அவர்கள் பார்வையடையும்படிக்கு உங்களை அனுப்புகிறேன்

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனசாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப் பண்ணுகிறோம். எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

இன்றைக்கு நாம் மறுபடியும் பிறத்தலைக் குறித்த தொடர்தியானத்தை முடிக்கப் போகிறோம் - அதாவது, மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதைக் குறித்ததான வேதபூர்வமான போதனையை. இதை மைதானத்தில், சாலையில், வாகனத்தில், டன் பிரதர்ஸ் வளாகத்தில், வீட்டின் பின்புறத்தில், பள்ளிக்கூடத்தில், வேலை செய்யுமிடத்தில், சாப்பிடும்போது, தொலைபேசியில் பேசும்போது, Facebookஇல் My Spaceஇல் எழுதும்போது, டெக்ஸ்ட் செய்யும்போது, ஸ்கைப் செய்யும்போது, விமானத்தில் சகபிரயாணிகளோடு பேசும்போது, சாதாரணமாக மற்றவர்களுடன் பேசுகின்ற நூறு பேச்சுகளில் நாம் இதை முடிவுக்குக் கொண்டு வருவோம். ஆவியில் மரித்தவர்கள் மறுபிறப்பு அடைந்து, இயேசுக்கிறிஸ்துவுக்கு மகிமை தரும்படி தனிப்பட்ட விதத்தில் சுவிசேஷத்தை அறிவித்து இதை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

சுவிசேஷத்தின் மூலமாக மறுபிறப்பு

கடந்த வாரத்தில் நாம் 1பேது 1:23ல் உள்ள "என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனத்தினாலே ஜெநிப்பிக்கப்பட்டீர்கள்" என்கிற வார்த்தையைக் கொண்டு மறுபிறப்பின் சத்தியத்தை மீண்டுமாக உறுதிப்படுத்தினோம் - அதைத் தொடர்ந்து 25ஆம் வசனமாகிய "உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே" என்பதையும் விளக்கப்படுத்தினோம். வேறுவிதமாகச் சொல்வதானால், சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துகிறார் - கடவுள் தமது குமாரனை பாவமற்ற வாழ்க்கை வாழும்படியாக இவ்வுலகில் அனுப்பினார். பாவிகளுக்காக அவரை மரிக்கும்படி செய்தார். நமது பாவத்தை அவர் சுமந்து, கடவுளின் கோபத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, நமக்கு நீதியை அளித்து, நமது கிரியைகள் எதுவும் இல்லாமல், விசுவாசத்தின் மூலமாக மட்டும் நித்திய சந்தோஷத்தை அனுபவிக்கும்படி அளித்திருக்கிறார் என்பதே அந்த நல்ல செய்தியாகும்.

ஜனங்கள் இந்த செய்தியைக் கேட்பதால் மாத்திரமே மறுபடியும் பிறக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்காமல் மறுபடியும் பிறக்க இயலாது. "விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்" (ரோம 10:17). எனவே, மற்றவர்கள் மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்போமானால், அதற்குரிய பதில் இதுதான்: இந்த நற்செய்தியை அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

நான் இன்றைக்கு என்ன செய்யப் போகிறேனென்றால் இன்னும் சில புதிய வசனங்களைக் கொடுத்து இந்த கருத்தை முக்கியமாக காட்டுவதோடு உங்களுக்கு பல நடைமுறைக் குறிப்புகளையும் அளித்து உற்சாகப்படுத்தவிருக்கிறேன்.

கிறிஸ்து இல்லாமல் நமது நிலை

இன்றைக்கு நாம் தியானிக்க எடுத்துக் கொண்டிருக்கிற 2கொரி 4ஐ என்னோடுகூட சேர்ந்து பாருங்கள். கிறிஸ்து இல்லாத ஜனங்களின் நிலை என்னவென்பதை முதலில் பாருங்கள். வச4: "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." கிறிஸ்துவை விசுவாசிக்காத ஜனங்கள் குருடராயிருக்கிறார்கள். கிறிஸ்துவை அவர்கள் அதிக மதிப்புடையவராக எண்ணுவதில்லை, ஆகவே அவர்கள் அவரைத் தங்களுடைய பொக்கிஷமாக ஏற்றுக் கொள்வதில்லை, அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவதுமில்லை. அவர்களுடைய கண்களைத் திறந்து, அவர்களுக்கு ஜீவனை அளிப்பதான ஒரு கிரியை தேவனிடமிருந்து நடைபெற வேண்டியதாக இருக்கிறது. அப்போதுதான் அவர்கள் கிறிஸ்துவை இரட்சகராகவும் கர்த்தராகவும் தங்கள் வாழ்வின் அரும் பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்வார்கள். கடவுள் செய்கிறதான அந்தக் கிரியைதான் மறுபிறப்பு எனப்படும்.

