்று அறிந்து நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். ஆமேன்.