தீர்வு: மறுபிறப்பு

குருடாகவும் அழிகிறவர்களாகவும் இருக்கிற இந்த நிலைக்கு தீர்வுதான் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். வச 6: "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." மறுபிறப்பு என்கிற வார்த்தை இங்கே உபயோகப்படுத்தப்படாவிட்டாலும் இந்த பகுதி அதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. ஆதியிலே வெளிச்சத்தை சிருஷ்டித்த தேவன், அதே காரியத்தை மனித இருதயத்திலும் சிருஷ்டிக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் அது வெளிப்பிரகாரமான, தோன்றும் ஒளியல்ல. அது, "இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி." அல்லது அது 4ஆம் வசனம் கூறுவது போல, "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி."

கிறிஸ்துவின் உண்மையையும் அழகையும் மதிப்பையும் மனிதன் இதயத்தில் உணரும்படியாக அவர் செய்கிறார் - கிறிஸ்துவின் மகிமையை, அவர் யாரென்பதை நாம் அறிந்து கொண்டோமானால், அவரை அவர் இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக் கொள்கிறோம். அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12). அதுதான் நமது பிள்ளைகளுக்கும் - அவர்களுக்கு ஆறு வயதாயிருந்தாலும், பதினாறு வயதாயிருந்தாலும், இருபத்தியாறு வயதாயிருந்தாலும் - ஏற்படும்படி நாம் விரும்புகிறோம். நமது பெற்றோருக்கும், நமது வாழ்க்கைத் துணைக்கும், நமது அயல்வீட்டாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும் பள்ளித் தோழர்களுக்கும்கூட அது ஏற்படும்படியாக விரும்புகிறோம். அந்த ஒளியானது அவர்கள் இருதயத்தில் பிரகாசிக்கவும் அவர்கள் கிறிஸ்துவைப் பார்க்கும்படியாகவும் அவரை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் விரும்புகிறோம். அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென விரும்புகிறோம்.

மனிதர்களை தேவன் கருவியாக பயன்படுத்துகிறார்: சுவிசேஷம் அறிவிப்பதற்கு

மூன்றாவதாக, இது நடப்பதற்கு தேவன் மனிதர்களை கருவியாக உபயோகிப்பதை கவனியுங்கள். வச 5: "நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்." அன்புடைய இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் கிறிஸ்துவை அறிவிப்பதே பவுலின் வேலையாயிருந்தது. அப்படி அறிவிப்பதே சுவிசேஷம் என்று 3ஆம் வசனத்தில் அழைக்கப்படுகிறது: "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்." ஆவிக்குரிய விதத்தில் குருடராயும் செவிடராயும் இருக்கிறவர்களுக்கு இந்த சுவிசேஷத்தைக் காணவும் கேட்கவும் முடியாது அப்படியானால் "ஜனங்கள் மறுபடியும் பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?" என்கிற நமது கேள்விக்கு பதில்: அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு அறிவியுங்கள்.

"அவர்கள் கண்களைத் திறக்க நான் உங்களை அனுப்புகிறேன்"

உற்சாகமளிக்கும் நடைமுறைக் குறிப்புகளை நான் உங்களுக்கு கொடுப்பதற்கு முன்பாக இன்னுமொரு காரியத்தை உங்களுக்கு விவரிக்கிறேன். அப் 26ல் பவுல், அகிரிப்பா ராஜாவிடம் தனது மனமாற்றத்தையும், ஊழியத்திற்கு தான் அழைக்கப்பட்டதையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தமஸ்குவின் வீதியில் கிறிஸ்துவோடு அவருக்கு ஏற்பட்ட பிரமிக்கத்தக்கதான சந்திப்பைக் குறித்து அவர் வர்ணித்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்து அவருக்கு கொடுத்த கட்டளைகளையும் கூறுகிறார். சுவிசேஷத்தை அறிவிப்பதைக் குறித்ததான நமது பாடத்திற்கு அந்த கட்டளையின் வார்த்தைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகவும் பொருத்தமாயிருக்கின்றன.

இயேசு தன்னிடம் கூறியதை பவுல் 15-17 வசனங்களில் கூறுகிறார்: "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்கு தரிசனமாகிக் காண்பிக்கப் போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரினிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி . . . இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்." சுவிசேஷம் அறிவித்தலில் பவுல் என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து இயேசு என்ன சொல்கிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள். வச 18: "அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்".

2 கொரி 4ன் பிரகாரம், கடவுள் ஜனங்களுக்கு கண்களைக் கொடுக்கும் வரைக்கும் அவர்கள் ஆவிக்குரிய வகையில் குருடர்களாக இருக்கிறார்கள். அதாவது கடவுள் அவர்களை மறுபடியும் பிறப்பிக்கும் வரைக்கும். ஆனால், 18ஆம் வசனத்தில் இயேசு சொல்கிறார், "நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன். இதிலுள்ள கருத்தை விளங்கிக் கொள்வதில் கடினம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவிலுள்ள உண்மையையும் அழகையும் மேன்மையையும் பார்க்கும்படியாக கடவுள் குருடர்களின் கண்களைத் திறக்கிறார். இவ்விதமாய் கண்களைத் திறக்கும்படி அன்புள்ள இருதயத்தோடும் பணிவிடையின் ஆவியோடும் சுவிசேஷத்தை சொல்லும்படி ஜனங்களை கடவுள் அவர்களிடத்திற்கு அனுப்புகிறார்.

இதற்காகத்தான் நானும் அதிகமதிகமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, குருடர்களின் கண்களைத் திறக்கும்படியான ஆர்வமுள்ளவர்களால் இந்த சபையை நிரப்பும். கடவுள் மறுபிறப்பை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தை எங்களில் நிரப்பும். அப் 26:18ல் இயேசுக்கிறிஸ்து பவுலிடம் கூறியதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். அவர்கள் பார்வையடையும்படிக்கு உங்களை அனுப்புகிறேன். உங்களால் முடியாது என்பதற்காக அதைச் செய்வதை நிறுத்தி விடாதீர்கள். ஆம், உங்களால் அதைச் செய்ய முடியாதுதான். உங்களால் மின்சாரத்தையோ, வெளிச்சத்தையோ உருவாக்க முடியாது என்பதற்காக நீங்கள் ஸ்விட்சைப் போடுவதை நிறுத்திவிடுவதில்லையே. உங்களால் உந்துவிசையை ஏற்படுத்த இயலாது என்பதற்காக நீங்கள் கார் என்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதில்லையே. உங்கள் உடலின் செல்களை உங்களால் உருவாக்க முடியாது என்பதற்காக நீங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விடுவதில்லையே. எனவே உங்களால் மறுபிறப்பை ஏற்படுத்த முடியாது என்பதற்காக சுவிசேஷம் அறிவிப்பதை நிறுத்தி விடாதீர்கள். எப்படி தெரியுமா மக்கள் மறுபடியும் பிறக்கிறார்கள் - என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் மூலமாக.

சுவிசேஷம் அறிவிப்பதற்கு தூண்டுதலாக 10 காரியங்கள்

இங்கே நான் தருகிற இந்த விஷயங்கள் சுவிசேஷம் அறிவிப்பதற்கு உங்களை உற்சாகப்படுத்தக்கூடும்.

1) இதை அறியுங்கள்: கடவுள் மண்பாண்டங்களை உபயோகிக்கிறார்

மறுபடியும் 2 கொரி 4: 7 ஐப் பார்க்கலாம். நாம் எப்போதும் வசனத்தை அதன் சந்தர்ப்பசூழ்நிலையோடு சேர்த்துப் பார்ப்பதில்லை. இப்போது அப்படி பார்க்கலாம். 6ஆம் வசனம், வெளிச்சத்தை உண்டாக்கின தேவன் அதேவிதமான வெளிச்சமாகிய "இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி"யை பாவிகளாகிய குருடர்களிடம் உண்டாக்குகிறார் என்று கூறுகிறது. இந்த ஒளியை 4ஆம் வசனம் "கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி" என்று குறிப்பிடுகிறது.

நாம் பார்க்கும் வசனத்தின் சந்தர்ப்பசூழ்நிலை இதுதான். இப்போது 7ஆம் வசனத்தை வாசிப்போம்: "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." இந்த "பொக்கிஷம்." எந்தப் பொக்கிஷம்? "இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி." அல்லது, "கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி." சுருக்கமாகக் கூறினால் ஒளியைக் கொடுக்கும் வல்லமையையுடைய சுவிசேஷத்தை நாம் பெற்றிருக்கிறோம்.

இதில் நம்மை உற்சாகப்படுத்தும் விஷயம் என்னவென்றால்: "இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்". மண்பாண்டம் என்பது நம்மைக் குறிக்கிறது. நாம்தான் அந்த மண்பாண்டம். அதாவது, நமக்குள் இருக்கின்ற பொக்கிஷத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாம் மண்பாண்டம். நாம் தங்கம் அல்ல, சுவிசேஷம்தான் தங்கம். நாம் வெள்ளி அல்ல, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திதான் வெள்ளி. நாம் வெண்கலமல்ல, கிறிஸ்துவின் வல்லமைதான் வெண்கலம்.

பொக்கிஷமாகிய இந்த சுவிசேஷத்தை அறிவிக்கும் விஷயத்தில் உங்களை சராசரியானவராகவோ அல்லது சராசரியைவிடக் குறைந்தவராகவோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்களானால், வலிமையுடையவர்களாக, ஞானமுள்ளவர்களாக போதுமானவர்களாக தங்களைக் காண்கிறவர்களைக் காட்டிலும் உண்மைநிலைக்கு அருகாமையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். நாம் களிமண் பாண்டங்கள் என்பதை உணரும்படியாக பவுல் விரும்புகிறார். நாம் தங்கமோ வெள்ளியோ படிகமோ அல்ல. நாம் எவ்வளவுதான் மேன்மையுள்ளவராகவோ அல்லது சராசரியாகவோ இருந்தாலும் சுவிசேஷத்தை பெற்றிருப்பவர்களாகவும் அதை அறிவிக்கிறவர்களாகவும் இருக்கும் சமயத்தில் நாம் அனைவருமே களிமண் பாண்டங்கள்தான் என்பதை உணரவேண்டும் என்று பவுல் விரும்புகிறார். உள்ளே இருக்கின்ற காரியம் மிகவும் விலையேறப்பெற்றதாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும்போது அதைக் கொண்டிருக்கிற பாத்திரத்தை விசேஷமானதாக நினைப்பது முட்டாள்தனமாகும்.

முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களிலேயே மிகவும் சாதூரிய ஞானமுள்ள பிரசங்கியாகிய தன்னையும் அப்பொல்லோவையும் குறித்து பவுல் எவ்விதமாகக் கூறுகிறார்? "பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (1 கொரி 3: 5-7).

மண்பாண்டமாக இருப்பதன் காரணம் என்ன? மீண்டும் 2 கொரி 4:7க்கு வருவோம்: "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." கடவுளுடைய நோக்கம் என்னவென்றால், சுவிசேஷத்தின் மூலமாக அவரது வல்லமை கனப்படுத்தப்பட வேண்டுமேயொழிய நமது பேர் புகழ் அல்ல. இது எதைக் குறிக்கிறதென்றால், ஒருவேளை நீங்கள் சுவிசேஷம் அறிவித்தலில் உங்களையே குறைவுள்ளவர்களாகவும், சராசரிக்கும் கீழானவர்களாகவும் மதிப்பிடுகிறீர்களென்றால், நீங்கள்தான் கடவுள் தேடிக் கொண்டிருக்கும் சரியான ஆள் - ஞானவானாகவோ, பேச்சுத்திறமையோடோ, வசீகரமான தோற்றத்தோடோ, பலத்தோடோ, கலாச்சார புத்திக்கூர்மையோடோ இல்லாமல், சுவிசேஷமாகிய விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை சொல்லும் சாதாரண மண்பாண்டம். அப்படி அறிவிக்கப்படுகிற சுவிசேஷத்தின் மூலமாக கடவுள் தமது கிரியையை நடத்துவார். அனைத்திற்கும் மேலான வல்லமை அவருடையதே தவிர அது நமக்கு சொந்தமானதல்ல.

சாதாரண கிறிஸ்தவர்களே, நீங்கள் உற்சாகம் அடையுங்கள். உங்களுடைய சாதாரண நிலையிலேயே நீங்கள் உலகத்திலேயே மிகப் பெரும் பணியை செய்யும்படிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்: அதாவது கிறிஸ்துவாகிய பொக்கிஷத்தை வெளிப்படுத்தும்படியாக.

2) பகிர்ந்து கொள்ளக்கூடிய சாதனங்களை பெற்றுக் கொள்ளுங்கள்

இந்த ஆராதனை முடிந்ததும், அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் சுவிசேஷ தகவல் சாதனங்களை சென்று பாருங்கள்: For Your Joy, Quest for Joy, Quest for Joy CD. பெத்லகேம் சபையாகிய நமது சபையின் மூலமாக தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த புத்தகங்களையும் சி.டி.க்களையும் கொண்டு நீங்கள் மக்களுடன் உரையாடலை ஆரம்பிக்கவோ அல்லது அவர்கள் தங்கள் வீடுகளில் சென்று படிக்கக் கொடுக்கும் விதமாகவோ உபயோகித்துக் கொள்ளலாம். வேறு பல நல்ல சாதனங்களும்கூட இதேவிதமாக உபயோகப்படலாம்.

உங்கள் மனதில் இவ்விதமாக சிந்தியுங்கள்: எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கிறிஸ்துவைப் புகழ விரும்புகிறேன். ஜனங்களுக்கு ஜீவனைத் தரும்படியாக கடவுள் உபயோகிக்கின்றதான அந்த சரித்திர சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த சாதனங்களை உங்கள் சட்டைப் பைக்குள்ளும், கைப்பையிலும், பெட்டிக்குள்ளும், காரிலும் வைத்திருங்கள். (ஜான் சேத்தர் கூறுகிறார், அவர் ஒரு பெட்டி நிறைய இம்மாதிரியான சாதனங்களை தமது காருக்குள்ளேயே வைத்திருப்பாராம்). கர்த்தாவே, இன்றைக்கு நான் யாருக்காவது இரட்சிப்பின் ஆசீர்வாதமாக இருக்கும்படி உபயோகித்தருளும் என்று தினமும் ஜெபியுங்கள்.

3) கடவுள் பலவிதமான சக்திகளை உபயோகிப்பார் என்பதை அறிந்திருங்கள்

கடவுள் இரட்சிப்புக்கென்று நியமித்திருக்கிற மனிதனிடம் நீங்கள் பேசிய பிற்பாடு இன்னும்கூட அநேகரைக் கொண்டு மேலும் விவரமாக பேசச் செய்வதற்குரிய ஏற்பாடுகளை கடவுள் திட்டமிட்டு வைத்திருப்பார் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவரிடம் பேசியது வீணாயிற்றென்று என்று நீங்கள் நினைக்கலாம். அது ஒருபோதும் பலனற்றுப் போகாது (1 கொரி 15:58). ஒருவனை அசைக்கும் காரியங்களில் ஒருவேளை உங்களுடைய வார்த்தைகள் முதலாவதாக இருந்திருக்கலாம். அல்லது ஒருவனை விசுவாசத்திற்குள் கொண்டுவரக்கூடிய இறுதி வார்த்தைகளை நீங்கள் பேசியிருந்திருக்கலாம். நீங்கள் சொல்ல வேண்டியவைகளை சொல்லிவிடுங்கள். கிறிஸ்துவைக் குறித்த ஒரு சிறிய வார்த்தையானாலும் பலனில்லாமல் போகாது.

4) தாராளமாகக் கொடுப்பதில் உற்சாகமாயிருங்கள்

தாராளமாகக் கொடுங்கள். கருமியென்று அறியப்படாமல், தாராள மனதுள்ளவராக காணப்படுங்கள். "கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்" என்று இயேசுக்கிறிஸ்து சொல்லியிருக்கிறார் (லூக் 6:35). ஒருவர் நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று தெரிந்தால், புத்தகங்களைக் கொடுப்பதின் மூலமாக அதை நிறைவேற்றுங்கள். ஏழோ, பத்தோ, பதினைந்தோ டாலர் விலையுள்ள புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்தவ நூல்களைக் கொடுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது என்று கூறி, அதைக் குறித்து எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசலாம் என்று சொல்லி வையுங்கள். முன்பின் அறியாதவரிடம் புத்தகங்களைக் கொடுக்க நேர்ந்தால், உங்களுக்கு உபயோகமாக இருந்த அந்த புத்தகத்தை அவருக்கு அளிப்பதற்கு அவர் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டு கொடுங்கள்.

நான் ஏரோப்பிளேனில் பயணம் செய்கையில் பொதுவாக அப்படித்தான் செய்வேன். நான் போதகராக இருப்பதால் கிறிஸ்துவைக் குறித்து சம்பாஷிப்பது சிலவேளைகளில் சுலபமாக ஏற்பட்டுவிடும். சிலவேளைகளில் அப்படி இருக்காது. இவ்விரண்டில் எது நேர்ந்தாலும் நான் அடிக்கடி கூற நேரிடுவது: "நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். கொடுக்கலாமா?" என்று கேட்பேன். வேண்டாம் என்று யாரும் அவ்வளவாக சொன்னதில்லை. அவிசுவாசிகளை முக்கியமாக கருத்தில் கொண்டு நான் இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறேன்: Seeing and Savoring Christ and Fifty Reasons Why Jesus Came to Die. நான் பயணம் செய்யும்போது இந்தப் புத்தகங்களை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். இந்தவிதமான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்: இன்றைக்கு இயேசுவை நான் எவ்விதத்தில் மகிமைப்படுத்தலாம்? கொடுத்தலில் தாரளமாக இருங்கள்.

வேதாகமத்தையும் பிறருக்குக் கொடுங்கள். இன்றைக்கு நான் ஹென்றி மார்டீன் என்கிற ஊழியரின் சுயசரிதையைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியரான B.V. Henryயை குறித்து எழுதப்பட்டிருந்ததாவது: "ஹென்றி தனது 17ஆம் வயதில் விசுவாசத்திற்குள்ளாக வந்தார். ஒரு வயதான பெண்மணி அவருக்கு அளித்திருந்த புதியஏற்பாட்டு நூலை வாசித்ததின் மூலமாக அவர் கிறிஸ்தவ விசுவாசியானார்." (B. V. Henry, Forsaking All for Christ: A Biography of Henry Martyn [London: Chapter Two, 2003], p. 167). வேதாகமத்தையும், வேதத்தின் சில பகுதிகளையும் மற்றவர்களுக்கு தாராளமாக அளியுங்கள்.

5) ஜனங்களை நேசிப்பதில் உற்சாகம் கொள்ளுங்கள்

ஜனங்களை நேசிப்பதும் அவர்கள் மீதில் அக்கறை காண்பிப்பதும் அவர்களுடைய இருதயத்தில் இடம்பிடிக்கும் அருமையான வழியாகும். நாம் உண்மையில் மக்களை நேசிக்காமலும், அவர்களில் அக்கறை கொள்ளாமலும் இருக்கும்போது சுவிசேஷம் சொல்வதில் பெரும் தடை ஏற்படுகிறது. நீங்கள் பேசி உரையாடிக் கொண்டிருக்கிறவர் கடவுளுடைய சிருஷ்டிப்புகளில் ஒருவராக, ஆயிரக்கணக்கான ஆர்வமூட்டும் அனுபவங்களைக் கொண்டவராக இருக்கிறார். அவைகளைக் கேட்பதில் சில பேருக்குத்தான் ஆர்வம் இருக்கும். அவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு ஆர்வத்தைக் கொடுத்ததானால், அவர்களைக் குறித்த கரிசனை உங்களுக்கு இருந்ததானால் அவர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். உங்களுடைய சரித்திரத்தையும் கேட்பதற்கு ஆவலுடையவர்களாவார்கள் - அது கிறிஸ்துவின் சரித்திரம்.

6) இதில் நீங்கள் தனிமையாயில்லை என்பதால் உற்சாகமடையுங்கள்

செவ்வாய் இரவுகளில் டவுன்டௌன் கேம்பஸிலும், வியாழன் இரவுகளில் சவுத் கேம்பஸிலும் சுவிசேஷஅறிவிப்பு பயிற்சியும், முன்நின்று செயலாற்றலும் நடைபெறுகிறதென்பதை அறிந்து உற்சாகமடையுங்கள். இந்த வாரத்தில் ஜஸ்டின் ஹவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைப் படியுங்கள்:

பாஸ்டர் ஜான்,

சுவிசேஷம் அறிவிக்கின்ற சந்தோஷத்தின் மூலமாக கிறிஸ்துவுக்கென்று ஆர்வத்தை மூட்டி அதை பரப்புவதே நமது நோக்கம். நாங்கள் செவ்வாய் இரவுகளில் டவுன்டௌன் என்கிற இடத்தில் மாலை 6.30 மணிக்கு ஆராதனைக்காகவும் கர்த்தருடைய வார்த்தை, ஜெபத்துக்காக கூடி வருகிறோம். வியாழன் மாலை 6.30 மணிக்கு South Site, Building 501, Suite 110 என்கிற இடத்தில் Elijah Layfieldஉடன் கூடி வருகிறோம்.

நாங்கள் புதிய சுவிசேஷ அறிவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை அனுபவமுள்ள சுவிசேஷகர்களோடு சேர்ந்து பணியாற்றும்படி அனுப்புகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்னும் சிறந்த முறையில் எப்படி சொல்லலாம் என்பதைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பமாக இது இருக்கிறது.

பெத்லகேம் சபையிலுள்ள பரிசுத்தவான்களின் வாழ்க்கையின் மூலமாக கிறிஸ்துவின் சுவிசேஷம் எங்கும் பரவ வேண்டுமென்பது எங்களுடைய ஜெபமும் வாஞ்சையுமாகும். கடவுளைக் குறித்ததான வாஞ்சை பெத்லகேம் சபையிலுள்ளவர்களிடம் நிறைவேறும்படிக்கு நாங்கள் இங்கு உதவுகிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்கும், ஆர்வம் கொள்வதற்கும், தைரியமடைவதற்கும், சந்தோஷத்தால் நிறையப்படுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. நம்மில் அநேகர் எழும்பி, நமது இல்லங்களிலும், அருகாமையிலும், நமது பட்டணத்திலும், நமது தேசத்திலும், நமது உலகத்திலும் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படியான ஆர்வத்தையூட்டி அதைப் பரப்புவோமாக.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்: செவ்வாய் 6.30க்கு காமன்ஸ் என்கிற இடத்திலும், வியாழக்கிழமை 6.30க்கு சௌத் சைட் பில்டிங் 501 சூட் 110 என்கிற இடத்திலும் சுவிசேஷத்தின் சந்தோஷத்தின் காரணமாக, இயேசுக்கிறிஸ்துவுக்கான ஆர்வத்தை மூட்டி அதைப் பரப்பும்படியான ஊழியர்கள் எழும்ப வேண்டுமென நாங்கள் ஆயத்ததோடு ஜெபித்துக் கொண்டிருப்போம்.

இயேசுவின் நாம மகிமைக்கென்றும் பரிசுத்தவான்களின் சந்தோஷத்திற்கென்றும்

ஜஸ்டின் ஹவர்

7) சபைக்கு மக்களை அழையுங்கள்

நீங்கள் பழகுகின்ற மக்களை அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாவிட்டாலும் சபைக்கு வருமாறு அழையுங்கள். உண்மையான கிறிஸ்தவர்களைக் குறித்த அறியாமையை, நம் மத்தியில் வந்து நாம் பாடுவதையும் பேசுவதையும் சபையை நாம் எவ்விதமாகக் கருதுகிறோம் என்பதையும் காணும்போது மேற்கொள்ளவார்கள். கடவுளுடைய வசனத்தின் பிரசங்கத்தில் ஒரு பிரத்தியேகமான வல்லமை இருக்கிறது.

அவர்கள் சபைக்கு வருவதற்குத் தயங்கினார்களென்றால், இக்காலங்களில் இணையதள வசதிகள் இருக்கிறதே. http://www.desiringgod.org/ or http://www.hopeingod.org/ ஆகிய இணையதளங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கள் சபையின் போதகர் உங்களை வரவேற்று அளிக்கும் ஐந்துநிமிட செய்தியை இணையதளத்தில் கேட்கும்படியாக உற்சாகப்படுத்தி அவர்களுக்கு அந்த இணையதள முகவரியைக் கொடுங்கள்.

8) சுவிசேஷ செய்திகளால் பட்டணத்தை நிரப்புங்கள்

அப்போஸ்தலர்களை விசாரணைக்குட்படுத்தினபோது பிரதான ஆசாரியன் அவர்களிடம் சொன்னது: "இதோ எருசலேமை உங்கள் போதகத்தினால் நிரப்பினீர்கள்" (அப் 5:28). இந்த இரட்டைப் பட்டணத்திலுள்ள சபைகள் அதைத்தான் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசி, கிறிஸ்துவைக் குறித்ததான புத்தகங்களைக் கொடுத்து, கிறிஸ்துவைக் குறித்து மின் அஞ்சல் செய்து, மக்களை சபைக்கு அழைத்து, கிறிஸ்துவுக்காக மற்றவர்களிடம் தாராள மனப்பான்மையைக் காண்பித்து வந்தார்களானால், யாராவது ஒருவேளை சொல்லுவார்கள்: "அந்தக் கிறிஸ்தவர்கள் இந்த இரட்டைப் பட்டணத்தை தங்கள் போதகத்தினால் நிரப்பினார்கள்" என்று. அப்படியே நடப்பதாக.

9) உங்கள் தாலந்துகளை உபயோகியுங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான வரங்கள் உண்டு, யாரைப் பார்த்தும் நாம் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்கிற உண்மையை அறிந்து உற்சாகங் கொள்ளுங்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு ஊழியனாகத்தான் இருக்க வேண்டும் (கலா 5:13). ஆனால், சிலருக்கு ஊழியஞ்செய்கிறதே வரமாக இருக்கிறது (ரோம 12:7). கிறிஸ்தவர்கள் எல்லாருமே இரக்கமுள்ள இருதயத்தைக் கொண்டுதானிருக்க வேண்டும். ஆனால் சிலரோ இரக்கத்தையே வரமாகப் பெற்றிருக்கிறார்கள் (ரோம 12:8). சகல கிறிஸ்தவர்களும் மற்றவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்துப் பேச வேண்டும் (1 பேது 2:9), ஆனால் சிலருக்கோ தீர்க்கசரிசனம் சொல்லுதலும், போதித்தலும், புத்தி சொல்லுதலும் வரமாக அளிக்கப்பட்டுள்ளது (ரோம 12:6.7). காரியம் என்னவென்றால்: இவ்விஷயத்தில் நாம் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், ஆனால் அதில் சிலர் சில காரியங்களில் விசேஷித்த வரத்தைப் பெற்றிருக்கிறார்கள். நீங்கள் எதில் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டு அதை முழு முயற்சியோடும் செய்யுங்கள். எல்லாவற்றிலும் வளருங்கள். ஆனால் வேறு ஒருவரைப் போல நான் இல்லையே என்று எண்ணி முடங்கிவிடாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கியவர். அவர் உங்களை சுவிசேஷபணிக்கு பயன்படுத்த எண்ணியுள்ளார்.

10) சுவிசேஷப்பணியைக் குறித்த புத்தகங்களை வாசியுங்கள்

கடைசியாக (நீங்கள் இதை பெத்லகேம் சபையில் எதிர்பார்த்திருக்கலாம்), இங்கே புத்தகநிலையத்தில் மூன்று புத்தகங்களை இந்த செய்தி சம்பந்தமாக உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்படிக்குப் பெற்றுச் செல்லலாம் (இணையதளம் மூலமாகவும் பெறலாம்): Will Metzger, Tell the Truth; Mark Dever, The Gospel and Personal Evangelism; J. I. Packer, Evangelism and the Sovereignty of God.

கர்த்தருடைய வார்த்தையை தைரியமாக சொல்லுதல்

அப் 4:31ல் நடந்தது இங்கே பெத்லகேம் சபையில் எங்கள் மத்தியில் நிகழவேண்டுமென்பதை உங்கள் வாஞ்சையாகவும் ஜெபமாகவும் கொள்வீர்களா? "அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய் சொன்னார்கள்" (அப் 4:31).